வாழ்ந்து போதீரே நாவலின் அடுத்த ஈடு (அரசூர் நாவல் வரிசையின் நான்காவது நாவல்
குளித்து அம்பலம் தொழ வந்த ஒரு கூட்டம் பெண்கள் வர, பிடிவாதமாகக் கண்ணைக் கவிந்து கொண்டு பிரகாரம் சுற்றினான் திலீப். கூடவே வந்து, சூழ்ந்து, விலகிப் போன, அம்மே நாராயணா என்று நாமம் சொல்லிக் கொண்டு வந்த அந்தக் கும்பலில் இருந்து. குளத்து நீர்த் தாவர வாடையும் சந்திரிகா சோப்பு வாசனையும், ஈரத் தலைமுடி வாடையும், அரைத்த மஞ்சள் மணமும், பல்பொடி வாசனையும் தூக்கலாகக் கலந்து உயர்ந்து கொண்டிருந்ததை அனுபவித்தபடி வெடித் தரைப் பக்கம் நடந்தான். இவர்களுக்குப் பணி முடக்கு இல்லையென்று விதித்த எல்லோருக்கும் மனதுக்குள் நன்றி சொன்னான் அவன்.
ஓரமாகச் சுருண்டு படுத்திருந்தான் வெடிவழிபாட்டுக்காரன்.
முத்தச்சா முத்தச்சா
திலீப் எழுப்பி முழுசாக ரெண்டு நிமிஷம் கழித்து எழுந்து உட்கார்ந்தவனின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
நீங்க போங்க தம்பி. என் கிட்டே வர வேணாம் இப்போ
திரும்பத் திரும்பச் சொன்னான் அவன். ஒன்றும் புரியாமல் நின்றான் திலீப். ஏதாவது தொற்றுநோய் பாதித்திருக்கலாம் என்று நினைப்பு.
இன்னிக்கு வேலைக்கு வரலே என்றான் வெடி வழிபாட்டுக்காரன்.
காலையில் ஒரு கூட்டம் வௌவால்கள் தாழப் பறந்து வந்து அவன் மேல் உட்கார்ந்து றெக்கை நாற்றத்தோடு அவனை எழுப்பினவாம். அப்போது அவன் கண்டு கொண்டிருந்த கனவில் திலீபும் வாட்டசாட்டமான ஒரு மதாம்மாவும், என்றால் சின்ன வயது வெள்ளைக்காரியும் வௌவால் தொங்கும் மண்டபத்துக்குள் போய்க் கொண்டு இருந்தார்களாம். அந்தப் பெண் திலீப்பின் இடுப்பில் தாழ்வாகக் கை வைத்து அணைத்திருந்த இடம் சரியில்லையாம். கண்ணூரில் வெடிக்காரனைக் கடித்த பட்டன் அப்படித்தான் ஆரம்பித்தானாம். இவள் பட்டன் இல்லை. பெண்பிள்ளை. கடிக்க எல்லாம் மாட்டாள் தான். ஆனாலும் ஜாக்கிரதையாக இருக்க வேணும் என்று எச்சரிக்கவே வெடிக்காரன் திலீப் பின்னால் வந்து கொண்டிருந்தானாம்.
வெடிக்காரன் கனவிலே, அந்த மண்டபத்துக்கு உள்ளே, பேப்பர் மில் மாதிரி என்னென்னமோ மெஷின் . ஆனா எதுவும் வேலை செய்யலே. எல்லா மெஷின் மேலேயும் அண்டங்காக்கா மாதிரி வௌவால் உட்கார்ந்திருக்கு. வாசல்லே கம்பி வலைக்கு அந்தப் பக்கம் ஆயிரம் பத்தாயிரம் பேர் கொடியோட நிக்குது. வேலாயுதன் நாயரும் தந்த்ரியும் அர்ஜுன நிருத்தத்துக்கு வந்த பதினேழு பேரும், செண்டையோடு மாராரும் அந்தக் கூட்டத்தில் அடக்கம். எல்லாரும் நின்று ஜிந்தாபாத் சொல்லி எதற்கோ போராடுகிற விஸ்தாரமான கனவாம் அது.
வெகு பின்னால் இருந்து கத்தியை ஓங்கிக் கொண்டு ஒருத்தன் நீலச் சட்டையும் கிழிந்த கால் சராயுமாக ஓடி வந்ததில் கனவு முடிந்ததாம். அவன் அலறிக் கொண்டே எழுந்திருக்கவும், வௌவால்கள் கருத்த அழுகி நாற்றமடிக்கும் சிறகு சிலிர்த்துப் பறந்து போனதாம்.
நீங்க போய் இன்னிக்கு ஆப்பீஸை அடைச்சுப் பூட்டுங்க. பணிமுடக்கு. யாரும் அர்ஜுன நிருத்தம் ஆடிக் காட்டவோ அரையிலே கடிக்கவோ வரப் போறது இல்லே. மதாம்மா யாரும் வந்தா பக்கத்திலே சேர்க்க வேணாம். பொம்பளை வேணும்னா நாளை ராத்திரிக்கு ஏற்பாடு செஞ்சு தருவானாம் அவன். சுத்தமா குளத்தில் குளிச்சு ஈரத் தலைமுடியோடு வர்ற, பல்லு விளக்கின பொண்ணு அது. சொன்னதைச் செய்யும். கண்ணூர் பட்டன் மாதிரி கடிச்சு கையிலே எடுக்காது.
வெடிக்காரன் பழைய கதையில் ஆழ்ந்து சுருண்டு படுத்துக் கொண்டபோது பணிமுடக்கு ஏற்படுத்தும் சந்தோஷத்துக்கு ஈடான இன்னொரு சந்தோஷத்தை அடைந்திருக்கிறதாக திலீபுக்குத் தோன்றியது. ஒரு ஆயுசுக் காலம் முழுவதும் அதுவே நினைப்பாகிப் போனது அந்தப் பாவம் மனுஷனுக்கு.
ஆபீசில் யாரும் வந்திருக்கவிலலை. வாசல் கதவில் ஏதோ செருகி இருந்தது கண்ணில் பட்டது. இண்லண்ட் லெட்டர்.
இந்த களேபரத்துக்கு நடுவிலேயும் போஸ்ட்மேன் வந்திருக்கிறார் போலிருக்கு. இல்லை, வேறே யாராவது நேற்றே வாங்கி இப்போது கொடுக்க வந்து, ஆள் இல்லையென்று கதவில் செருகிப் போயிருக்கலாம்.
அவனுக்கு வந்தது தான். அகல்யா எழுதிய இண்லாண்ட் லெட்டர். நுணுக்கி நுணுக்கி மராட்டியில் எழுதியிருந்த் கடிதம் அது.
பாண்டுரங்க விட்டலன், விடோபா, காண்டோபா சாமிகள் துணை. உங்க அட்ரஸ் சந்தேகமாக இருந்ததாலும் கேரளத்தில் அதுவும் நீங்க இருக்கும் கிராமத்தில் மலையாளமும் இங்கிலீஷும் இந்தியும் அல்லாத வேறே பாஷை தெரிஞ்சவங்க இருக்க வாய்ப்பு இல்லை என்பதாலும் நம் ரெண்டு பேருக்கு மட்டும் அர்த்தமாகும் மராத்தியில் எழுதியிருக்கேன்.
அம்மாவுக்கு ஈசனோபிலியாவுக்காக ஆஸ்பத்திரி போனது, திலீப்பை இறுகத் தழுவி கீழ் உதட்டைக் கவ்வி முத்தம் கொடுக்க ஆசை, தம்பி ஸ்கூல் பைனல் பரீட்சைகளில் வாங்கிய மார்க் விவரம், கூட்டம் இல்லாத ராத்திரி எலக்ட்ரிக் ரயிலில் திலீப் அவளிடம் செய்த விஷமங்களின் அட்டவணையும் அவற்றைப் பற்றிய நினைப்பும், தங்கை டைப் ரைட்டிங் படிக்க ஆசைப்படுவது, ஹால்டா டைப்ரைட்டர் சிலாக்கியமா ரெமிங்டன்னா, கல்யாணம் ஆனதும் ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் போக வேண்டிய அவசியம், பிட்மன் ஷார்ட் ஹேண்ட் புத்தகம் பழைய புத்தகக் கடையில் மலிவாகக் கிடைத்தால் வாங்கி வரணும், விவித்பாரதிக்கு போஸ்ட் கார்ட் போட்டு ஒலிபரப்ப வைத்த தேவ் ஆனந்த் சினிமா பாட்டு, ஆபீஸ் தோழியோடு சனிக்கிழமை சாயந்திரம் ரகசியமாகப் போன தாதா கோண்ட்கே மராத்திப் படம் ஐயே கர்மம், கேரளா சாப்பாடு தேங்காய் போட்டது ஆச்சே, ஒத்துக் கொள்கிறதா, அங்கே மதர்த்து திரிகிற பெண்கள் மயக்கிக் கூட்டிப் போய் ஆயுசு பூரா அடிமை ஆக்கி குளிக்கும்போது முதுகு தேய்த்து விடச் சொல்வார்கள் என்று மாடுங்கா சத்சங்கத்துக்கு ராஜிமாமியோடு திவசச் சமையலுக்கு ஆள் தேடிப் போனபோது பேச்சு அடிபட்டதால் கவனம் தேவை. இப்படி வளர்ந்து போன கடிதத்தை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான் திலீப். அகல்யாவை உடனே பார்க்கணும் என்று ஆசை மனதில் மூண்டெழுந்து வர, மேலும் படித்தான்.
கார்ப்பரேஷன் எலக்ஷனுக்கு கட்சி வேட்பாளர்களை முடிவு செய்கிறதாம். அடுத்த வாரத்துக்குள் திலீப் வந்தால் அவன் இருக்கும் வார்டுக்கு நிற்க வைக்க வாய்ப்பு இருக்குமாம். அவன் அரைகுறை மராத்திக்காரன் என்பதும் பூசி மெழுகப்பட்டு புது அடையாளம் கிடைக்கக் கூடுமாம். முடிந்தால் உடனே வந்து போகணும் என் ராஜா.
ராஜா ராணியைப் பார்க்கப் புறப்பட்டாச்சு.