அரசூர் நாவல் வரிசையில் நான்காவதான வாழ்ந்து போதீரே ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப் பதிப்பாக அண்மையில் வெளியானது. நாவலில் இருந்து
பெரியப்பா எங்கே, டூர்லேயா?
மரியாதைக்கு விசாரித்தான். அவர் எங்கே இருந்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. பெரியம்மா கரிசனத்திலாவது நாலு காசு வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது.
பெரியப்பா ராத்திரி முழுக்க அவர் புத்தகத்துக்கு ப்ரூஃப் பாத்துட்டு இப்போ தூங்கிண்டிருக்கார்.
என்ன புத்தகம் பெரியம்மா?
ஆர்வத்தோடு கேட்டான். குடும்பத்திலேயே ஒரே ஒரு எழுத்தாளர் காணாமல் போய் அவர் புத்தகங்களும் எடைக்குப் போட்டு இருநூறு ரூபாய் வாங்கிக் கதையை முடித்தாயிற்று. இன்னொரு எழுத்தாளரை எப்படி எதிர்க் கொள்வது என்று திலீப்புக்குப் புரியவில்லை.
நேரு பிறந்தநாளை ஒட்டி பெரியப்பாவோட ஜன்ம தினமும் வருது. அறுபது வயசு ஆரம்பிக்கறதே.
கன்கிராட்ஸ் என்று வாழ்த்துச் சொன்னதை மினிஸ்டர் தூக்கத்தில் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.
பிறந்தநாள் அன்னிக்கு உங்க பெரியப்பா புத்தகம் ரிலீஸ் ஆகலாம். நேருவும் நானும்.
திலீப்புக்கு டிராயிங் ரூமில் பெரிய புகைப்படமாக நேரு சுவரில் இருப்பது நினைவு வந்தது. போன வருஷம் காலமான அவரை வருஷத் திவசம் வரைக்குமாவது மினிஸ்டர் வகையறாக்கள் நினைவு வைத்திருப்பதோடு அவசர அவசரமாகப் புத்தகமும் எழுதி அதை ரூபாய் பைசாவாக மாற்றி விடுவார்கள் என்று தோன்றியது.
மிச்ச சொச்ச நேரு நினைவு எல்லாம் எழுதித் தர, கோஸ்ட் ரைட்டராகத் திலீப்பைக் கூட்டி வரச் சொல்லியிருப்பாரோ பெரியப்பா?
அதெல்லாம் இல்லை என்றாள் பெரியம்மா. அவரே வாராவாரம் கொங்கணிப் பெண் ஒருத்தியைக் கூப்பிட்டு டிக்டேட் செய்து அத்தியாயம் அத்தியாயமாக முடித்துக் கொண்டிருக்கிறதாகத் தெரிவித்தாள் அவள்.
அந்த லேடி லட்சணமா வேறே இருக்காளா. நேரு நினைவு இப்போதைக்கு முடியும்னு தோணலை. பாகம் பாகமா இன்னும் பத்து வருஷம் வரலாம்.
பெரியம்மாவோடு சேர்ந்து திலீப்பும் சிரித்தான். காப்பி உபசாரத்துக்கு இடையில், ஜனனி விடிகாலையிலேயே லண்டன் பயணத்துக்காக ஏற்பாடு ஏதோ செய்யப் புறப்பட்டுப் போனதாகச் சொன்னாள் பெரியம்மா,
ஏதாவது டைப் செய்யணுமா பெரியம்மா? திலீப் காப்பி தம்ளரை மோரியில் போட்டு விட்டுக் கேட்டான்.
இல்லேடா. உனக்கு கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்காவது நீட்டிச்சுப் போகக் கூடிய ஒரு வேலை திகைஞ்சிருக்கு. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.
தாங்க்ஸ் பெரியம்மா. அவன் பெரியம்மாவின் காலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு சொன்னான். பெரியம்மாவை ப்ரீதிப் படுத்தும் விஷயங்களில் இது முக்கியமானது. இப்படியான சந்தோஷ சமாசாரம் சொல்லும் தருணத்தில் அவளை விழுந்து கும்பிடவும் அவனுக்கு இஷ்டமே.
கல்கத்தாவிலே தானே? அந்த பிஸ்கட் கம்பெனி டைரக்டர் ராமேந்திர சர்மாவோ யாரோ அன்னிக்கு இண்ட்ரட்யூஸ் செஞ்சீங்களே.
ராம சாஸ்திரிகள் சொல்லி வச்சுக் கிடைச்சது இல்லேடா. நான் சொல்லி வாங்கினது. சுபஸ்ய சீக்ரம்னு உடனே ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.
பெரியம்மா சொல்லச் சொல்ல உற்சாகமானான் திலீப்.
ஒரு பிரயாணம். கேரளா போகணும். நாளை மறுநாள் சாயந்திரம் கிளம்பறோம்.
பாட்டியையும் ஓரகத்தியான திலீப்பின் அம்மாவையும் தினம் ஒரு தடவை போய்ப் பார்த்துக் கொள்ள மினிஸ்டர் பங்களா சேவகத்தில் இருக்கும் நாலு பேரைக் கை காட்டி வைத்திருக்கிறாராம் மினிஸ்டர். திலீப் விடிகாலையிலேயே வராமல் நேற்றைக்கே வந்திருந்தால் பெரியப்பா வாய் வார்த்தையாகவே இந்த நல்ல நியூஸ் எல்லாம் கேட்கக் கொடுத்து வைத்திருக்குமாம்.
