மலையாளக் கரையில் போன மாசம் வரை சர்க்காருக்காக இதே உத்தியோக கைங்கரியம் தான் செய்து வந்ததைக் குறிப்பிட்டு விளக்கினார்.
அங்கே சமுத்திரக் கரையில் ஒரு அம்பலம். அவங்க மொழியிலே கோவில். கோவில்லே பூசை வைக்கிற குருக்கள் வீடெல்லாம் கோவில் பக்கம். பெரிய குருக்களை மேல் சாந்தின்னு சொல்வாங்க. அவரோட வீட்டம்மா காலேஜ் வாத்திச்சியா இருந்து ரிடையர் ஆனவங்க. வீட்டுலே டெல்லி டிரான்சிஸ்டர் ரேடியோ உண்டு. அவங்க பாடுன்னு சொன்னா பாடும். பேசுன்னா பேசும். சும்மா இருன்னா இருக்கும். யட்சினி வேலை அடச்சு வச்ச பெரிய பெட்டி. சரியாப் பாடலேன்னு லைசன்ஸ் கட்டலே. நான் கண்டு பிடிச்சு உடைச்சுப் போடப் போனேன். மலையாளத்திலெ பெரிய விவாதம் எனக்கும் அந்த அம்மாவுக்கும். சோழி உருட்டி எல்லா குருக்களும் அவங்க தான் ஜெயிப்பாங்கன்னாங்க. ஆனா, கடைசியிலே சர்க்காருக்குத் தான் ஜெயம்.
மலையாளத்தில் பேசிப் பாடிய, கோவில் வீட்டம்மா சதா கேட்டுக் கொண்டிருந்த பெரிய பெட்டியை உடைத்துப் போட்ட தன் விரல்களைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டார் அவர்.
.அதெல்லாம் சரிதான், ஆனால், ரேடியோ இல்லாவிட்டால் நிறைய காரியம் கவனிக்க முடியாது என்பதை எல்லோரும் ஏகோபித்துச் சொன்னார்கள். சாப்பிடும் போது செய்தி அறிக்கை, பகல் நேரத்தில் சினிமா கானங்கள், சாயந்திரம் வித்துவான்களின் வாத்திய சங்கீதம் இதெல்லாம் இல்லாத வாழ்க்கை அலுப்படையச் செய்யக் கூடும், ஊரே இல்லாமல் போகலாம், அப்புறம் லைசன்ஸ் கட்ட ரேடியோ ஏது என்று பரவலான அச்சம் தெரிவிக்கப் பட்டது.
ரேடியோ இல்லேன்னா நல்லது நடக்கும்ங்கறதுக்கு ஒரே உதாரணம், அப்போது நம்ம பஞ்சு அண்ணா சொல்ற ராமாயணம் கேட்க நிறையக் கூட்டம் வரும்.
சிஷ்யர்களில் ஒருவர் புளகாங்கிதமடைந்து இரு கையும் தூக்கிக் கூப்பியபடி சொன்னார். அவருடைய கம்புக்கூட்டில் ரோமத் திரளை அருவருப்போடு பார்த்த ரேடியோக் காரர் திரும்புவதற்கு முன், அந்த சிஷ்யன், அதோ அந்த மயில்கள் போல ஆட வேண்டும் என்று பாடியாடி மற்றவர்களையும் கைகளை உயர்த்திப் பாடி ஆடச் சொன்னார்.
அக்குள்களின் அணிவகுப்பை எதிர்கொள்ளப் பயந்தவராக ரேடியோக் காரர், நல்லது, நான் நாளைக்குக் கதை கேட்க வருகிறேன் என்று சொல்லி வந்தவர்களை அனுப்பி வைத்தார். அது வேறே எங்கோ அழைத்துப் போகும் என்று அப்போது யாருக்கும் தெரியாது.
சொன்னபடி அவர் மறுநாள் வெள்ளியன்று கதைப் பந்தலுக்குப் போனார். பாரம்பரிய உடை தரித்து வராவிட்டாலும் ரேடியோக் காரர் மாட்டியிருந்த கால் சராய் உடம்போடு ஒட்டி விஜயசேனன், பிரஜாசேனன் போன்ற பெயர்களுடைய ராஜகுமாரர்கள் கோட்டுச் சித்திரமாக்ச் சிறுவர்களுக்கான கதைப் புத்தகங்களில் உடுத்திக் காணபபடுவது போல தெரிந்தது. அவர் சமயவேலாகத் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார்கள் அவரை வரவேற்ற சிஷ்யர்களும் ஒற்றை சிஷ்யையும்.
ரேடியோக் காரர் கையில் ஒரு கிடாரங்காயைக் காணிக்கை கொடுக்க வைத்திருந்ததையும் கூட்டத்தினர் கவனிக்கத் தவறவில்லை. முழுக்கப் பழங்களைக் காணிக்கையாகத் தராமல் காய்கறிகளையும் காப்பிக் கொட்டை, வெண்ணெய், பால், தயிர், நல்லெண்ணெய் போன்ற உன்னத உணவுகளையும் தரச் சொல்லிக் கதை கேட்க வருகிறவர்கள் சிஷ்யர்களால் ஊக்குவிக்கப் படுவது நடப்பதே. சிலர் அன்பின் மிகுதியால், வீட்டில் சமைத்த பொருட்களையும், கோழி முட்டை போன்ற வஸ்துக்களையும் எடுத்து வருவதைத் தடுப்பதும் அவர்களின் வேலையாக இருந்தது.
எனினும் இதுவரை எண்ணெயும் கார மிளகாயும் சேர்த்து ஊறுகாய் போட கிடாரங்காய் யாரும் காணிக்கை அளிக்கவில்லை என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தார்கள்.சேர்மானங்களையும் காணிக்கை வைத்திருக்கலாம் என்று ஒரு சிஷ்யர் மெல்லிய குரலில் அபிப்பிராயப்பட, உடனே அவர் நிறுத்தப்பட்டார்.
வந்தவருக்கு எங்கிருந்தோ ஒரு மர முக்காலி கொண்டு வந்து ஆசனமாகப் போடப் பட்டது. அவரை முன் வரிசையில் அமரச் சொல்லியும் அன்றைய கதை முடிந்ததும் உபசாரமாகச் சில வார்த்தைகள் பேசச் சொல்லியும் அப்படியே ரேடியோ லைசன்ஸைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து ஒரு பரவலான தெளிவை உண்டாக்கும் படியும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
ஒரு புன்முறுவலோடு அவர் அவர்களுடைய கோரிக்கைகளை, அவற்றில் முக்காலி தவிர மற்றவற்றை அங்கீகரித்தார். திரைக்குப் பின்னால் ஆவலோடு பார்வை நிலைக்க, கையில் பிடித்த
கனமான குரலில் சிஷ்யகோடிகள் முன்னோடியாக வழக்கமாகப் பாடப்படும் தோத்திரப் பாடல்களைப் பாடி முடித்து ஒரு நிமிடம் இடைவெளி விட்டு பஞ்சாபகேச சிரௌதிகள் குரல் கொரகொரவென்று மெதுவாக ஒலிக்க ஆரம்பித்தது. இரண்டு நிமிடம் பேசி அது ஓய, பின்னால் பட்டுத் துணி விரிப்பில் பத்மாசனம் இட்டு அமர்ந்திருந்த சிஷ்யை தொண்டையைக் கனைத்துக் கொண்டு கம்பீரமாக அவர் விட்ட இடத்தில் தொடங்கினாள்.