அரசூர் நாவல் வரிசையில் நான்காம் புதினம் வாழ்ந்து போதீரே. இதன் அச்சுப்பதிப்பு -மறுபதிப்பு- அண்மையில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக வந்திருக்கிறது. அரசூர் நான்கு நாவல் வரிசையில் மற்ற மூன்றோடு நிறைய வேறுபடும் நூல் இது. புத்தகத்தில் இருந்து –
அதானே. நீங்க கப்பல்லே வெள்ளைக்காரிகளோடு ஓஹோன்னு ராக்கூத்து அடிச்ச மனுஷராச்சே. எதெது எங்கேன்னு தெரியாமத்தானே கூட்டமா இருந்து ரமிச்சதெல்லாம்?
பகவதி மிதந்து பெரிய சங்கரனின் தோளில் செல்லமாகக் கடித்து அவன் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள். இரண்டு பேரும் உள்ளே இருட்டு கவிந்த அறைக்குப் போகிறார்கள்.
போன வாரம் பிறந்த குழந்தை தொட்டிலில் சிணுங்குகிறது. வசந்தி எழுந்து உட்கார, கீழே படுத்திருந்த அவளுடைய அம்மா சுவரைப் பிடித்துக் கொண்டு எழுந்து வருகிறாள். பால் கொடுக்கறியா என்று உறக்கம் பூசிய குரலில் வசந்தியை விசாரிக்கிறாள்.
பொகையிலை கடைக்காரா, நீ வெளியிலே போய் நில்லு. குஞ்ஞுக்கு மொல கொடுக்கப் போறா.
நான் தாத்தா, நீ பாட்டி. பாத்தா தப்பு இல்லே. மனசுலே கல்மிஷம் கிடையாது. மனசே இல்லை. உடம்பும் தான்.
சங்கரன் திடமாகச் சொல்கிறான்.
இவனுக்கு ஒரு பொண்ணு பிறக்கப் போறான்னு எனக்கு அவன் அம்பலப்புழை போய்ட்டு ஜோடியா இந்த முறிக்கு வந்த போதே தெரியும்.
ரகசியம் சொல்லும் குரலில் பகவதி சங்கரனிடம் தெரிவிக்கிறாள்.
பேரன் பெட்ரூம்லே, ஜோடியா இருக்கறபோது பார்த்ததும் தப்பு தான் செல்லம். எனக்கு ஒரு முத்தம் கொடு. தப்பு எல்லாம் நேராயிடும்.
கடைக்கார பிராமணா, இன்னுமா முத்தம், ஆலிங்கனம்னு அலையறே.
பகவதி முத்தம் கொடுத்து முகத்தை மூடிக் கொள்கிறாள். மெல்லக் கண் திறந்து பார்த்து சங்கரனிடம் மெதுவான குரலில் சொல்கிறாள் –
குழந்தைக்கு என் பெயரை வைக்கணும்னு சொல்றா விசாலம் மன்னி.
சரியாத்தான் சொல்றா. என் பகவதிக்குட்டியை இந்த வீட்டுலே திரும்பவும் வாய் நிறைய எல்லோரும் கூப்பிடட்டும்.
சங்கரன் உத்தரீயத்தை தோளைச் சுற்றி இறுக்கிக் கொண்டு பகவதியையும் அடுத்து அணைத்துக் கொண்டு சொல்கிறான்.
பால்யம் திரும்பறதா என்ன? நம்ம காலம் முடிஞ்சு போயாச்சு. கட்டிக்கறதும் கொஞ்சறதும் கொஞ்சம் கம்மி பண்ணணும், என்ன புரியறதா?
பகவதி பெரிய சங்கரனிடம் பொய்க் கோபத்துடன் சொல்ல, சின்னச் சங்கரன் தூக்கத்தில் குழந்தை மாதிரி சிரிக்கிறான்.
பொண்ணுக்கு பகவதி, பிள்ளைக்கு மருதையன் இதான் பெயர் வைக்க வேண்டியது
பெரிய சங்கரன் சொல்ல, அடுத்தது பிள்ளையா எனக் கேட்கிறாள் பகவதி.
இவன் எமகாதகன். வசந்தியை கொஞ்சமும் உபத்திரவிக்காமல் புத்ர பாக்கியம்.
பெரிய சங்கரனும் பகவதியும் சின்னச் சங்கரனுடைய படுக்கை அறைக்குள் மறுபடி பிரவேசிக்கிறார்கள்.
பின்னால் வந்த விசாலம் மன்னியும், குஞ்ஞம்மிணியும் சங்கரனைச் சூழ்ந்து கொண்டு விவரம் கேட்கிறார்கள். பகவதி ஆவலோடு அவன் முகத்தைப் பார்க்க, சின்னச் சங்கரன் எழுந்து ரகசியம் கேட்கத் தயாராக உட்கார்கிறான்.
வாசலில் காலிங் பெல் சத்தம்.
கனவு தான் என்று தெரிகிறது சின்னச் சங்கரனுக்கு. ஆனாலும் தெளிவாக துலக்கமாக வந்த பகவதிப் பாட்டியின் முகம், படத்தில் பார்த்துப் பழகி, அதே போல் பட்டையாக வீபுதியும் காதில் கடுக்கனும், முகத்தில் ரெண்டு நாள் தாடியுமாக தாத்தா பெரிய சங்கரன், இன்னும் யாரோ பழுத்த சுமங்கலியாக ஒரு கிழவி, பச்சை ரிப்பன் வைத்துப் பின்னிய தலைமுடியும் ரப்பர் வளையுமாக ஒரு சின்னப் பெண்.
எல்லோரும் இங்கே, இந்தச் சின்ன அறையில் தான் சுற்றிச் சுற்றி வந்தார்கள். எங்கே அவர்கள் எல்லாம்?
பகவதிப் பாட்டி, எங்கே போனே? உன் பெயரை வைக்க ஏற்கனவே முடிவு செஞ்சாச்சு.
சின்னச் சங்கரன் வாசல் கதவைத் திறக்கிறான். பால்காரன்.
அதிகப் பால் வேணும்னு சொல்லியிருந்தாங்க மாதாஜி. வீட்டுலே விசேஷமாமே?
பத்து லிட்டர் பிடிக்கும் தகரக் குவளையை உள்ளே நகர்த்தி விட்டு நேரு மாதிரி ஷெர்வானி கோட்டை சரி செய்து கொண்டு தூத்வாலா வெளியே போகிறான்.