நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்யாயம் 34இல் இருந்து
எல்லாம் சரிதான், மருந்து சேர்மானம், செய்முறை என்ன?
உன்னி நிறைந்த இடங்களில் இது பொது யுகம் CE 5000 காலத்தில் கிடைக்காது என்பதால் CE 300 போய் மாட்டுத் தொழுவங்களில் பூவுலகமெங்கும் சேகரிக்கப்பட வேண்டும். (மேலும்)
அவற்றின் இறகு பர்ர்ர்ர் என ஒலியெழுப்பும் வரை அந்த உன்னிகளும், மிளகு விழுதும் உப்பும் கலந்து காடியோடு சேர்த்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்சப்படும். அடுத்து நூறு தவளைகள் அடுப்பில் ஏற்றி.வேண்டாம் தவளைக் கூச்சல் சகிக்க ஒண்ணாமல் போகும். (மேலும்)
மேலும் இந்த மருந்து குத்திருமலுக்கானது இல்லையே. மருந்து காய்ச்ச மேடை மேல் நான்கைந்து இரும்புச் சட்டிகள் கரியடுப்போ அல்லது போவென்று எரியும் கோட்டையடுப்போ வைத்து கிழக்குப் பார்த்து வைத்து நெருப்புச் சுடரை சிக்கிமுக்கிக் கல்கொண்டு ஏற்றிக் காய்ச்சப்படும். (மேலும்)
மெல்லிய இசை மேடையில் ஒலித்துக் கொண்டிருக்க அடுப்பு பொங்கி வழியும்போது அந்தப் பானைகள் இறக்கி வைக்கப்படும். ஒரு படி மருந்து காய்ச்சினால் இருபது பேருக்கு அதைக் கொடுக்க முடியும்.
எல்லாம் சரி, மருந்து என்ன சுவையோடு இருக்கும்?
பருகிப் பார்த்தால் தான் தெரியும். நான் மின்னணு அமைப்பு, சுவை எனக்குத் தெரியாது.
பின்னே கசப்பா இனிப்பா உப்பா உரைப்பான்னு தெரியாமல் அதை எப்படி விநியோகம் செய்யறது.
கேட்ச் தெம் யங்.
எதுக்கு இந்த பரங்கி பாஷை இங்கே?
You asked for it! ரொம்ப சின்னப் பையன்களாக இல்லாமல் ரொம்ப இளைஞர்களும் இல்லாமல் நடுவாந்திர வயது மாணவர்களைப் பிடிக்கணும். அவர்களுக்கு நல்ல ஆகாரம் கொடுத்து இந்த மருந்தையும் சுடச்சுட ஆளுக்கு ஒரு கரண்டி வாயில் ஊட்டிவிடணும்.
என்ன ஆகும்?
யாருக்குத் தெரியும்?
அப்புறம் ஏன் இத்தனை தடபுடல்?
கஜானாவுக்கு காசு வரும். சஞ்சீவனியையும் அதற்காகக் கட்டி வச்சிருக்கும் பணத்தையும் கொஞ்சநாள் மறந்திருப்பாங்க.
இதைச் செயற்கை அறிவு அமைப்பு திரையில் துப்பியபோது குழலன் அரூபமாக உள்ளே வந்திருந்தான்.
என்ன ஆச்சு, செயற்கை அறிவு அமைப்பு எல்லா திசையிலும் எழுத்து சிதறித் தெரியுதே. கேட்கக் கூடாத கேள்வி எதாவது கேட்டீர்களா என்று சிரித்தபடி பிரதி நீலன் ஆல்ட் க்யூவின் தோளில் தட்ட அவர் விதிர்விதித்து எழுந்தார்.
அவர்கள் பிரபஞ்சத்தில் தோளில் தட்டுவது அவமானப்படுத்துவதாகும் என்று தாமதமாக நினைவு வந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
இதுக்கே இவ்வளவு சாங்கோபாங்கமாக மன்னிப்பு கேட்கறியே கசாப்புக் கடையை வச்சுக்கிட்டு நான் எத்தனை விலங்குகள் கிட்டே தினம் தினம் மன்னிப்புக் கேட்கணும்.