வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவதில் இருந்து அடுத்த சிறு பகுதி
கூம்பு கூம்பாகப் பிடித்துக் கூரை வைத்த இந்த மரக் கட்டிடம் தான் இந்த பூமியிலே கோவில்னு கூட எனக்குத் தெரியாமப் போச்சே என்று ராஜா உள்ளுக்குள் மருகினார்.
அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அம்பலம்
எப்போதும் அரண்மனையிலேயே சுக்குத் தட்டிப் போட்டு வெந்நீர் குடித்துப் பிருஷ்டத்தில் தட்டித் தட்டி வயிற்றில் இருந்து வாயு இறங்கிக் கிரமமாகக் கழிக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டு, முன்னோர்களுக்கு சாராயமும் கோழிக் கறியும் கொண்டு போய்ச் சேர்க்க ஜோசியக்கார அய்யரின் யந்திரங்கள் மூலம் முயற்சி செய்து கொண்டு, கும்பினி துரை கிடுக்கிப் பிடி போட்டு வரி கொடுக்கச் சொல்லும் பொழுதில், அதைக் கொடுக்க ராஜ்ஜியத்தில் வழியற்றுப் போனதால் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்து காரியஸ்தனைக் கொண்டு லிகிதம் எழுதிக் கொண்டு, ராணியோடு அருகில் படுத்து சும்மா சகசயனமாக உறங்கிக் கொண்டு, அபூர்வமாகக் கிட்டும் பகல் நேரங்களில் சேடிப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்து அவள் வாயில் அடிக்கும் கருவாட்டு வாடையில் லகரி ஏற அவள் காலைப் பிடித்து மடியில் போட்டுப் பிடித்து விட்டுக் கொண்டு ஒரு ஜீவிதம் எப்போ முடிய என்று முன்னால் அவசரமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கோவிலையும், குளத்தையும், பாயசத்தையும் அவரெங்கே அறிவார்.
மகாராஜா, பிழிச்சல் எடுத்துக் கொண்டு போகலாமா? சமூகம் ரொம்பவே தேகம் தளர்ந்த மாதிரி இல்லையோ தோணுது.
பனியன் சகோதரர்கள் மரியாதையோடு ராஜவிடம் விசாரிக்க, முன்குடுமிக் காரர்கள் நாலைந்து பேர் செடியும், கொடியுமாகக் கையில் சேர்த்துப் பிடித்துக் கொண்டு வெகு மும்முரமாகப் படிகளில் ஏறி, இறங்கி அலைந்து கொண்டிருந்த மூன்று நிலை பங்களா ஒன்று எதிர்ப்பட்டது. வாசலில் ஜிலேபி பிழிந்து எழுதி வைத்திருந்தது என்ன என்று தெரியவில்லை ராஜாவுக்கு. களவாணிகள் சொல்கிற பிழிச்சலா அது?
ஆயுர்வேத வைத்தியசாலை மாப்ளே. வாங்க. உடம்பு நேராக்கிட்டு வருவோம்.
துள்ளிக் குதித்துச் சற்றே மிதந்து, உள்ளே வேட்டி உடுத்து நின்ற பெண்டிரை ஆசையோடு பார்த்தபடி போகிற கிழவனையே பார்த்தபடி நின்றார் ராஜா.
இவன் மலையாளம் எங்கே படித்தான்? தினப்படிக்குப் பால் பாயசம் அருள்கிற கடவுள் தான் இந்தப் பெண்களை இவனிடம் இருந்து காப்பாத்தி ரட்சிக்கணும்.