ரானடே ரோட் நடைபாதைக் கடை அடுக்கு ஜாடிகளும் ஆவக்காயும்

அரசூர் நாவல்களில் நான்காவது, வாழ்ந்து போதீரே = ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நாவலில் இருந்து –

கவலையே படாதே. நாளைக்கு சாயந்திரம் மடுங்காவிலே மாங்கா வாங்கி அரிஞ்சு எடுத்துண்டு வந்துடறேன். உப்பு, மொளகா, எண்ணெய் எல்லாம் கூடவே வந்துடும். யூ ஸ்டார்ட் தி மியூசிக் யங் லேடி.

திலீப் அபயம் அளித்தான். இன்றைக்கு இந்த விஷயம் நினைவு வராமல் போய்விட்டது. வந்திருந்தால், அகல்யாவை வைத்து இந்த ஊறுகாய்க் கொள்முதலை முடித்திருக்கலாம்.

அட சே, நேசம் வைத்த பெண்ணை கையைப் பிடித்து வெளியே கூட்டிப் போய் ஆவக்காய் ஊறுகாய்க்கான சாமக்கிரியைகள் வாங்கச் சொல்வது என்ன மாதிரி காதலில் சேர்த்தி?

திலீப் திலீப்பு

அம்மா சுவரைப் பிடித்தபடி நடந்து உள்ளே வந்தாள். கை நீட்டி திலீப்பைப் பார்த்துக் கெஞ்சலாகவும் பிடிவாதமாகவும் சொன்னாள்.

திலீப் கண்ணு, சீக்கிரம் சாப்பிட்டு வா. நான் ஆடப் போகணும். காத்துட்டிருக்காங்க. நேரு வந்திருக்காராம்.

நேரு மேலே போய்ச் சேர்ந்தாச்சு ஆயி.

திலீப் சொல்ல சோறு மென்றபடி இருந்த அவன் வாயை அவசரமாகப் பொத்தினாள் அம்மா. புரையேறியது திலீப்புக்கு. நேரு இருந்து விட்டுப் போகட்டும். அவர் கொஞ்ச நேரம் பக்கத்தில் திரும்பி யஷ்வந்த்ராவ் சவாணோடும் கிருஷ்ண மேனனோடும் அரட்டை அடிக்கட்டும்.

நான் மோருஞ் சாதம் சாப்பிட்டு முடித்து எச்சில் தாம்பாளம் அலம்பி வைத்துவிட்டுத்தான் வேறு காரியம் பார்க்க முடியும். அதுவரை நீ உறங்கிக்கோ அம்மா. வந்து எழுப்பறேன்.

திலீப் சொல்லிக் கொண்டிருக்க, ஒரமாகப் பத்தமடைப் பாயை விரித்து மெழுகு சீலைத் தலையணையைப் போட்டாள் கற்பகம்.

படுடீ. படுத்தாமப் படு. தாலாட்டு வேணும்னா பாடறேன். மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே. மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவளே.

ராமாயணத்தில் கோசலைக்கு ஒரு பெண் குழந்தையையும் சிரமமில்லாமல் உண்டாக்கிக் கொடுத்து கற்பகம் பாட்டி தாலாட்டு பாட, திலீப் கை அலம்பி வரும்போது அம்மா தூங்கி இருந்தாள்.

பாட்டி புடவை முந்தானையில் கை துடைத்துக் கொள்ளும்போது அவள் பேரனின் தலை தடவி கொழந்தே என்று கரைந்தாள்.

மதராசில் இருந்த கற்பகம் பாட்டி தான் இவள். இவளைக் கூட்டி வர மதராசுக்குப் போன திலீப் தான் சாப்பிட்டு முடித்துக் கை துடைத்தவன்.

கற்பகம் பாட்டி பேரனிடம் சொன்னாள் –

உன் பெரியம்மா அவசரமாப் பாக்கணும்னாளாம். ஜனனி வந்திருந்தாடா கூட்டிண்டு போறதுக்கு. உன்னைத் தான் பகல் பூரா காணோமே.

பெரியம்மா கூப்பிட்டு விட்டால் வேலை ஏதாவது இருக்கும். மொழி பெயர்க்க, நாலு கார்பன் காப்பி வைத்து அழுத்தி எழுதி நகல் எடுக்க, டைப் அடிக்க, ஒன்றும் இல்லாவிட்டால் பைண்ட் பண்ணித் தர என்று வேலை. காசும் வாங்கிக் கொடுத்து விடுவாள். சாப்பாடு, காப்பி எல்லாம் மினிஸ்டர் பெரியப்பா செலவு. ஏர்கண்டிஷன் அறையில் உட்கார்ந்து வேலை பார்க்கக் கொடுத்து வைத்திருந்தால் சாயந்திரம் எலக்ட்ரிக் ரெயிலில் வீட்டுக்குத் திரும்பின பிறகு கூட உடம்பில் சில்லென்று உஷ்ணம் கம்மியாக இருக்கும்.

ஜனனி ஞாயித்துக்கிழமை அன்னிக்கு லண்டன் போறாளாம். உங்கிட்டே அதையும் சொல்ல வந்திருந்தா. போனா திரும்பி வர ஒரு வருஷம் ஆகும்.

தெரியும் என்றான் திலீப். தங்கை. ஒன்று விட்ட சகோதரியோ ரெண்டு விட்ட சகோதரியோ. மனசுக்கு இதமான, அருமையான் தோழியாகப் பிரியமும் கரிசனமும் உள்ள சின்னப் பெண். மேல் படிப்புக்குப் போகிறாள். அண்ணாவாக, நல்ல சகாவாக மனசார வாழ்த்த மட்டும் தான் முடியும் திலீப்புக்கு இப்போதைக்கு. நேசம் காட்டும் உறவு எல்லாம் உதிர, மனுஷ சிநேகிதம் மேலும் குறைந்த முழு யந்திரத்தனமான வாழ்க்கைக்கு திலீப் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இயந்திரமாகத் தூங்கினான். இயந்திரமாகவே கண் விழித்தான். ஒரு பக்கம் விடிகிற போதே சப் அர்பன் எலக்ட்ரிக் டிரெயின் பிடித்துக் கிளம்பினான்.

இங்கேல்லாம் நிக்கக் கூடாது. மந்திரி சாப் வீடு. ஹட் ஜா.

மினிஸ்டர் பெரியப்பாவின் மலபார் ஹில்ஸ் மந்திரி பங்களா வாசலில் துப்பாக்கி ஊன்றி நின்ற போலீஸ் சேவகன் வழக்கம் போல் தடுத்தான். தோளில் கை வைத்து ஓரமாகத் தள்ளுவான் என்று எதிர்பார்த்தான் திலீப்.

அதற்குத் தயாராக நின்று, உள்ளே இருக்கப்பட்டவர்களோடான உறவு முறையைச் சொல்ல ஆரம்பிக்க, உள்ளே இருந்து பெரியம்மாவே வந்தாள்.

கோசாயிகள் மாதிரி, சுவேதாம்பர ஜெயின் சாமியாரிணிகள் போல நீள அங்கி உடுத்தி இருந்த பெரியம்மா இரைந்து உள்ளே வாடா என்று திலீப்பைக் கூப்பிட்டாள். சேவகன் நடுநடுங்கி அவனை உள்ளே தள்ளாத குறையாக அனுப்பி வைக்க திலீப் பெரியம்மாவைத் தொடர்ந்து டிராயிங் ரூமில் நுழைந்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன