அரசூர் நாவல்கள் நான்கில் நாலாவது வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப்பதிப்பாக அண்மையில் வெளியீடு கண்டது. அதிலிருந்து-
விருச்சிக மாதப் பிறப்பு தினத்தில் பகவதி தில்லியில் சின்னச் சங்கரன் வீட்டுக்கு வந்தாள். மென்மையாகத் தில்லி குளிர்காலம் தொடங்கி இருந்த விடிகாலை நேரம் அது.
உன் பேரன் சின்னச் சங்கரன் உறங்கிண்டிருப்பான் என் பொன்னு பகவதி. பெத்துப் பொழச்ச குட்டிப் பொண்ணு, சின்னச் சங்கரன் பாரியாள் வசந்தியும் தான். அவளுக்கு பிறந்த சிசுவும் நல்ல உறக்கத்திலே இருக்கும். நமக்கு இப்ப போயே பற்றுமா?
தயக்கத்தோடு கேட்டபடி கூட வந்தாள் விசாலம் மன்னி. அவளால் யாருக்கும் ஈர்க்குச்சி அளவு கூட, ரணம் ஊறிச் சிவந்த காயம் உண்டாக்கவோ நுள்ளி நோவிக்கவோ, என்றால் கிள்ளி உபத்திரவப் படுத்தவோ முடியாது என்பதை பகவதி அறிவாள். அங்கே இங்கே அலைவதிலும் ஈர்ப்பு இல்லை அவளுக்கு. என்றாலும் வந்தே தீர வேண்டியதாகி விட்டிருந்தது.
போய்ட்டு சீக்கிரம் திரும்பிடலாம்.
ஆவி ரூபத்தில் பகவதி கூப்பிட்டாள். ஆவியாக விசாலம் மன்னி புறப்பட்டாள்.
உதயத்துக்கு முன் இப்படி ஒரு வந்து சேருதல் இன்றைக்கு நடக்கிறது.
பாட்டி, சித்தெ இரேன்.
தாழச் சடை பின்னி, நீளமாக குச்சிப் பின்னல் போட்ட சிறுமி பின்னால் இருந்து குரல் கொடுக்க, விசாலம் மன்னி நிற்கிறாள்.
நீ போய் களிச்சுண்டு இரு குஞ்ஞம்மிணி. அப்புறமா உன்னைக் கூட்டிண்டு வரேன்.
விசாலம் மன்னி அவசரமாக அவளைத் தடுக்கக் கை நீட்ட சின்னப் பெண் பகவதியின் பாதுகாப்பான கை வளையத்துக்குள் புகுந்து கொள்கிறாள்.
பகவதி அத்தை, நான் சமத்தா வருவேன். விசாரம் ஏதும் வேணாம். நம்ம மூணு பேருக்குமே உடம்பு இல்லையே. இருந்தாத் தானே மத்தவாளுக்கு கஷ்டம் தர?
குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டுக் கை பிடித்து அழைத்துப் போகிறாள் பகவதி.
இதெல்லாம் என்ன? அக்னியை உருளை உருளையாப் பிடிச்சு இப்படி வீட்டுக்குள்ளே அடுக்கி வச்சிருக்கே?
குஞ்ஞம்மிணி கேட்கிறாள்.
இது குளிர் போக்கறதுக்கு கரண்ட்லே வேலை செய்யற கணப்பு, குஞ்ஞே.
பகவதி பிரியமாகப் பகர்ந்து தருகிறாள். ஆயுள் முடிந்து போனாலும் புதுசு புதுசாகத் தெரிந்து கொண்டுதான் இருக்கிறாள் அவள்.
குஞ்ஞம்மிணி சித்தாடையை இடுப்பு நழுவ விடாமல் பிடித்துக் கொண்டு வேகவேகமாக பகவதி பின்னாலேயே ஓடி வருகிறாள். அவளுக்கு இந்த இடமே புதுசாக, உள்ளே நடந்து திரிந்து சுற்ற உற்சாகமான இடமாக இருக்கிறது.
எய் அது பஞ்சசார டப்பா. துறக்கண்டா.
விசாலம் சொல்வதற்குள் அம்மிணி சர்க்கரை டப்பாவைக் குதிகாலில் எழும்பி எடுக்கிறாள். சமையல் அறைத் தரை முழுக்க வெள்ளைத் துணி விசிறிப் போட்டது போல சர்க்கரை படியும் நேரத்தில் அம்மிணி கை காட்டி நிறுத்த எல்லாம் வழக்கம் போல் பழையபடி. குஞ்ஞம்மிணி ரசித்துச் சிரிக்கிறாள்.
குறும்பையும் மத்ததையும் வேறே ஒரு பொழுதுக்கு மாற்றி வச்சுக்கோ குஞ்ஞம்மிணி. குழந்தை பொறந்திருக்கற நேரம். அதன் பிருஷ்டத்துலே எறும்பு மொய்க்கப் போறது. கஷ்டம். கடிச்சா இத்திரி நோகும் கேட்டியா. உன்னாலே தானாக்கும் அதெல்லாம்னு ஆயிடும்.
விசாலம் கண்டிப்பதாக குஞ்ஞம்மிணியைப் பார்த்துச் சொன்னதில் சிரிப்பு மட்டும் தான் இழைத்துச் சேர்த்திருக்கிறது. பகவதி தலையை வெளியே எக்கி சின்னச் சங்கரனைத் தேடுகிறாள்.
நான் இங்கேயே இருந்து ஆசீர்வாதம் பண்றேன்.
விசாலம் மன்னி அம்மிணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்.
பாட்டியும் பேத்தியும் சர்க்கரை டப்பாவை வச்சு விளையாடிண்டு இருங்கோ. நான் இதோ வரேன்.
தில்ஷித் கவுரைத் தன் நெஞ்சில் அவள் வெற்று முதுகு படர இறுக அணைத்து பின்னாலிருந்து உருட்டிப் பிடித்து விளையாடும் கற்பனையில் அரைத் தூக்கமும் பிரக்ஞையுமாகப் புரண்டு படுக்கிற சின்னச் சங்கரனைப் படுக்கை அறையில் நுழைந்ததும் பார்க்கிறாள் பகவதி.
அட படவா, தாத்தா பேரை உனக்கு வச்சபோதே நினைச்சேன். சில்லுண்டி ஆட்டம் எல்லாம் ஆடுவேன்னு. சரியாப் போச்சு பாரு. அந்த ஸ்திரி அவளோட குஞ்ஞுக்கு ஊட்ட ஒண்ணுக்கு ரெண்டா அவளுக்கு மொல மாணப் பெரிசா, சக்க பருமன்லே எழும்பியிருக்கு. உனக்கு சொப்பனத்திலும் விஸ்தாரமாக் கையாளவா பகவான் அதுகளைப் பெருக்கி வச்சு அனுப்பியிருக்கான்?
சங்கரன் வாசல் வழியாக மிதந்து உள்ளே வருகிறான். இவன் பெரிய சங்கரன். அரசூர்ப் புகையிலைக் கடைக்காரன். பகவதி என்ற சுந்தரிக் குட்டியை அம்பலப்புழையில் கல்யாணம் கழித்து அரசூர் வம்சம் தழைக்கக் கூட்டி வந்தவன்.
என் பகவதி கண்ணம்மா. பேரனை பெட்ரூமிலே வந்து பார்க்கறது தப்புடீ செல்லம். என்னமோ உருண்டிண்டிருக்கானே?
சும்மா இருக்கேளா. அதென்ன பெட்ரூம்? புருஷனும் பொண்டாடியும் கட்டிண்டு படுத்துக்கற உள்ளு தானே? அன்னிய ஸ்திரியை அங்கே எதுக்கு கூப்பிட்டு வச்சு அவளோட கம்பளி ஸ்வெட்டரை அவுக்கணும்? ஊர்லே இல்லாத ஸ்தனமா அவளுக்கு வாய்ச்சது?
என்னைக் கேட்டா?
பெரிய சங்கரன் சிரிக்கிறான்.