அவர்கள் பக்கத்து விடுதியில் பசியாறித் திரும்பி வந்தபோது பரிபாடி ஆரம்பமாகப் போகுது என்று ஏகப்பட்ட பேர் அவர்களைப் பந்தலுக்கு அனுப்புவதில் மும்முரமாக இருந்தார்கள்.
மரமேஜைக் காரர்கள் முன் ஆக்ரோஷமாகக் கை சுண்டி, இட்டலி மாத்திரம் தானா ஆட வந்தவங்களுக்கு, புட்டு கடலை எங்கே என்று உயர்த்திய குரலில் விசாரித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம் தொடர்ந்து மலையாளத்தில் கோஷம் போட, உள்ளே இருந்து அரசூர் அதிகாரி வந்து சமாதானம் செய்து நாளைக்கு புட்டு கடலையும் கூடவே கோழி முட்டையும் தரப்படும் என்று அறிவித்து அனைவரின் பிரியத்தையும் சம்பாதித்துப் போனதை ராஜா பிரியமும் பெருமையுமாகக் கவனித்தார். நம்ம வீட்டுப் பிள்ளையாச்சே.
அந்தக் கூச்சல் முழுக்க அடங்குவதற்குள் இன்னொரு கூட்டம் அதே படிக்கு மரமேஜைக்கு முன்னால் நின்று காலில் விசை வைத்தது போல குதித்தது . பயணப்படி மூணு ரூபா பதினேழு பைசாவாக்கும் மத்திய சர்க்கார் விதித்தது. இங்கே ரெண்டு ரூபா மட்டும் கொடுத்து மீதிக் காசைக் கொள்ளை அடிக்க பரிபாடியா? முழுத் தொகை வேணும். இக்களி தீக்களி சர்க்காரே.
அதிகாரி வெளியே வர, மூணு ரூபா பதினேழு பைசா உத்தரவானது கைதட்டோடு வரவேற்கப்பட்டு செண்டை மேளம் பார்க்க அந்தக் கூட்டமும் போயொழிந்தது. நாமும் போகலாம் வினோதம் எல்லாம் கண்டு வர என்று ராஜா பனியன் காரர்களிடம் சொல்லும் போது வேறே ஏதோ இரைச்சல்.
ஆபீசர் சார், எனக்கு நியாயம் சொல்லுங்க.
கட்டிட வாசலில் இருந்து சத்தமாகக் கூப்பிட்டபடி வந்த பெண் நல்ல உடம்பு வனப்பும், அதை எடுத்துச் சொல்கிற நேர்த்தியான உடுப்புமாக, பூசினாற்போல் திம்மென்று வெகு அழகாக இருந்தாள். வெள்ளைக்காரி சாயல் வேறு அழகை அதிகப்படுத்தி காட்டியது. அவள் மேல் பார்வையைப் பதித்த பகவதி அம்மாளின் பேரனான அதிகாரியும் அதேதான் நினைத்திருக்க வேண்டும்.
இங்கே எனக்கு அனுமதி மறுக்கிறார்கள். அதிகாரபூர்வமாகக் கொடுக்கப்பட்ட அனுமதியாக என் விசா நடப்பில் உண்டு. நானும் இந்திய வம்சாவளிப் பெண் தான். என்னை வரக்கூடாது என்று விரட்டுவது யார்? ஏன்? அதிகாரி சொல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். கொச்சு தெரிசாவுக்கு அனுமதி இல்லை என்று யார் சொல்வது? இங்கே தீர்வு கிட்டாவிட்டால், பிரதம மந்திரியைச் சந்தித்து முறையிடவும் தயார்.
அவள் இங்கிலீஷில் பேசியதைக் கிழவன் கிசுகிசுவென்று ராஜாவுக்கு மொழி பெயர்த்தான். அந்தப் பெண்ணின் பிடிவாதம் ராஜாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அவளைக் கையைப் பிடித்து ஓரமாக நிறுத்தும் உத்தேசத்தோடு ராஜா முன்னால் சாட, குட்டை பனியன் அவசரமாக அவரைத் தடுத்து நிறுத்திக் காதில் ஓதினான் –
இந்தப் பொண்ணு பகவதியம்மா அண்ணன் ஜான் கிட்டாவய்யர் இருந்தாரே, அந்த அய்யரோட கொள்ளுப் பேத்தி. கொச்சு தெரிசா. வெள்ளைக்கார தேசத்தில் இருந்து வந்திருக்கு.
ராஜாவுக்கு ஆச்சரியம் தீரவில்லை. கருக்கடையான பெண். நல்லாயிருக்கட்டும் நாச்சியா. மனதாற வாழ்த்தினார் அவர்.
ரெண்டு பேரும் தகுந்த உறவாச்சே. நல்ல ஜோடி. கல்யாணம் செஞ்சுக்கலாமே?