மிளகு அத்தியாயம் ஐம்பத்திமூன்று 2000 லண்டன் – a small portion
வெள்ளிக்கிழமை பகலில் மழை எட்டிப் பார்த்து விட்டுப் போனபோது மருது கருங்குதிரை வீதியில் வசிக்கும் மூன்று பெட்ரூம் அபார்ட்மெண்ட் அறைக்குள் மடிக் கணினியில் மூழ்கியிருந்தான். வாசலில் நான்கு ஐந்து முறை அழைப்பு மணி அடிப்பது காதில் விழாமல் மிளகு வாங்கி விற்கும் அப்ளிகேஷன் – செயலியில் முழுக் கவனத்தோடு இருந்தான் அவன்.
கதவைத் திறந்து உள்ளே வந்து தயக்கத்தோடு மருது என்று இன்னொரு முறை கூப்பிட்டாள் கல்பா. அது மருது இருக்கும் ஃப்ளாட் தானா என்று அடிப்படை சந்தேகம் வலுத்துக்கொண்டிருந்தது அவளுக்கு.
முதல் தடவை இந்தக் குடியிருப்புக்கு ப்ரபசர் பிஷாரடியோடு வந்தபோது தவறான புரிதலின் காரணமாக ஏழடி நெடுமால் ஒருவரிடமிருந்து பிஷாரடி வசவு வாங்கியது நினைவு வந்தது. இது மட்டும் மருதுவின் அபார்ட்மெண்ட் இல்லாத பட்சத்தில், பரிச்சயமில்லாதவர்களின் அபார்ட்மெண்டுக்குள் அதிரடியாக நுழைந்து நிற்கும் பெரும் சங்கடம் ஏற்படலாம். பெண் வேறே, கல்பா. சந்தர்ப்பங்கள் அவளுக்கு எதிராக சதி செய்து விடக்கூடும்.
வெள்ளிக்கிழமை பகலிலேயே விடுமுறைக்காலம் தொடங்கி விட்டது. திங்கள்கிழமை வசந்தம் வந்ததற்கான பேங்க் ஹாலிடே என்ற விடுப்பும் சேர, மூன்று நாள் தொடரும் நீண்ட விடுமுறைக் காலத்தில் கம்பெனி கொடுக்கப் பெண்களை அனுப்பும் நிறுவனங்கள் மும்முரமாகச் செயல்படும் வேளை.
கல்பா தன் நிழலை பீரோ கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். கம்பெனி கொடுக்க வரும் பெண் இப்படி இருக்க மாட்டாள். பின்னே எப்படி இருப்பாள்? அவளுக்குத் தெரியாது.
மருது ஹலோ மருது.
எஸ் என்று சலித்தபடி ஒரு குரல் கேட்டது. அரை டிராயரும் டீஷர்ட்டுமாக மருது உள்ளே இருந்து வந்தான். கல்பாவைப் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.
ஹாய் கல்பா நீ எப்படி வந்தே?
அவள் கையைப் பற்றி இழுத்தபடி கேட்டான்.
சிங்கிள் சீட் ஏரோப்ளேன்லே எடின்பரோ டு லண்டன்.மாடியிலே லாண்ட் ஆகி, சுவர் வழியா உள்ளே வந்தேன். காலிங்பெல் சத்தம் உன் காதிலே விழாதா?
“ஆமா, அது அப்போ அப்போ ஸ்ட்ரைக் பண்ணிடும்” என்றான் மருது.
கல்பா அவன் கையை இறுகப் பற்றியபடி நாற்காலிக்கு இழுத்தாள்.
ஈசிஜெட் ஏர்வேஸ் ரொம்ப தண்டம்ப்பா. தாகத்துக்குத் தண்ணி கூட தரமாட்டேன்கிறான். காசு தரணுமாம் அதுக்கும். ஏய் ஏய் ஏய்.
அவளை அப்படியே தூக்கிப் போய் கட்டிலில் போட்டு பக்கத்தில் படுத்து தலை உச்சி வகிட்டில் முத்தமிட்டான் மருது.
சார் தனியா இருக்காப்பலியா?
கல்பா மருதுவின் கையை தன் வயிற்றில் வைத்துக்கொண்டாள்.
”நல்லவேளை ஃப்ளைட் லாண்ட் ஆகிறது கேட்விக் ஏர்போர்ட்டிலே, ஹீத்ருவிலே இல்லேன்னு நேற்றைக்கே கேட்டு வச்சுக்கிட்டேன். இல்லாட்ட அதுக்கு வேறே அலைச்சல்” என்றாள்.
இரு வர்றேன் என்று அவசரமாக எழுந்தான் மருது.
“ஏய் வேணாம், இப்போ வேணாம். உக்ரமான பசியிலே இருக்கேன்” என்றாள் கல்பா
.
“Silly, எப்பவும் நான் அந்த நினைப்பிலே தான் இருப்பேன்னு நினைச்சியா? You are terribly wrong. லாப் டாப்பில் அப்ளிகேஷன் திறந்து வச்சுட்டு வந்திருக்கேன். அதை மூடிட்டு வரேன் இரு”.
“பசிக்குதுடா” என்று சிணுங்கினாள் கல்பா.
“டாய்லெட்டை பத்திரமா பூட்டி வைக்கறவன் உலகத்திலேயே நீ மட்டும்தான் இருக்க முடியும். சாவி எடு” என்றாள் கல்பா.
லேப்டாப் பக்கத்தில் மேஜையில் இருந்து சாவி எடுத்துக் கொடுத்து விட்டு கம்ப்யூட்டர் செயலி உள்ளே போய்விட்டான் மருது.
கல்பா திரும்பியபோது அவன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு குஷன் வைத்த நாற்காலியில் கண்களை மூடி தியானம் செய்வதுபோல் அமர்ந்திருந்தான்.