நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து – அத்தியாயம் 30 சிறு பகுதி
சில்லு பதிக்கச் சொன்னா வல்ல பயகளும் மாட்டேன்னு ஓடிடுவான். இப்போ பாரு அவனவன் வந்து தோசை தின்னுட்டு ஆயுசுக்கும் அவனைக் கொத்தடிமை ஆக்கற சில்லு பதிச்சு விடு பதிச்சு விடுன்னு பிடுங்கி எடுத்து சில்லனாகி விட்டது மொத்த கோகர்மலைநாடே.
இந்தச் சில்லுகளை வைத்து ஒவ்வொரு தேள். கரப்பு, மனிதர், இதர ஜீவராசிகள் பெருந்தேளர்ப் பெருமான், அவரது அன்பு மனையாட்டி பெருந்தேள்ப்பெண்டான நீவிர் என இனி பிரஜைகளை ஒவ்வொருத்தரையும் கவனிப்பில் வைக்க முடியும்.
இது கேட்ட பெண்டு களி கூர்ந்து அப்போ, ஒரு சில்லு என்ன, ஒரு நூறு சில்லு பதிச்சுடலாமே என்றாளாம். உடம்பிலே அதை எல்லாம் பதிக்க இடம் வேண்டாமா என்று பெருந்தேளர் ஆட்சேபணை தெரிவிக்க அது நிற்கவென்று அப்போது கடந்தார்களாம்.
இதை அரண்மனை தினசரி நடவடிக்கை அறிக்கை சொல்கிறது. மேலும் இவற்றோடு சஞ்சீவனி மருந்தை எப்படி அதற்கான சிறப்புக் கோப்பையில் வார்த்து வாய்க்குள்ளோ, உதடு பட எச்சில் விழ வைத்தோ பருகாமல் ஒரு மடக்கில் எப்படிப் பிடித்து வாயில் ஒரு வினாடி சுவைத்து வயிற்றில் செலுத்தப்பட வேண்டும் என்று பயிற்சி தர சஞ்சீவனி பட்டறை முற்றிலும் காசு செலவின்றி இன்று முதல் நடத்தப்படுகிறது.
இந்தப்படி அறிவிக்கப்பட்டுள்ளதால் பயிற்சிக்காக ஓடோடி வந்து பழைய இரும்பு நாற்காலிகளை நிறைத்துக் காத்திருந்த பதவி ஓய்வு பெற்ற முதியோர் அதிகம் தட்டுப்பட்டார்கள்.
இந்தப் பயிற்சி இன்னும் நாற்பத்தைந்து நாளில் அடுத்த வட்டம் நிகழ்த்தப் படும். அப்போதும் இவர்கள் இந்தப் பயிற்சியில் இடம் பெறுவார்கள்.
வீடுகளில் சும்மா இருக்கப்பட்டவர்கள் என மானுட இனத்தில் மட்டுமில்லை, தேள், கரப்பு, ஈமு எனப் பல தரப்பட்ட உயிரினங்களிலும் மூத்தோர் விலக்கல் யாரும் சொல்லாமலேயே கடைப்பிடிக்கப்படுவதால் அனைத்து இன முதியோருக்கும் ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறை சஞ்சீவினி பருகும் பயிற்சி முகாம் கிரமமாக நடத்தப்படும்.
மருந்து எந்த நிமிடமும் வந்து சேரப் போவதால் இந்தக் கிழவரணி எதிர்பார்த்திருந்து வேண்டி முதல் வரிசையில் நிற்பார்கள். அந்த நேரத்தில் வயோதிகம் காரணமாக இறந்துபடவும் கூடும். அதற்குள் சஞ்சீவனி பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று அரசு சார்பில் அறிக்கைகள் சொல்லின.
அந்த நேரத்தில் தான் ஊடகங்களுக்குக் கொஞ்சம் சுதந்திரத்தை அனுமதித்தார் பெருந்தேளர். கர்ப்பூரத்தின் ஆலோசனைப்படி ஒரு நாளிதழில் மாதம் ஒன்றுக்கு ஐந்து பக்கத்தில் தேளரசை விமர்சித்து எழுதலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.
