வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி
என்றாலும் இன்றைக்கு அதிகாலை நாலு மணிக்கு மதுரைக்குப் போவதற்காக எழுந்ததும் கொச்சு தெரிசாவிடம் அழுத்தமான குரலில் சொன்னான் முசாபர் –
இங்கே நீ எதுக்காக வந்திருக்கேன்னே மறந்துட்டிருக்கே. இங்கிலாந்து பிரஜை நீ. இங்கே வீடு வாங்கறது கஷ்டம். அப்படியே கிடைச்சாலும் வீட்டுச் சொந்தக்காரனை மீனும் வறுவலும் விற்றுச் சேர்த்த உன் பணத்தாலே அடிச்சு வாங்கினதாத்தான் இருக்கும். அவனோட சோகம் உன்னைச் சும்மா விடுமா என்ன. சரி, எல்லாம் சரியா அமைஞ்சாலும், எதுக்கு இங்கே வீடு உனக்கு? ஊருக்குப் போற எண்ணமே இல்லையா? அமேயர் பாதிரியார் இதோட ஒரு முழு மாசம் நம்ம கடையையும் வீட்டையும் ஆள் அம்பு விட்டு நிர்வாகம் செஞ்சுக்கிட்டிருக்கார். அவர் வாடிக்கனுக்குப் போனதும் அதுக்கெல்லாம் ஆள் இருக்காது தெரியுமில்லே. நம்ம விசாவும் முடிஞ்சுட்டிருக்கு. ஊர் பார்த்தது போதும். வா, கிளம்பலாம். மயில் பறக்கட்டும். இறங்கட்டும். நிக்கட்டும். ஆடட்டும்.. அது இங்கே ஆடட்டும். இஷ்டப்பட்டால் கால்டர்டேலுக்குப் பறந்து போய் நம்ம வீட்டு வாசலில் தோகை விரிச்சு ஆடட்டும். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ஒரு நிமிஷம் நிற்போம். அப்புறம் மார்க்கெட்டுக்கு மொத்த கொள்முதலாக மீன் வாங்கவும் வறுவல் வாங்கவும் நடப்போம். மயில் ஏன் ஆடினதுன்னு தெக்கே பரம்பில் பாதிரியார் சொல்லற அறிவுத் தேடல் எல்லாம் நமக்கு எதுக்கு? தொடர்புகளை ஏன் இங்கே உன் வம்சத்தோட வரலாற்றிலே தேடிக் காலத்தை வீணாக்கணும்? உன்னோட வேர் அம்பலப்புழையிலேயும் இந்த அரசூரிலும் இருக்கலாம். அதைத் தேடிப் பிடித்து என்ன சாதிக்கப் போறே? அந்தத் தகவல் இல்லாமலேயே நாம் இத்தனை வருஷம் மூச்சு விட்டாச்சு. இனியும் அதுக்குத் தேவை கிடையாது. தேடிட்டுத் தான் இருப்பேன்னா உன் இஷ்டம். நான் குறுக்கே வரமாட்டேன்.
இவ்வளவு பேசியதற்காக சிரம பரிகாரம் செய்து கொள்ளவோ என்னமோ சரியான நேரத்தில் முசாபரி பங்களா சிப்பந்தி இடுப்பில் குறுக்கே டவாலி என்ற அலங்காரப் பட்டை அணிந்து ஒரு சிறிய பித்தளை அண்டாவில் தேநீர் எடுத்து வந்து முசாபரிடம் கொடுத்தான். அவன் கையில் வைத்திருந்த பிரம்மாண்டமான பித்தளைத் தாம்பாளத்தில் இருந்து இன்னொரு கொதிகலன் தேநீரை கொச்சு தெரிசாவுக்கும் நீட்டி விட்டு அவளைப் பணிவோடு கேட்டான் –
கலெக்டர் அம்மா, பசியாற என்ன எடுத்தாரட்டும்?
அவளைக் கலெக்டர் என்று தானும் சொல்லி முசாபர் அப்போது சிரிக்க ஆரம்பித்ததை மதுரை வந்து சேரும் வரை நிறுத்தவில்லை.