அவசரமாகப் புனைய வேண்டிய புது ஆளுமை பிம்பங்கள்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவதாம் நாவல் -அடுத்த சிறு பகுதி

ராஜா பிரியத்தோடு விசாரிக்க, நெட்டை பனியன் சொன்னான் –

 

அதிகாரிக்கு அவர் பொண்டாட்டியோட கல்யாணம் ஆச்சு. இந்தப் பொண்ணுக்கு அவளோட புருஷனோட ஆச்சு.

 

ஆச்சா? ராஜாவுக்கு ஏனோ ஏமாற்றமாகப் போனது.

 

பந்தல் உள்ளே இருந்து செண்டை மேளம் அமர்க்களமாக ஒலிக்க, ஆடி ஆடிச் சிரித்துப் போன கிழவன் சத்தம் கூட்டினான் –

 

மாப்ளே, அது பாட்டுக்கு அது. இவங்க நீ நினைக்கறபடி நல்ல ஜோடிதான். இன்னும் ஒரு மாசத்திலே.

 

அவன் மேலே கூறியது கேட்காமல் மயில்பீலி உடுத்த ஆட்டக்காரர்கள் கூட்டமாக அரங்கு நோக்கிப் போய்க் கொண்டிருக்க, வானம் இருண்டது. ஒன்றன்பின் ஒன்றாகத் தாழப் பறந்து போன மயில்கள் வெளியை நிறைத்தன. திடீரென்று கனமாக மழை பொழியத் தொடங்கியது.

 

கண்ட இடத்துலே கொத்தி வைக்கப் போவுது மயில் எளவு.

 

ராஜா சாரலில் நனைந்தபடி கட்டடத்துக்குள் நுழைய, உள்ளே தூணில் சாய்ந்து புகையிலைக் கடைக் குடும்பத்து உறவுக்காரியான சுமங்கலிக் கிழவியம்மாள் பாடிக் கொண்டிருந்தாள் –

 

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்.

 

 

 

வாழ்ந்து போதீரே   அத்தியாயம் இருபத்தேழு     

          

நான் கொச்சு தெரிசா. இங்கிலாந்திலே மேற்கு யார்க்‌ஷையர் பிரதேசத்தில் கால்டர்டேல்-ங்கிற சின்ன நகரத்திலிருந்து வந்திருக்கேன். இந்திய வம்சாவளியிலே வந்தவள். தமிழும் மலையாளமும் பேசின குடும்பத்தோட கடைசிக் கண்ணியிலே இருக்கப்பட்டவள். ஆனா அந்த மொழிகள் தெரியாது. இங்கிலீஷ் மட்டும் பேச, எழுத வரும். உங்ககிட்டே இங்க்லீஷ்லே பேசலாமா?

 

தன் முன்னால், கை நீட்டினால் மேலே படும் தொலைவில் நின்று பேசிக் கொண்டு போகும் பெண்ணையே பார்த்தபடி இருந்தான் சின்னச் சங்கரன். எங்கே பார்த்திருக்கிறோம் இவளை?

 

கொச்சு தெரிசாவுக்கும் அவனை ஏற்கனவே சந்தித்த ஞாபகம். அவளுக்கு நினைவு வந்து விட்டது. சங்கரன் தன்னை அடையாளம் காணப் பிரயத்தனம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு சுவாரசியமாக இருந்திருக்க வேண்டும். ஒரு சிரிப்போடு அவள் சங்கரன் பேசுவதற்காகக் காத்திருந்தாள்.

 

வெளியே மயில்களின் கூட்டம் எவ்விப் பறந்து போக மழையும் நின்று கலை நிகழ்ச்சிகள் தொடங்குவதாக நொடிக்கொரு தடவை ஒலிபெருக்கியில் அறிவிப்பு வந்த வண்ணமிருந்தது.

 

காலையில் மேஜை போட்டு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விண்ணப்பம் வாங்கிய வாசல் அறையில் பகுதி கதவடைத்து சங்கரன் உட்கார்ந்திருக்கிறான். மத்திய சர்க்கார் அதிகாரி தோரணை தற்காலிகமாக விடைபெற்றுப் போயிருக்கிறது. மதிப்புக்குரிய அமைச்சரோடு வந்த முதல்நிலை அதிகாரி, கலாசார விழா சிறப்பாக நடந்தேறச் செயலாற்றும் சர்க்கார் நிர்வாக யந்திரத்தின் சகல சக்தியும் வாய்ந்த இயக்குனர், அழகான, ஆங்கிலம் மட்டும் பேசத் தெரிந்த இளம் பெண்களின் அதிகாரபூர்வ சிநேகிதன் என்று சில பிம்பங்களை அவன் விரும்பி இப்போது புனைந்துள்ளான்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன