வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. முழுத் தொகுதி (4 நூல்கள்) என் பதிப்பாளர் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப் பட்டிருக்கின்றது, வாழ்ந்து போதார் அத்தியாயம் ஐந்தில் இருந்து
ஷங்கர் ஷார், சாஸ்திரிகள் எட்டு மணிக்கு ரெடியா இருக்கச் சொன்னார். புண்ணியாஜனனம் இன்னிக்கு.
ஷார்ட்ஸும் கான்வாஸ் ஷூவுமாக வெளியே வந்தபோது சின்ன மடேடர் வேனை ஓட்டி வந்து காம்பவுண்டுக்குள் நிறுத்திய மைத்துனன் சொன்னான்.
குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப் போறாப்பல?
இந்த போறாப்பல, வந்தாப்பல என்று கேள்வியை மொண்ணையாக முடிப்பதெல்லாம் செம்மண் பூமி வழக்கம். வெறும் கேள்வி கூட கூர்மையாகக் காயப்படுத்தும் என்று யோசித்துக் கொண்டு எழுந்து வருவது அந்த பதவிசான மொண்ணை. சங்கரனின் மைத்துனன் அதை கேலி செய்கிறானாம்.
வெட்டிப் பயல். இப்போது இவனோடு வம்பு வளர்க்க சங்கரன் உடம்பில் சக்தி இருந்தாலும் மனசில் விருப்பம் இல்லை. இருந்தாலும் சும்மா இருந்தால் துளிர்த்து விடுவான். குட்டிக் கொண்டே இருக்க வேணும்.
என்ன பெயர் வைக்கலாம், நீயே சொல்லேன். நம்ம குடும்பத்திலேயே நேரு மாதிரி புத்திசாலி நீ மட்டும் தானே?
சங்கரன் குறுக்கே வெட்டினான்.
அய்யே நேருவெல்லாம் என்ன புத்திசாலியிலே சேர்த்தி? பி எல் சோந்தி மாதிரின்னு சொல்லுங்கோ.
நேரு எங்கே, இவன் கொண்டாடும் உதிரிகள் எங்கே?
சின்னச் சங்கரன் மணி பார்த்தான். சரியாக ஆறு மணி. இப்போது ஓடப் போனால், முடிந்து திரும்பி வர நேரம் சரியாக இருக்கும்.
குழந்தைக்கு ஜ்யோத்ஸ்னான்னு பெயர் வைக்கலாம். டக்கரா இருக்கும். சரியா அத்திம்பேர்?
மைத்துனன் யாசிக்கிறான்.
ஓ, ஜ்யோத்ஸ்னாவா?
அதென்ன ஓ ?
உங்க பக்கத்து வீட்டு தல்வார் குடும்பத்துலே பொண்ணு தானே ஜ்யோத்ஸ்னா? அவள் மேலே உனக்கு ஒரு கண்ணு இருக்குன்னு ரொம்ப நாளா எனக்கு ஊகம்.
சங்கரன் மைத்துனனின் கண்ணைப் பார்த்துச் சொல்கிறான்.
அதெல்லாம் ஒண்ணுமில்லே அத்திம்பேர். பாக்க பளிச்சுனு பால் பாட்டில் மாதிரி இருக்கான்னு ஒரு அப்ரிசியேஷன்.
பால் பாட்டிலா? குடிக்கலாம்னு சொல்லு. ரொம்ப நெருங்கியாச்சோ.
சே சே எப்பவாவது நாலு வார்த்தை பேசறதுதான். அவ எண்ணெய் தேச்சுக் குளிச்சுட்டு நிகுநிகுன்னு இடுப்பு மின்ன நிக்கற போது, ஐயோ ஏன் கேக்கறேள்.
மைத்துனன் தலையைக் குனிந்தபடி அந்த இடுப்பின் லகரியில் ஈடுபட்டுச் சொல்ல சின்னச் சங்கரனுக்குச் சிரிப்பு வந்தது. பொறாமையும் தொடர்ந்து எனக்கு அதெல்லாம் கிடைக்கலையே என்ற கோபமும் எட்டிப் பார்த்தது.
அட படவா, பர ஸ்திரியை எங்கெல்லாம் பார்வையாலே தடவி இருக்கே. என் கிட்டே வேறே வெக்கமே இல்லாம வர்ணிச்சுச் சொல்லி மகிழ்ந்து போறே. உன் இடுப்புக்குக் கீழே இருக்கப்பட்டது தானே கிடந்து துள்ளச் சொல்றது. தயவு தாட்சண்யம் இல்லாம அதை நசுக்கணும் இப்படி.
சின்னச் சங்கரன் மனசில் அவனைக் கொட்டையில் ஓங்கி மிதித்துக் கூழாக்கினான்.
மனசு சமனப்பட, சாத்வீகமாக வார்த்தை சொன்னான் –
சொன்னாக் கேளு. கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளை பெத்தவ அந்த ஜ்யோத்ஸ்னா. வேணாம். பேச்சுலே தான் ஆரம்பிக்கும் சகலமும்.
சிரித்துக் கொண்டே சொல்கிறான் சங்கரன். அதை யாசித்து நின்ற மைத்துனன் முகம் நேசமாகிறது.
பேசினாலே பிரசவமாயிடுமா அத்திம்பேர்? சும்மா இருங்கோ. உங்க ஆபீஸ்லே கூடத் தான் அந்த சர்தார் பொண்ணு. நீங்க சொல்லியிருக்கேளே. மதமதன்னு மாரு. தினசரி திவ்ய தரிசனம். இறுக்கிப் பிடிச்ச ஸ்வெட்டர். இன்னிக்கு அவளை வரச் சொல்லி கூப்பிட்டிருக்கோ?
மைத்துனனுடன் உட்கார்ந்து ஒரு டம்ளர் பானகம் சாப்பிடக் கூட இனி யோசிக்க வேண்டும். ரெண்டு மக் லாகர் பியரில் சகல அந்தரங்கத்தையும் இவனிடம் எப்போதோ உளறி இருக்கிறான் சங்கரன்.
உள்ளே உங்கக்கா இருக்கா. தெரிஞ்சா என்னை இழுத்து வச்சு அருவாமணையிலே முழுசா நறுக்கிடுவா. அப்புறம் கவுரை நினைச்சாக் கூட வெத்து அரைக்கட்டுலே உயிர் போற மாதிரி வலிக்கும்.
தோல்வியை மறைத்துக் கொள்ள இன்னும் தாழ்த்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. போகட்டும். ஞாயிற்றுக்கிழமை எல்லா அவமரியாதையும் பொறுத்துக் கொள்ளக் கூடியதே. ரெண்டு வேளை ஒசத்தியான சாப்பாடும் கள்ளுச் செட்டு போல் காப்பியும் வெட்டியாக திவானில் சாய்ந்து நேரம் போக்கவுமாக ஆன தினம். இன்றைக்கு வீட்டு விசேஷம் என்பதால் திவானில் இளைப்பாற சாயந்திரம் ஆகி விடலாம். மற்றது உண்டு. விசேஷ ஆகாரமும்.
தலைக்கு மேலே வேலை. கரோல்பாக்கிலே முப்பது பேருக்கு சமையலாக்கும் இந்த முகூர்த்ததுக்காக. போய் முடிச்சு எடுத்துண்டு ஓடி வரணும்.
மைத்துனன் உள்ளே ஓடினான்.
நீ ஒரு துரும்பையும் நகர்த்தாமல் சும்மா லோதி கார்டனில் ஓடப் போகிற சோம்பேறிக் கழுவேறி என்றும் அவன் செய்கைக்கு அர்த்தம்.
நீ என் முடிக்கு சமானம் என்று மனதில் வழக்கம் போல் வடக்கு நோக்கி நின்று திட்டி விட்டு ஸ்கூட்டரைக் கிளப்பி மெதுவாக ஓட்டிப் போனான் சின்னச் சங்கரன்.