வாழ்ந்து போதீரே, அரசூர் நாவல்களில் நான்காவது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக வந்திருக்கிறது. நூலில் அத்தியாயம் 4இல் இருந்து
மிகவும் சாதாரணமான விஷயங்களைப் பற்றிக் கரிசனம் மேலிடக் கேட்கப் போகிறீர்கள் என்று பகடியாக அவள் கோர்த்துச் சொன்னதை வானொலியில் ஒலிபரப்புவார்களாம். நல்ல கூத்து இது.
வைத்தாஸ் இருக்கும் இடத்தில் அந்த ஒலிபரப்பு போய்ச் சேரலாம். மற்ற நாடுகளில் இது ஒற்றர்களாலும், அரசாங்கப் பிரதிநிதிகளாலும், அமைச்சர், நிர்வாக அதிகாரிகளாலும் மறைபொருள் தேடிக் கவனமாகக் கேட்கப் படலாம். இந்த நாட்டின் தற்போதைய நிலை பற்றிய கவலைகளோ, மகிழ்ச்சியோ பரவலாக எழுந்திருக்கலாம். நந்தினி பேசி அதெல்லாம் ஏற்பட வேணுமா?
நேரே விஷயத்துக்கு வந்து விட்டாள் நந்தினி.
நான் போக வேண்டி இருக்கிறது. இனியும் இங்கே தங்கியிருக்க விரும்பவில்லை. வைத்தாஸோடு இருக்க, என் குடும்பத்தோடு இருக்க. எனக்கு உடனே புறப்பட வேணும். எல்லையில் விட்டால் நானே போய் விடுவேன். ஒரு துணையும் வேண்டாம். காசு பணமும் மற்றதும் வேண்டாம்.
அதிகாரி நம்ப முடியாத சொற்களைக் கேட்க நேர்ந்தவரின் முக பாவத்தையும் பதறும் உடல் மொழியையும் கொண்டவராக ஒரு வினாடி தலை குனிந்து நின்றார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கியது மூன்று முறையும் மேலே நகராமலேயே நின்று விட்டது.
இன்னும் கடுமையாகச் சொல்லலாமா என்று நினைத்தாள் நந்தினி. வேண்டாம். உயிருக்கும் மானத்துக்கும் இங்கே பாதுகாப்பு கிடைக்கிறது. இருக்க இடமும் தின்னச் சோறும் சகல வித மரியாதையோடு கிடைக்கிறது. உடுதுணி புதிதாக வேண்டும் என்று கழிப்பறைச் சுவருக்கு முன் நின்று முணுமுணுத்தாலும் இருபத்து நாலு மணி நேரத்தில் நாட்டுத் தலைவர் தன் முக்கியமான அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கிறார். மாறி மாறி வரும் அரசாங்கத் தலைமையை மனதில் கொள்ளாமல் எல்லாமும், எல்லோரும், எல்லா ஆட்சியும், அதனால் சுகப்படுகிறவர்களும், துக்கப் படுகிறவர்களும் ஒன்றே தான் என்றும், தானே கடவுளின் சகோதரி என்றும், தன் சகோதரனே கடவுள் என்றும் பார்க்கப் பழகி விட்டால் இந்த வாழ்க்கையும் இனியதாகவே இறுதிவரை போய் ஓயலாம். நாளடைவில், இடுப்புக்குக் கீழே மரத்துப் போய், வெளியே நடக்க முடியாமல், கட்டைக் கால்களோடு, இருப்பிடத்திலேயே சுவரைப் பிடித்தபடி நகர்ந்து அருள் பாலிக்கும் முது பெண்மணியாவாள் அவள். வைத்தாஸ் இல்லாத உலகம் அதன் நியதிகளோடும் எதிர்பார்ப்புகளோடும் இயங்கும். இதைக் கடந்து பழைய அனுபவங்களின் ஆசுவாசத்தை நோக்கித் திரும்பிப் போக முற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். தானே அதை வருவித்துக் கொள்ள வேண்டுமா?
நந்தினி கண் மூடி இருந்த நிலை மாற்றி மெல்ல எழுந்து நின்றாள்.
கவலை வேண்டாம். மயில் ஆடிக் கொண்டிருக்கும் வரை நான் இங்கே இருப்பேன். எனக்கான விதிப்பு அது என்பதை அறிவேன். நட்டாற்றில் விட்டு விட்டுப் போக மாட்டேன். ஆயாசம் சற்றே ஏற்படும்போது இதை எல்லாம் விலக்கி நடந்து விடலாமா என்று தோன்றுகிறது. நொடி நேரம் தான். மனம் மறுபடி தெளிவு பெறுகிறது. இப்போது என் மனதில் அந்தப் பறவை ஆடுகிறது.
வரவழைத்துக் கொண்ட குளிர்ந்த குரலில் அவள் அலுப்பை மறைத்தபடி சொன்னாள்.
நந்தினியின் காலடிகளை நோக்கி நீட்டிய கைகளைத் தன் இரு கண்ணிலும் வைத்துக் கொண்டார் தலைவர். இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று முன் அறையில் இருந்தவர்களோடு சொல்லியபடி கார் ஏறிப் போனார்.
அவ்ர் போய் வெகு நேரம் சென்றும் அவரிடம் கேட்க நினைத்ததும் பொங்கிப் பொங்கி வந்து அடங்கும் ஆத்திரமும் மனதிலேயே தங்கி அலையடித்து இருக்க படுக்கையில் உட்கார்ந்திருந்தாள் நந்தினி.