வாழ்ந்து போதீரே -அரசூர் நாலு தொகுதி நாவல்களில் நான்காவது – அடுத்த சிறு பகுதி
பகவதியம்மா பேரனா கொக்கா. என்ன மாதிரியான யந்திரங்கள் சகிதம் வந்திருக்கான். ஜோசியக்கார அய்யரும் இருக்காரே, யந்திரம் ஸ்தாபிக்கணும், கணக்கு போடணும்னு அலைஞ்சுக்கிட்டு. அதில் ஒரு யந்திரமாவது இப்படிச் சத்தம் போட்டுச் சுழன்று வெக்கைக் காற்றைப் பரத்தியிருக்கா?
அய்யர் கிடக்கட்டும். அவர் இல்லாவிட்டால் புஸ்தி மீசைக் கிழவ்ன சாவுக்கு சகலமான கிரியைகளும் செய்து அவனை மேலே அனுப்பியிருக்க முடியாதுதான் என்று ராஜாவுக்குப் பட, யார் மேலும் விரோதமில்லை என்ற பாவனையோடு நரை மீசையை நீவியபடி பெருந்தன்மையாகச் சிரித்தார்.
யப்ளிகேஷன் எழுதணுமோ?
யாரோ மூச்சுக் காற்றில் தேங்காயெண்ணெய் மணக்க ராஜாவை நெருங்கி நின்று அவர் கையில் பிடித்திருந்த காகிதத்தைக் காட்டிக் கேட்டார்கள். ராஜா அது இங்கே வந்து தங்க அனுமதி கேட்டு சர்க்காருக்குத் தர வேண்டிய கடுதாசு என்று நினைத்ததோடு அல்லாமல் கேட்டவன் அதியுன்னதமான சர்க்கார் உத்தியோகஸ்தன் என்றும் தீர்மானித்து ஆமாமென்றார். தொடர்ந்து மனுவில் எழுதத் தன் பெயரை எல்லா விருதுகளோடும் சொல்லத் தொடங்க, குறுக்கே விழுந்து நிறுத்திப் போட்டான் குட்டை பனியன்.
அவர் நாடகக் காரர் இல்லே. மகாராஜா என்றான் குட்டையன், யாரை என்று இல்லாமல் முறைத்துக் கொண்டு.
அதெல்லாம் சரி, பரிபாடியிலே இருக்கணும்னா யப்ளிகேஷன் தேவை.
உறுதியாகச் சொன்னான் வந்தவன்.
வேடிக்கை பார்த்துப் போகத்தான் வந்தோம். அதுக்கெதுக்கு அனுமதி எழவு?
ராஜா குரல் உயர்த்திச் சொல்வதைக் கேட்டு உள்ளே போகத் தொடங்கிய பகவதி அம்மாளின் பேரனான அதிகாரி திரும்பினான். ராஜாவைப் பார்த்து அவன் சிரித்த மாதிரி இருந்தது.
பக்கத்திலே வந்து தமிழா என்று அவன் கேட்க, கண் நிறைந்து போன ராஜா, சகல நலனும் பெற்று நல்லா இருப்பா என்று வாய் நிறைய வாழ்த்தினார்.
பகவதி அம்மாளின் பேரன் தன் தில்லி சர்க்கார் அதிகாரி தோரணையை ஒரு வினாடி கழற்றி வைத்து விட்டு ராஜாவின் கரத்தைப் பற்றி மரியாதையோடு பெரியவா எந்த ஊர்லே இருந்து வராப்பலே என்று கேட்டான்.
அரசூர் என்றான் புஸ்தி மீசைக் கிழவன். அதிகாரி ஆச்சரியத்தை முகக் குறிப்பில் காட்டி, நானும் தான் என்று சொல்லி உள்ளே போனார்.
தெரியுமே என்று ராஜா முழங்கியது அவர் காதில் விழுந்திருக்காது தான்.
வெளியே ஏதோ ஆரவாரம். என்ன சங்கதி என்று ராஜா நோக்கினார். ஜோசியக்கார அய்யர் கெத்தாக நடந்து வர, சவரக் கத்தி என்ற ஒன்றே இருப்பது தெரியாத தாடி மண்டிய முகத்தோடு நாலைந்து வெள்ளை வேட்டிக்காரர்கள் அட்டையில் செருகிய காகிதங்கள் சகிதம் அய்யரைச் சுற்றி ஆதரவாக நடந்து வந்தார்கள். அவர்கள் பார்வையில் பரபரப்பு தெரிந்தது.
இந்த அறிஞர் ஷட்கோண மற்றும் எண்கோண யந்திரங்களை அர்ஜுன நிருத்தம் நடக்கும் இடத்தில் நிறுவுவது குறித்துக் கணக்குகள் போட்டு வைத்திருக்கிறார். அந்த யந்திரங்கள் மயில்களை அழைத்து மேகங்களையும் கொண்டு வந்து நிறுத்தி வேண்டிய அளவு மழை பெய்விக்குமாம்.
அய்யர் கூட வந்த இளைஞன் சொல்ல, மரமேஜை உத்தியோகஸ்தன் தலையைக் குலுக்கிக் கொண்டு அபிப்பிராயப்பட்டது இந்தத் தோதில் –
அப்படி எனில் அது எதுவும் இங்கே வேண்டாம். மழை பெய்து நாலு நாள் பரிபாடி அஸ்தமிச்சா, பிரச்ச னை ஆகிடும். பணப் பட்டுவாடா முடங்கும்
May 9 2024
ல்