சஞ்சீவனி விளம்பரம் அந்தப் பத்திரிகைகளில் அரைக் கட்டணத்தில் அல்லது முழுவதும் விலையின்றி வெளியிட வேண்டும் என்று எழுதப்படாத ஒப்பந்தப்படி ஊடகங்களும் நிர்வாகமும் ஒருமித்து செயல்பட்டு சஞ்சீவனி விளம்பரமும் விமர்சனமும் ஒரே தினம் பரப்பிக்கப் பட்டு இரண்டுக்குமான நிலைபாட்டை எடுக்க மானுடர் மற்ற இதர இனத்தினரைத் தூண்டுவதாக அமையப் போகிறது.
சஞ்சீவனி குறித்த பிரக்ஞை உருவாக, அதன் நீட்சியாக சகல தளங்களிலும் பரந்துபட்ட நல்விளைவுகளை, அவை உருவாக்கி வளர்த்தெடுக்கும் விழுமியங்களைப் பற்றிய அனுபவ விதானம் விகாசமடையத் தேவையான சிறு மாற்றங்களின் அவசியத்தை உள்வாங்கி அவற்றைத் தேவையென்றால் பகுதியாகவோ முழுமையாகவோ ஏற்று சஞ்சீவனியின் ஆழ அகல நீள மற்றும் காலப் பரிமாணக் கூறுகளை மிகச் சரியாக அவதானித்து மாற்றி அலகிடப்படும். ஒன்றிலிருந்து ஒன்றாக நன்மைகள் தடையின்றிப் பெருகும் காலமாகும் இனி.
பிரபல இலக்கிய அரசியல், அரசியல் இலக்கிய விமர்சகர் கரடி இது குறித்துச் சொன்னது மேலே இருப்பது.
சஞ்சீவனி பிரக்ஞையின் பகுதியாக அவ்வொப்பற்ற மருந்து குறித்து புனைவு, அல்புனைவு தளங்களில் படைப்பாளிகளின் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. சஞ்சீவனி பற்றிய அறிவியல் கட்டுரைகள், வேதியியல், நுந்துகளியல், இயற்பியல், மருத்துவம் குறித்த ஆய்வுகளை விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்புகள் போன்றவற்றில் சிறந்த ஆக்கங்களுக்கு எழுபத்தைந்தாயிரம் பைனரி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும். சஞ்சீவனி தூலமாகவோ, பயன்பாட்டு விளைவாகவோ பங்குபெறும் சிறந்த ஒரு நாவலுக்கு நூறாயிரம் பைனரி நாணயங்கள் முதல் பரிசும் சற்றுக் குறைந்த தொகைக்கு அடுத்த நிலை வெகுமதிகளும் அளிக்கப்படும். (இந்த நாவல் ’தினை’ பரிசுப் போட்டிக்கு அனுப்பப் பட்டிருக்கிறது).
பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் ‘ இந்த சஞ்சீவனி அக்கப்போரை எல்லாம் அரசு ஏன் செய்து கஷ்டப்பட வேண்டும். செய்க என்று உத்தரவிட்டால், நாங்கள் உங்கள் சார்பில் செய்கிறோம். அரை விழுக்காடு கமிஷன் போதும்’ என்று வந்திருப்பதாக சஞ்சீவனி தொடக்க விழா தினத்தில் கர்ப்பூரத்திடம் பெருந்தேளர் கூறினார்.
நல்ல வேளை, அதற்கு சம்மதம் என்று தலையாட்டி விடாமல் போனீர்களே என்றான் கர்ப்பூரம்.
அந்த அரை விழுக்காட்டில் நாற்பது விழுக்காடு அல்லது கலந்து பேசிச் சம்மதித்த ஒரு பங்கு எனக்குத் தருவதாக ஆசை காட்டினார்கள் என்றும் கூறினார்.
கர்ப்பூரம் பூடகமாகச் சிரித்தான்.
நீங்களே பெருமுதலாளி நிறுவனம் நடத்த ஆரம்பித்தால் என்ன?