புரவி கலை இலக்கிய இதழில் இடம் பெற்ற என் பத்தி வாதவூரான் பரிகள் பகுதி
இந்தக் கட்டடம் அதிக சிகஸ்ததாய்விட்டபடியால் துரஸ்து செய்துகொண்டு வருகிறார்கள்
1903-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் தினப் பத்திரிகைக் கட்டுரையில் வந்துள்ள வாக்கியம் இது. காசு கொடுத்து வாங்கிய பத்திரிகையை நேரம் செலவழித்துப் படித்து அது என்ன சொல்கிறது என்று புரிய பல மொழி அகராதியும் அந்தக் காலத்தில் தேவையாக இருந்திருக்கும். வேறே ஒண்ணுமில்லை, கட்டுரை ஆசிரியர் சொல்ல உத்தேசித்தது இதுதான் – இந்தக் கட்டிடம் அதிகமாகப் பழுதடைந்திருப்பதால் அதைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நூறு, நூற்றைம்பது வருடம் முந்தைய எழுத்துத் தமிழே இப்படி வினோதமாகத்தான் இருக்கும் என்று ஒட்டுமொத்தமாகக் கழித்துக்கட்ட முடியாது. கருப்பன் செட்டியார் என்ற திரு ஏ.கே செட்டியார் அந்தக் காலத் தமிழை இன்றைய மொழிநடையை விட எளிமையாக, சுவாரசியமானதாகக் கையாண்டு எழுதிக் காட்டியிருக்கிறார். அப்படி எழுதியவர்களின் எழுத்துக்கான உதாரணங்களைத் தொகுத்து வழங்கியும் இருக்கிறார். ‘தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்’ என்ற அவரது நூல் (சந்தியா பதிப்பக வெளியீடு) இந்த வகையில் முன்னோடி.
சுதேசமித்திரன் கட்டுரை ஒன்று இப்படி இருந்தால் இன்னும் பத்து அதே இதழில் நல்ல மொழிநடையோடு எளிய தமிழில் வந்திருப்பதைப் பார்க்கலாம்.
பழநி பயணக் கட்டுரை அதே சுதேசமித்திரனில் 1903-இல் வந்திருக்கிறது. பழநி முருகன் கோவிலில் பக்தர்கள் பட்ட கஷ்டத்தைச் சொல்வது இப்படி=
ஒரு பிரார்த்தனைக்காரர் அபிஷேகம் செய்யும் காலத்திலேயே வேறு ஒருவருடைய அபிஷேகமும் செய்யப்படுகிறது. ஒரு குருக்கள் விபூதி அபிஷேகம் செய்து முடிப்பதற்குள்ளாகவே வேறொரு குருக்கள் பஞ்சாமிருதத்தை அபிஷேகம் செய்கிறார். அது முடிவதற்கு முந்தியே மற்றொருவர் பாலைக் கொண்டுவந்து சாய்க்கிறார். இன்னொருவர் சந்தனக் குழம்பை ஊட்டுகிறார். மற்றொருவர் அர்ச்சனை செய்கிறார்.
1875-இல் ஜனவிநோதினி பத்திரிகையில் வெளியான செஞ்சிப் பட்டண யாத்திரைக் கட்டுரை கவிதையும் கூடியது –
வாசயோக்கியமான அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கிற அம்மண்டபங்களில் எப்பொழுதும் கடுங்காற்று வீசுகின்றது. மண்டபங்களின் மேல் ஏறிச் சுற்றிலும் பார்த்தாலும் பூமி அதலப் பாதாளத்தில் அழிந்து விட்டாற் போலவும், நான் ஆகாயத்தில் பறக்கிறது போலவும் தோன்றியதல்லாமல் சற்று நேரத்தில் (Fascination of the precipice) கிறுகிறுப்பான மயக்கமும் உண்டாயிற்று.
1910-ஆம் ஆண்டு சென்னையில் பறந்த விமானம் பற்றிக் குறிப்பிடுவது இப்படி –
சில நாளைக்கு முன் கல்கத்தாவில் ஒரு விமானம் செய்யப்பட்டு ஆகாயத்தில் பறந்ததாகத் தெரிவித்திருந்தோம். இப்பொழுது மற்றொன்று சென்னையில் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஆங்கில வண்டிப் பட்டறையாகிய ஸிம்ப்ஸன் கம்பெனியால் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மவுண்ட்ரோடில் பெயர்போன ஓட்டல் வைத்திருக்கும் டாஞ்சலிஸ் (டி ஆஞ்சலிஸ் என்றும் சொல்வதும் உண்டு) என்னும் பிரெஞ்சுக்காரரால் கண்டு பிடிக்கப்பட்டு, தமிழ் வேலைக்காரர்களால் செய்யப்படுகிறது. ஸிம்ப்ஸன் கம்பெனி மானேஜர் மேற்பார்வையின்கீழ் வேலை நடந்து வருகிறது. இப்போது 12 குதிரை சக்தியுள்ள எஞ்சினால் நடத்திப் பார்த்தார்கள். சென்னைக்கு அருகில் நடத்தினபொழுது திருப்திகரமாகவே இருந்ததாம். மறுபடியும் 25 குதிரை சக்தியுள்ள ஒரு எஞ்சினைச் சேர்த்து விடும்பொழுது எல்லா ஜனங்களுக்கும் காட்டப்படும். இந்த விமானத்தின் மொத்தபளு, எஞ்சின், ஆளோடு சேர்த்து எழுநூறு ராத்தல்தான். இந்தச் சமயத்திற்கு 20 குதிரை சக்தியுள்ள ஒரு எஞ்சினை இந்த விமானத்திற்கு முடுக்கிவிட்டுப் பறக்க வைக்க யத்தனித்து வருகிறார்கள். இம்மாதிரியான விஷயங்களில் கூடிய சீக்கிரத்தில் நம் இந்தியர்களும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்
இந்தக் கட்டுரை பிரசுரமான வார இதழ் இந்தியா. எழுதியவர் பாரதியார்
குறிப்பு – இந்தக் கட்டுரையில் கண்டுபிடிப்பு என்ற சொல்லை invention என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பாகப் பயன்படுத்துகிறார் மகாகவி. கண்டுபிடிப்பு discovery இல்லையோ.
888888