அந்தரத்தில் முடியும் மாடிப் படிகளும், மயிலின் உடல் சுமந்து படி ஏறும் கழைக் கூத்தாடிப் பெண்ணும்

நான்காவது அரசூர் நாவல் வாழ்ந்து போதீரே என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அண்மையில் மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது. நாவலில் இருந்து

வேலைக்கு நிற்கிற பெண் கதவைத் தட்டி விட்டு எட்டிப் பார்த்தாள். உதடு அசையாமல் ஜாக்கிரதையாக வாயை இழுத்து மூடிக் கொண்டு நந்தினி அவளை நோக்கினாள். உள்ளே ஓடி வந்து, தரையில் உருண்டிருந்த ஆப்பிள் பழத்தை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டுத் திருமப வெளியே ஓடி வாசல் கதவைத் தட்டினாள் அந்தப் பெண்.

நந்தினி சிறு புன்னகையோடு அவளை உள்ளே அழைப்பதற்கு முன் பொதியாக இருட்டு மேலே விழுந்து கவிந்ததாக ஒரு பிரமை. ஆசுவாசமாக இருந்தது. இந்த வினாடி உறங்கி எல்லாத் துயரும் களையலாம் என்று தோன்றியது. இருட்டில் நடந்து கடக்க முடியாமல் போகும் பாதை முன்னே நீண்டு பயமுறுத்தியது. அந்தப் பாதையின் தொடக்கத்தில் பெரிய வீடு ஒன்று. மின்சாரம் போன ராத்திரி நேரத்தில் படிகளில் இயக்கம் மிகுந்து சப்த ரூபமாக விரியும் மிகப் பழைய இருப்பிடம் அது. அரிக்கேன் விளக்கொளியும் மெழுகுவர்த்திகளின் வெளிச்சமும் இருளைப் பெருக்கிக் காட்டும் சூழல். தோளில் செத்த மயிலைச் சுமந்து போகிற வாளிப்பான பெண்ணின் கண்கள் காம மயக்கத்தில் லகரி ஏறிக் கிடக்கின்றன. அவளுடைய வெப்ப மூச்சு நந்தினியைத் தகிக்கிறது.

வீராவாலி தானே நீ?

நந்தினி கேட்க மௌனமாகத் தலையசைக்கிறாள். அவளுக்குப் பின்னால் வைத்தாஸ் இப்போது வருவான்.

உறுதியான தோல் செருப்புகள் தரையில் அழுந்தப் பதிந்து ஒலிக்கும் காலடிச் சத்தம். வைத்தாஸ் தான். இவன் எழுத்தில் இருந்து வருகிறவன். வைத்தாஸ் இவனை எழுதியபடி, காமம் மீதேறித் திரிகிறவன். என்றென்றைக்கும்.

வீராவாலியை இணை விழைந்து குறி விரைத்து வரும் மிருகம் இவன். தனக்கு முன்னால் படிக்கட்டுகளில் காமம் அடர்ந்து செறிந்து ஏறிப் போகும் அவளுடைய வடிவான பின்புறத்தில் பார்வை நிலைக்க, முன்னேறி நடக்கிறவன். அந்த வைத்தாஸை வழி மறிக்கிறாள் நந்தினி.

நான் இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கணும்? நந்தினி கேட்கிறாள்.

அவன் முன்னால் ஊர்ந்து வீராவாலியின் தேகம் பரத்தும் ஒச்சை வாடை பிடித்துப் போவதில் மும்முரமாக இருக்கிறான். .

நான் இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கணும்?

மறுபடி கேட்டபடி அவன் தோளை உலுக்குகிறாள் நந்தினி. அவன் நகர்கிறான். நந்தினி பிடி தளரப் படிக்கட்டில் சரிகிறாள்.

நான் வைத்தாஸ் இல்லை. அவன் எழுதுகிற நாவலில் இருந்து இறங்கியவன். வீராவாலியைப் புணர்வதல்லாமல் எனக்கு வேறேதும் அனுபவப்பட என்னை எழுதிப் போகிறவன் அனுமதிக்கவில்லை.

அவன் முணுமுணுக்க, வீராவாலி நின்று திரும்பிப் பார்த்து நாம் இடம் மாற்றிக் கொள்ளலாமா என்று நந்தினியைக் கேட்கிறாள். அப்படி என்றால்?

நீ செத்த மயிலைச் சுமந்து இந்த வைத்தாஸோடு போகம் செய்யப் படி ஏறி நட. நான் நீயாக, ஆடும் மயிலின் ஓவியத்தோடு, புனிதம் சுமந்து உன் இடத்தில் வந்து விடுகிறேன். எனக்கு இந்த உபசாரங்கள், மரியாதைகள் எல்லாம் வேண்டும். போகம் அலுத்துப் போய் விட்டது.

நந்தினியாவதில் உனக்கென்னடி சந்தோஷம்? வீராவாலியின் கன்னத்தில் கிள்ளி விசாரிக்கிறாள் நந்தினி.

நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? நேற்று இரவு உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்? நல்ல முறையில் சீரணமானதா? நீர் பிரிந்ததா? இரவு நல்ல உறக்கம் கிடைத்ததா? விடியலில் பறவைகள் ஜன்னலில் வந்து பாடினவா? தேத்தண்ணீர் செய்து கொடுக்கும் பெண் ஊழியர் குறித்த நேரத்தில் வந்தாரா? புதியதாகக் கறந்த பசும்பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்தார்களா?

அவள் நிறுத்தி நிதானமாகச் சொல்ல, பதறிப் போய்க் கைகாட்டி நிறுத்தினாள் நந்தினி. அடுத்த ராணுவத் தலைவர் ஆட்சியைப் பிடிக்க, வீராவாலியை நந்தினி இடத்தில் வைத்துத் தொழத் தொடங்குவார்கள். நந்தினி தப்பி ஓடி, வீராவாலியாக மயிலின் சவம் சுமந்து, வைத்தாஸ் பின்னால் தொடர்ந்து வந்து தன்னைக் கூடுவான் என்று எதிர்பார்த்து நடக்கிற மாடிப்படிகள் அந்தரத்தில் நிற்கக் கூடும். இந்த வைத்தாஸும் எழுந்து வந்த புத்தகத்துக்குள் போய்த் திரும்ப மறைவான். அவனை எழுதியவன் மீண்டும் அவனை மிருகமாகக் கலவி செய்ய விதிப்பான். இன்னொரு வீராவாலி அவனுக்குக் கிடைப்பாள். நந்தினியைத் தெருவில் உருட்டித் தள்ளுவார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன