வாழ்ந்து போதீரே – அரசூர் நான்குநாவல் தொகுதியில் நான்காவது நாவலில் இருந்து
=======================================================================
முதல் அறையைக் கடக்கும் போதே அவனைப் பெயர் சொல்லி யாரோ அழைக்கிற சத்தம். உள்ளே இருந்து வேகமாக வந்து அவன் கையை அன்போடு பற்றிக் கொண்டார் மிட்டாய் ஸ்டால் பாலகிருஷ்ண கதம்.
பெங்களூர் போனா திரும்பி வரவே முடியாதும்பா என் மகள். நீ அங்கே போய் ஒரேயடியா செட்டில் ஆயிட்டே போலே. உடம்பெல்லாம் தகதகன்னு சிவாஜி மகாராஜ் மாதிரி மின்னுது. நல்லா இருக்கே தானே?
கதம் ஜி, நான் கேரளம் போயிருந்தேன். பெங்களூரிலே இருந்து கிட்டத்தட்ட ஐநூறு கிலோமீட்டர் தூரம்.
அப்படியா, ஏதோ போ. நல்ல வேளை சரியான நேரத்துக்கு வந்தே. லிஸ்ட் முடிக்கற நேரம்.
கதம் முகத்தில் அலாதி மகிழ்ச்சியைக் கண்டான் திலீப். ஆக, மிட்டாய்க்கடை கவுன்சிலர் தான் திலீப் வார்டுக்கு இனி வாய்க்கப் போகிறதாக்கும்.
ஏய், நான் கவுன்சில் எலக்ஷன் நிக்கலே. இன்னும் ஒரு வருஷத்துலே அசம்பிளி எலக்ஷன் வருதே. நேரே எம்.எல்.ஏ தான். என் வயசுக்கு கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ளே குஸ்திச் சண்டை, தள்ளு முள்ளுன்னு தரையிலே கட்டிப் பிடித்து உருண்டு உதச்சு மெனக்கெட முடியாது.
ரொம்பப் பெருந்தன்மையாக அறிவித்தார் கதம். அவர் இல்லாவிட்டால்?
உன் பெயர் லிஸ்ட்லே இருக்கு. நம்ம வார்டுக்கு மூணு பேர் உண்டு.. உன்னைத் தவிர, ஸ்கூல் டீச்சர் ரகுநாத் காலே அப்புறம் ஒருத்தர்.
யார் நம்ம கணபத் மோதக் தானே?
அவனா, சோம்பேறி. பொறுக்கி மேஞ்சு சுத்திட்டிருப்பான். என் கடையிலே வேலை போட்டுக் கொடுத்தேன். பிடிப் பிடியா புஜியாவைத் தின்னு ரெண்டே நாள்லே நாலு கிலோ காயப். உடனே ஓட்டி விட்டுட்டேன் பன்னியை.
அவர் சிரித்தார். ஆனாலும் கவுன்சிலர் தேர்தலுக்கு வார்டில் டிக்கெட் கேட்கும் இன்னொருத்தர் யாரென்று சொல்லவில்லை.
உள்ளே போய் நமஸ்தே சொல்லிட்டு வர்லாமா? ஏன் வரல்லேன்னு அப்புறம் திட்டு கிடைக்கும்.
திலீப் கேட்டான். அங்கே யார் இருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியாது. என்றாலும் பாலகிருஷ்ண கதம் அவனுக்கும் இங்கே ஒரு பிடிமானம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லாக் கிரகமும் கூடி வந்து இவனுக்கும் கவுன்சிலர் பதவி கிடைத்து அவரும் எம்.எல்.ஏவோ மினிஸ்டரோ ஆனால், திலீப் மோரே என்ற பின்னணியில் ஆள் பலம், தலைமை ஆதரவு உள்ள கவுன்சிலர் அவருக்கு வலது கையாகச் சதா செயல் படுவான் என்பதை உணர வேண்டும்.
உள்ளே சின்னவர் தான் இருக்கார். போய் உடனே வந்துடு. பெரிய கூட்டம் காத்து நிக்குது உள்ளே போகறதுக்காக. மூட் வேறே சரியில்லே தலைமைக்கு. கட்சி ஆரம்பிச்சு வர்ற முதல் எலக்ஷன். அதான்.
கதம் காதில் சொல்லி அனுப்பி வைத்தார்.
கையில் கதம் கடையில் வாங்காத புத்தம்புது தூத்பேடாவோ, சரிகை மாலையோ கொண்டு வந்திருக்கலாம். மடுங்கா சங்கர மடம் வாசல் பூக்கடையில் ஜம்மென்று மல்லிகைப்பூ மாலை கூடப் புதிதாகக் கட்டியது கிடைக்கிறது. ஈரத்தோடு கொண்டு வந்து கழுத்தில் போட்டால் தெருவே மணக்கும்.
வேண்டாம். மதராஸித் தனத்தைக் கொஞ்சம் போலக் கூட வெளிப்படுத்தும் எந்த அடையாளத்தையும் இங்கே சுமந்து போகக் கூடாது. சரிகை மாலையும், வாசனை இல்லாத பூ நிறைய இடைவெளி விட்டுக் கட்டிய, நிற்கிற, நடக்கிற, மூச்சடங்கிக் கிடக்கிற யாருக்கும் பேதாபேதம் இல்லாமல் சூட்டி மகிழ்கிற உள்ளூர் ஆசாரத்துக்குப் பொருந்திய துலுக்கஜவந்திப் பூமாலையும் எதேஷ்டமாகக் கிடைக்கும். அதில் ஒண்ணு ரெண்டாவது.
பார்த்துட்டு சீக்கிரம் வந்துடுங்க. இன்னும் பத்து நிமிஷத்துலே சித்திவினாயக் கோவில் போயிட்டிருக்கார் சின்னவர். மகனுக்குப் பிறந்த நாள்.
யாரோ சொல்லியபடி அவனை முன்னால் செலுத்தினார்கள்.