ஆனாலும் அவர் சதா சூழ்ந்து இருக்கும் நேரு நினைவில், இன்னொரு முக்கியமான காரியத்தை அனேகமாக மறந்திருப்பார். உடனடி செலவுக்காக திலீப்பிடம் இருநூறோ முன்னூறோ கொடுத்து அனுப்புவது அது.
பெரியம்மா வள்ளிசாக ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுக்க திலீப் கண் கலங்கி விட்டது. எல்லாம் நல்ல படியாகத் தொடங்கி நல்ல விதமாகவே முடிந்தால் அகல்யாவை செம்பூர்க் கோவிலில் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து ஜோடியாக பெரியம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விடலாம்.
விக்டோரியா டெர்மினஸில் ரயிலேற வந்தபோது முதல் வகுப்பு கம்பார்ட்மெண்டில் பெரியம்மாவும், பிஸ்கட் ராமா சாஸ்திரிகளும், அவர் வீட்டுக்காரியும் இருப்பதைப் பார்த்தான் திலீப். அவனும் அந்தப் பெட்டியில் ஏற, சாஸ்திரிகள் அவனிடம் கோழிக் கிறுக்கலாக செண்ட்ரல் ரயில்வே காகிதத்தில் எழுதிய அனுமதி பாஸை எடுத்து நீட்டினார்.
அம்பி, உனக்கு அம்சமா ரிசர்வ்ட் சீட். ஜனதா க்ளாஸ்லே இஞ்சின்லே இருந்து ரெண்டாம் கம்பார்ட்மெண்ட். வழியிலே சாப்பாட்டுக்கு நீ எதுவும் வாங்கிடாதே. இங்கே இருந்து ரயில் ஊழியக்காரா மூலமா மெத்துனு இட்லியும், நல்லெண்ணெயோட கன் பவுடரும் அனுப்பி வச்சுடறோம். இதை பத்திரமா பாஸோடு வச்சுக்கோ. உன் நியமன உத்தரவு. நீ உடனே ஜாயின் பண்ணனும் கேட்டியா? அண்டர்வேர் மாதிரி அவசியமானதை மட்டும் எடுத்துக்கோ. ஒரு மாசம் கழிச்சு வந்து மத்ததெல்லாம் கொண்டு போகலாம்.
திலீப் காகிதத்தை வாங்கிப் பார்த்தான். ஏதோ போக் ஆர்ட் பவுண்டேஷன் ட்ரஸ்ட் Folk Art Foundation Trust என்று போட்டு அவன் பெயருக்கு எழுதிய வேலை நியமனக் கடிதம்.
அர்ஜுன நிருத்தம் ஆராய்ச்சி செய்யும் குழுவினருக்கு ஊழியம் செய்யும் சிப்பந்தியாக அவன் நியமனம் ஆகி இருந்தான். தாற்காலிக குமாஸ்தா, டைப்பிஸ்ட் மற்றும் ஃபைலிங் கிளார்க். மற்றும், யாவருக்கும் அடிப்படை சௌகரியங்களை உறுதி செய்கிற மேஸ்திரி.
வண்டி கிளம்பப் போறது. உன் கம்பார்ட்மெண்டிலே போய் ஏறிக்கோ.
பெரியம்மா சொல்ல, திலீப் ட்ரங்க் பெட்டியோடு மூணாம் கிளாஸில் ஓடிப் போய் ஏறினான்.
அடுத்த மாதம் வரும்போது வேலை கிடைத்திருப்பதை அகல்யாவிடம் பகிர்ந்து கொண்டு கசோடியும், குலோப்ஜாமுனும், பிளாட்பாரத்தில் வாங்கிய ஸ்டிக்கர் கோலமுமாக அவளை சந்தோஷப் படுத்த வேண்டும். கல்யாணம் பற்றி வீட்டில் மெல்லப் பேச்சை நகர்த்தச் சொல்லவும் வேண்டும். தேவைப் பட்டால் ஒரு நடை அகல்யா வீட்டுக்குப் போய்.
என்ன வேலையில் இருக்கே?
அகல்யாவோ அவள் வீட்டிலோ கேட்டால்?
மினிஸ்டரின் பெண்டாட்டியான சொந்தம் பெரியம்மாவுக்கும் மித்ரர்களான பிஸ்கட் தம்பதிகளுக்கும் அனுசரணையான வே லைக்காரன். நேரத்துக்கு சாப்பாடு விளம்பி, எச்சில் தட்டு அலம்பி, வென்னீர் வைத்துக் கொடுத்து, கால் ஆணிக்கு சைபால் களிம்பு தடவி விட்டு, வெற்றிலை பாக்கு வாங்கி வந்து சிற்றூழியம் செய்கிறவன். டைப்பும் அடிப்பான். ஃபைல் கட்டில் காகிதம் வைப்பான். பினாயில் கலந்து கக்கூஸ் கழுவி விடுவான். மேஜை துடைப்பான்.
திருப்தியாகச் சிரித்துக் கொண்டான் திலீப்.
சல்தா ஹை.
கரி தின்னும் ரயில் எஞ்சின் ஆமோதித்துக் கூவிச் சத்தம் உயர்த்த, மெயில் நகர்ந்தது.