வாழ்ந்து போதீரே = அரசூர் நான்காம் நாவல் — அடுத்த சிறு பகுதி
குதிரை வண்டியைக் கூப்பிடுங்க. மாரட் தெருவுக்குப் போயிடலாம். வழியிலே பத்து நிமிஷம் நிறுத்தினா காலைச் சாப்பாடும் முடிச்சுக்கலாம்.
கொச்சு தெரிசா விருப்பப்படி, வரிசையாக நின்ற வண்டிகளில் முதலாவது இவர்கள் ஏற நகர்ந்தது.
வண்டிக் கூலியும், பேசிப் பழக மொழியும் இசைந்து வந்ததில் குதிரை வண்டிக்காரனுக்கு சந்தோஷமோ என்னமோ, வண்டியில் பூட்டியிருந்த கருப்புத் தோல் போர்த்த குதிரை துள்ளி ஓடியது.
மேலமாசி வீதியில் சுமாரான சுகாதாரத்தோடு இருந்த ஒரு கடையில் மெத்தென்ற இட்டலிகளும், புதினா அரைத்த துவையலும், காப்பியும் வயிற்றுக்காக்கி விட்டு அவர்கள் வித்துவான் ஆதினமிளகியைச் சந்திக்க மாரட் தெருவுக்கு வந்தார்கள். தியாகராஜ சாஸ்திரிகள் அறிமுகக் கடிதம் கொடுத்து விட்டிருந்தார் ஆதீனமிளகி வித்துவானுக்கு. தங்கள் குடும்பமும் வித்துவான் குடும்பமும் நாலு தலைமுறை சிநேகிதர்கள் என்று கொச்சு தெரிசாவிடம் சொன்னார் தியாகராஜன். எப்படி அது வாய்த்தது என்று குடும்ப மரம் வரைந்து பார்த்தால் புலப்படலாம் என்றார் அவர். உலகில் விடை காண முடியாத சிக்கல்கள் சிலவாவது குடும்ப மரங்கள் மூலம் தீர்ந்து விடும் என்று அவர் நம்பத் தொடங்கி இருந்தார். அவர் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது –
இந்தக் கடிதம் கொண்டு வரும் சௌபாக்கியவதி கொச்சு தெரிசா என்ற ஸ்ரீமான் முசாபர் சாகிப் அவர்களின் தர்மபத்தினி லண்டன் பட்டணத்தில் இருந்து தம் பிதாமகருடைய புஸ்தகத்தை அச்சுப் போட வந்திருக்கிறாள். மலையாள லிபியும் தமிழ் கீதமுமாக இருக்கும் அந்த கிரந்தத்தைப் பரிசோதித்து தேவரீர் கருத்துச் சொல்ல வேணும் என பிரார்த்திக்கிறேன். அச்சுப் போடவும் உதவி தேவை. பணம் பற்றிக் கவலை வேணாம். இடுப்பில் முடிந்த வராகன், தங்கக் காசோடு தான் வந்திருக்காள் அம்மாளும் புருஷனும். இவாள் டில்லி சர்க்கார் ஆபீஸ் மேலதிகாரி சங்கரய்யர் என்ற, உங்களைப் போல் என் உற்ற சிநேகிதரான அரசூர்க் காரருக்கு தாயார்வழி உறவு என்று அறிகிறேன். வேணும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கிருபை.
அன்போடு வரவேற்ற வித்துவான் பச்சைத் தலைப்பாகையும், காதில் துளசியும் மூலக்கச்ச வேட்டியுமாக இருந்தார். அறுபது வயசென்றார். அறுபதிலும் ஒரு நாள் கூட மீனாட்சி கோவிலுக்குப் போனதில்லை என்றார். பெருமாள் கோவிலைத் தேடிப் போய்த் தொழுதேத்தும் பரம்பரை என்றார். பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராக இருந்த போதும் ஓய்வு பெற தற்போதும் எழுதுவதே தன்னை வாழ வைக்கிறதென்று நல்ல இங்கிலீஷில், உச்சரிப்பு சுத்தத்தோடு, ஆணித் தரமாகச் சொன்னார்.