அதென்ன பரிபாடி? கூட்டமாகச் சேர்ந்து பாடுவதா?

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி

ரொம்ப மழை எல்லாம் இல்லே. ரெண்டு நிமிஷம் சாஸ்திரத்துக்குப் பெஞ்சுட்டு ஓஞ்சுடும்.

 

ஜோசியக்கார அய்யர் நைச்சியமாகச் சொன்னார்.

 

டெல்லி ஆபீசரைக் கேக்கணும். மத்திய சர்க்கார் பரிபாடி. ராஜ்யத்துக்கு இதிலே ஒண்ணும் தால்பர்யமில்லே.

 

அதிகாரி தீர்மானமாக அறிவிக்க, உள்ளே இருந்து அந்த அரசூர் அதிகாரி திரும்ப வந்தார். எல்லாத் தரத்திலும் மனுஷர்களை இன்று சந்திக்கும் பேறு பெற்ற சந்தோஷத்தோடு சரி வைச்சுக்கலாம், அரை மணி மட்டும் என்று சொல்லி அவர் போகிற போக்கில்  ராஜா இன்னொரு ஆசிர்வாதத்தை ஊதிவிட ஏற்று வாங்கிப் போனார்.

 

அய்யர் ஏதோ காகிதத்தில் கையெழுத்துப் போட அவரிடம் ஒரு சாவி கொடுக்கப் பட்டது.

 

இந்த முறியிலே நீங்க தங்கி இருந்து சிரம பரிகாரம் செஞ்சு பின்னே பரிபாடிக்கு வந்தா மதி.

 

ரொம்ப நல்லதாப் போச்சு. அய்யருக்கு ரூம் போட்டாச்சு. சமூகமும் அவிடத்திலேயே  குளிச்சு தெளிச்சு பரிபாடி போகலாம்.

 

குட்டை பனியன் சொல்ல, ராஜா பளிச்சென்று கேட்டார் – அது என்ன பரிபாடி? எல்லோரும் சேர்ந்து பாடற சம்பிரதாயமா?

 

வைபவம் என்றான் கிழவன். நிகழ்ச்சி என்றான் நெட்டை பனியன். அது பிடித்துப் போனதாக அங்கீகரித்த ராஜா ரூம் போடறது என்ன மாதிரியான விஷயம் என்று கேட்கும் முன்னர் ஸ்ரீ கிருஷ்ணா லோட்ஜ் என்று பலகை மாட்டிய இடத்தின் முன் இருந்தார். பக்கத்தில் தான் அது.

 

ஆனந்தமாக மேலே இருந்து வென்னீர் பூ மாதிரிப் பொழிய ராஜா சின்னக் குழந்தை போல கூகூவென்று சத்தமிட்டுக் கொண்டு வெகுநேரம் குளித்து வெளியே வந்தபோது உலகமே சந்தோஷ பூர்வமாக அவருக்குத் தோன்றியது.

 

May 10 2024

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன