வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது
அதிலிருந்து அடுத்த சிறு பகுதி
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
ராஜா முந்திக் கொண்டு தான் ஏன் அங்கே இருக்கிறேன் என்பதற்கு யாரும் கேட்காமலேயே காரணம் சொன்னார். கிழவன் எதுக்கு வந்திருப்பான் என்று அவருக்குத் தெரியும். கூட்டத்தில் கலந்து இருக்கப்பட்ட நடுவாந்திர வயசுப் பெண்டுகளிடம் சில்மிஷம் செய்ய இல்லாமல் வேறே எதுக்கு? அவன் உயிரோடு இருந்த காலத்தில் ரெண்டு பேரும் அபூர்வமாக உட்கார்ந்து சீமைச் சாராயம் மாந்திக் கொண்டிருந்த ஒரு சாயங்காலத்தில் கிழவன் பெருமையோடு சொன்னது நினைவு வந்தது ராஜாவுக்கு –
மாப்பிள்ளே, வயசாகிட்டு இருக்கில்லே. மனசும் அதுக்கு ஏத்த மாதிரி தானே மாறிக்கும் பாத்துக்குங்க. முன்பெல்லாம் வடிவா ஒரு சின்னக் குட்டிப் பொண்ணும் கூடவே மத்திய வயசுக்காரி அவ ஆத்தாளும் சேர்ந்து வந்தா, கண்ணும் மனசும் சின்னஞ்சிறிசு மேலே தான் விழும். இப்போ? கொப்பும் கொழையுமா நடு வயசுலே நிக்கறாளே அம்மாக்காரி, மாசாந்தர தீண்டல் நின்னா வர்ற சௌந்தரியம் அது. அதுலே தான் மனசு போய் தலை குப்புற விழுது. தனி வாசனை அந்த உடம்புக்கு, கேட்டுக்குங்க. அனுபவப்பட்டா, சேடிப் பொண்ணு எல்லாம் என்ன பிரமாதம்னு தோணும், போக வாசனை.
சேடிப் பெண்ணோடு ராஜாவின் பிற்பகல் விளையாட்டு விவரங்கள் தெரிந்த திமிரில் முறுவல் பூத்துக் கொண்டு கிழவன் அப்போது சொன்னான். அவன் அதே சேடியை வாய் உபச்சாரம் செய்யச் சொல்லி வற்புறுத்தியது பின்னால் தான் அந்தப் பெண் மூலமாக ராஜாவுக்குத் தெரிய வந்து கிழவனை ஜமீன் அரண்மனையில் இருந்து உடனே புறத்தாக்கினான் அப்போது.
கிழவன் இங்கே எந்த வயசில் பெண் தேடி வந்தானோ. யாராக இருந்தாலும் அவன் காலத்துக்கு நூறு, நூற்றைம்பது வருஷம் அடுத்து வந்தவர்களாக இருக்கும். அந்த விஷயம் புரியாமல் ஏதாவது திரிசமன் செய்து வைத்தால்?
அவனுடைய சாவைக் கோலாகலமாகக் கொண்டாடி நாற்றம் பிடித்த கிழட்டு தேகத்தைப் புதைக்க எடுத்துப் போக என்று கழிந்த நேரம் ராஜா நினைப்பில் உடனடியாக வந்து நின்றது, கிழவனின் சடலத்தைப் படம் எடுக்கிறேன் என்று நூதன வாகனக் களவாணிகள் அப்போது கிளம்பியபோது, நட்டுக் குத்தலாக உட்கார வைத்த பிணமாக சேடிப் பெண்ணின் மடியில் விழுந்து மாரில் கையளைந்தவனாச்சே இந்தப் பொல்லாத கிழவன். ஆவி போனாலும் ஆசை போகாதவன் அல்லவோ இவன். கையைக் காலை வைத்துக் கொண்டு இந்த மலையாள பூமியில் சும்மா இருப்பானோ.
எதுக்கு பழங்கதை எல்லாம்? வந்தோமா, வந்த இடத்துலே வேடிக்கை பார்த்துட்டுப் போனோமா என்று இருக்காமல் எதற்கு வம்பு வலிக்கணும்?