என் நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் shape shifter பிசாசுகள் வந்த போது
சாரி, நாங்க இங்கே நீண்டநாள் தங்கின பிசாசுகள். நீங்க – உள்ளே வந்தவை இருந்த இரண்டைக் கேட்டன.
நாங்க புதுசா வந்திருக்கோம். இப்போ போயிடுவோம் என்று மரியாதையோடு சொல்லின கர்ப்பூரத்தை வம்பிழுத்த இரண்டும்.
நீங்க இங்கே இடம் எடுத்துக்கறதுன்னா எடுத்துக்குங்க என்று வீட்டுப் பிசாசுகள் சகஜம் காட்ட, வேண்டாம், நாங்க போகணும் என்று பிரியத்தோடு மறுத்தன வந்த இரண்டும்.
வீட்டுப் பைசாசங்கள் வெளியே போகும்போது நல்லிரவு என்று வாழ்த்திப் போனதை கர்ப்பூரன் கவனிக்கத் தவறவில்லை. அவை இருந்திருந்தால் எதோ ஒரு மாதிரி பலம் வந்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.
இந்த ரெண்டு பிசாசும் தொல்லை கொடுக்க வந்ததாகத்தான் இருக்கும். இருபதாம் நூற்றாண்டிலிருந்து ஐம்பதாம் நூற்றாண்டுக்கு பிசாசுகள் பயணப்பட்டிருக்க முடியுமா?
நீங்க ரெண்டு பிசாசும் என் துணைவியர் என்று எப்படி நம்பறது? மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த இரண்டும் ஒரே ஜாடை, ஒரே மாதிரி உடுப்பு, பறத்தல், கிரீச்சிடும் குரல் என்று இருப்பதேன்?
கபிதாவும் பூரணாவும் தான் அவர்கள் அவைகள் என்றால் வித்தியாசம் தெரியாமல் இருக்குமா?
எங்களை காலக் கோட்டில் ஒட்டாமல் விலகி வரச் செய்தது எங்கள் பிரியமான குழலியும் வானம்பாடியும் தான் என்று சொன்னால் நீ என்ன செய்யப் போகிறாய்?
அவர்கள் உங்களை காலப் பயணம் நடத்த வைத்திருப்பதற்கு பதில் கொஞ்சம் பின்னால் போய் உயிர் நீங்க ஒருத்தி தேள் வளையில் கைவிட்டும், மற்றவள் கிணற்றில் சாடியும் மரித்துப் போவதற்கு சற்று முன்பே காலத்தைப் பிடித்துப் பின்வலித்து உங்களை உயிர் பிழைக்க வைத்திருக்கலாமே என்று கேட்டான் கர்ப்பூரன்.
அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே கண்கள் அயர்வில் மூடிக் கொள்ள அவன் உறக்கத்தில் ஆழ்ந்தான். இதெல்லாம் அவனுக்கு எதுவும் நினைவு வராது என்று சொல்லியபடி, வீட்டுக்குள் வந்த பிசாசுகள் வெளியேறும்போது, வீட்டுப் பிசாசுகள் அவற்றிடம் நீங்கள் யார், பிசாசங்களாகத் தெரியவில்லையே என்று கேட்டன.
ஆமா, நாங்கள் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்திலிருந்து வந்திருக்கும் பெண்கள். ஷேப் ஷிஃப்டர்ஸ். பிசாசுகளாக உருவம் மாற்றினோம். அவனிடம் ஒரு முக்கியத் தகவல் கெல்லி எடுக்க வேண்டியுள்ளது. நீதி நோக்கில்அவன் நடத்தை தவறு என்று அவனைக் குற்றவாளி ஆக்கி விசாரிக்க வந்திருக்கிறோம்