எல்லாத் திசையும் இழுபட்டுக் கன்று போல கொண்டு செலுத்தப்படும் மகாராஜா

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -அடுத்த சிறு பகுதி\

மகாராஜா இங்கே வர உத்தரவாகணும்.

 

பனியன் சகோதரர்கள் அவசரமாக விளிக்க, அவர்களைப் புறக்கணித்து ஒய்யாரமாக உள்ளே நடந்தார் ராஜா. சந்தோஷமாக கருப்புச் சால்வை போர்த்திக் கொண்டு கிழவனும் போனான்.  அவசரமாக வேடமணிந்து ஆட வந்த தெருக்கூத்துக் கலைஞர்கள் போல ரெண்டு பேரும் தெரிந்தார்கள்.

 

நாடகக் காரங்க தானே? அந்த வரிசை.

 

வாசலில் நின்று கைக்குட்டையில் புதைத்துப் பிடித்து பீடி புகைத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடிக்காரர் ராஜாவை நிறுத்திச் சொன்னார். அவர் பார்வை ராஜா பின்னால் நின்ற கிழவன் மேலும் பட்டுப் படர்ந்தது.

 

என்ன மொழி?

 

அவர் கேட்க, கிழவன் உற்சாகமாகத் தமிழ் என்று சொல்ல உத்தேசித்த போது, வாசலில் ஏதோ வண்டி வந்து நின்றது. ராஜா வந்த நூதன வாகனம் போல ஆனால் மேலே கூரை இல்லாமல் பச்சைப் பசேல் என்று இருந்த ஊர்தி அது. அந்த வர்ணம் ராஜாவுக்கு சண்டை சச்சரவு, யுத்தம், ஆள் சேதம் என்று சம்பந்தமே இல்லாமல் கெட்ட நினைப்பை மனசில் விதைத்தது.

 

பூர்த்தி செஞ்சு கொடுங்க.

 

உத்தியோகஸ்தன் ராஜா கையில் காகிதத்தைத் திணிக்க, பின்னால் இருந்து யாரோ மரியாதையே இல்லாமல் அவருடைய தோளைப் பிடித்து ஓரமாக இழுத்து நிறுத்தி வேறே யாரோ உள்ளே போக வழியமைத்துக் கொடுத்தார்கள். நூதன வாகனத்தில் வந்து இறங்கியவர்களுக்காக அந்த வழி.

 

வெள்ளை வேட்டி அணிந்து ஓங்கு தாங்காக ஒருத்தன் கோட்டையூர், செட்டிநாடு, புலியடிதம்மம், சக்கந்தி முகக் களையோடு உள்ளே நடக்க, திருமய்யம் பையன்னு நினைக்கறேன் என்றான் ராஜா காதுக்குள் கிழவன்.

 

பனியன் சகோதர்கள் அதற்குள் ராஜா பக்கம் நெருங்கியிருந்தார்கள்.

 

மினிஸ்டர் போறார். ராஜா காதில் கிசுகிசுத்தான் பனியன் குட்டையன். ராஜா புரியாமல் பார்க்க, இன்னொருத்தன் சமாதானமாகச் சொன்னான் – நீங்க வந்திருக்கற இந்தக் காலத்திலே இவங்க தான் ராஜா, சக்கரவர்த்தி எல்லாம்.

 

யாரு இந்தக் கருத்த பயலா?

 

ராஜா சத்தமாகக் கேட்க, அவமரியாதை என்றாலும் அவர் வாயைத் தன் நாற்றமடிக்கும் கையால் பொத்தி ஓரமாக அவரைத் தள்ளிப் போனான் நெட்டையன் பனியன்காரன். சமூகம் மன்னிக்கணும் என்று கெஞ்சல் வேறே.

 

கன்று போலக் கொண்டு செலுத்திய படிக்கு இழுபட்ட ராஜா அவனை எல்லா கெட்ட வார்த்தையும் பிரயோகித்து தாழ்ந்த குரலில் வசைபாட, மினிஸ்டனோடு வந்த ஒரு சின்ன வயசு அய்யன் அங்கே என்ன சத்தம் என்று இந்தியிலும் தொடர்ந்து இங்கிலீஷிலும், கூடவே தமிழிலும் கேட்டான்.

 

அவனையும் தன்னுடைய வசவு வளையத்தில் சேர்க்கும் முஸ்தீபோடு ராஜா தொண்டையைச் செரும, ரெண்டு பனியன்களும் ஆளுக்கொரு காதாக அவரிடம் அவசரமாகச் சேதி சொன்னார்கள் –

 

மகாராஜா அவர் பகவதி அம்மா பெயரன். சின்னச் சங்கரன். தில்லியிலே பெரிய அதிகாரி. மினிஸ்டரே அவர் சொல் கேட்டுத்தான் நடந்துப்பார். இதெல்லாம் நீங்க இருக்கப்பட்ட காலத்துக்கு நூறு வருஷம் அப்பாலே.

 

சட்டென்று ராஜாவின் மனநிலை மாறிப் போனது. இன்னும் இன்னும் என்று மனதில் ஊறி வந்து வாத்சல்யம் பொங்கித் ததும்பியது. உள் வாசல் நிலையைக் கையால் பற்றி நின்று பேசும் பகவதி அம்மாளின் பெயரனுக்குத் தான் இருந்த இடத்தில் இருந்தே ராஜா ஆசிர்வாதங்களைப் பார்வையால் கடத்தினார். கிழவனும் அவன் பங்குக்கு ஏதோ சீன மொழி மாதிரியான பாஷையில் கடகடவென்று வாழ்த்துச் சொன்னான். என்ன எல்லாம் கற்று வைத்திருக்கிறான் வங்காப்பயல் விளங்காமூதி இந்தக் கேடுகெட்ட கிழவன்!

 

அந்த அதிகாரிப் பையன் வாசலில் மரமேஜை போட்டு உட்கார்ந்திருந்த உத்தியோகஸ்தர்களிடம் ஏதோ சொல்ல, ஒருத்தன் உள்ளே ஓடி ஒரு மாணப் பெரிய  உலோக விசிறியைக் கொண்டு வந்து வைத்துக் கருப்புக் கயறு இழுத்து எங்கோ எதையோ செருக, அது பெருஞ்சத்தத்தோடு சுழல ஆரம்பித்ததை ராஜா ஆச்சரியத்தோடும் அபிமானத்தோடும் பார்த்தார்.

 

May 7 2024

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன