வாழ்ந்து போதீரே நான்காவது அரசூர் நாவலாகும். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. நாவலின் மூன்றாம் அத்தியாயத்திலிருந்து =
நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? நேற்று இரவு உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்? நல்ல முறையில் சீரணமானதா? இரவு நல்ல உறக்கம் கிடைத்ததா? விடியலில் பறவைகள் ஜன்னலில் வந்து பாடினவா? தேத்தண்ணீர் கலந்து கொடுக்கும் உதவியாளர் குறித்த நேரத்தில் வந்தாரா? புதியதாகக் கறந்த பசும்பாலை அரசு பண்ணையின் தலைவர், மூத்த ஊழியர்கள் மூலமாகக் கொடுத்து அனுப்பியிருந்தாரா? அது நேரத்துக்கு வந்ததா? தேயிலையைப் பாலில் கொதிக்க வைத்து நீங்கள் விதித்த வெப்ப அளவுக்குக் காய்ச்சப் பட்டதா? நீங்கள் விரும்பியபடி வெண்மை குறைந்த சர்க்கரை சரியான அளவில் சேர்க்கப் பட்டுத் தேநீர் அருந்தக் கிடைத்ததா?
நந்தினி பேசி நிறுத்தினாள். மூச்சு வாங்கியது. கோப்பை கழுவுவதைப் பற்றி விட்டுப் போனதே என்று ஒரு எண்ணம் வந்து நழுவியது. இன்னொரு தடவை அதையும் சேர்த்து முழுவதுமாகச் சொல்லி விசாரிக்கலாமா?
புதிய ராணுவத் தலைவர் எல்லா மரியாதையும் தொனிக்க, சற்றே முன் சாய்ந்து நந்தினி தொடுத்த கேள்விச் சரங்களைச் செவிப்படுத்தி, கைகளை விரைப்பாக வைத்து நின்று கொண்டிருந்தார். கேள்விகளின் மழை ஓய்ந்ததும் அதே மரியாதையோடு அவர் பதில் சொல்வார் என்று நந்தினிக்குத் தெரியும்.
கடவுளின் சகோதரி மகிழ்ச்சியாக இருப்பதையும் நகைச்சுவையாகப் பேசுவதையும் எங்களின் பாக்கியமாகக் கருதுகிறோம். இந்த மகிழ்ச்சி நாடு முழுவதும் இப்போது எதிரொலிக்கும். ஆடும் பறவைகள் முன்னறையில் சிறகு விரித்து ஆடி வாழ்த்தும் வீட்டில் ஒலிக்கும் உங்களுடைய புனிதமான குரலைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன். நாட்டு வானொலியில் இன்று ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் அது ஒலிபரப்பாக உத்தரவு செய்கிறேன். இந்த ஒலிபரப்பைக் கேட்பது எல்லோருக்கும் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. பள்ளிகளிலும் ரேடியோக்கள் கொடுத்திருப்பதால் உங்கள் குரல் கேட்ட பிஞ்சு நெஞ்சங்களில் நல்ல சிந்தனைகள் மேலெழுந்து வரும். சர்க்கரைத் தொழிற்சாலைகளிலும், உணவு விடுதிகளிலும், மின்சார மயானங்களிலும், போக்குவரத்து வாகனங்களிலும், இரும்புத் தளவாடங்கள் உருவாக்கும் தொழில் நிறுவனங்களிலும், கசாப்புக் கடைகளிலும் இந்த நல்ல அதிர்வுகள் பரவி சகலமானவர்களின் நினைப்பும் செயலும் மேம்படட்டும்.
உடல் வளைந்து நின்று பேசும்போது தொப்பி கீழே விழாமல் ஜாக்கிரதையாக ஒரு கையால் பற்றியபடி ராணுவத் தலைவர் பேச, நந்தினிக்கு முதல் தடவையாகச் சிரிப்பு வந்தது.
இந்த மாதிரித் தானே மிகவும் சாதாரணமான விஷயங்களைப் பற்றிக் கரிசனம் மேலிடக் கேட்கப் போகிறீர்கள் என்று பகடியாக அவள் கோர்த்துச் சொன்னதை வானொலியில் ஒலிபரப்புவார்களாம். நல்ல கூத்து இது.