காலையில் யந்திர நிர்மாணம் பற்றிப் பேச வந்த முதியவர் எங்கே?
யாரோ வந்து சங்கரனைக் கேட்டார்கள். அந்தக் கேள்வியை பல பேர் கேட்டு விட்டார்கள். தற்காலிக யந்திரம் என்று ஒரு பெரிய செப்புத் தகட்டை விழாப் பந்தலுக்கு அருகே ஒரு மாமரத்தில் இரும்பு ஆணிகள் கொண்டு அவர் அடித்து நிறுத்தும்போது தான் சுருக்கமாக மழை பெய்தது. ஏழெட்டு மயில்கள் கூட்டமாகத் தாழப் பறந்து திரும்ப வானேறின.
அந்த முதியவரை மட்டுமில்லை, பிரபுத்துவக் குடும்ப உடுப்புகளோடு வந்த இன்னும் ரெண்டு முதியவர்களையும் அவர்களை அழைத்து வந்த பழைய ஆஸ்டின் காரையும் கூடக் காணவில்லை என்றான் சங்கரன். விசாரிக்க வந்தவன் நன்றி சொல்லித் துண்டால் முகம் துடைத்து அகன்று போனான்.
இப்போது சங்கரனும், வந்த பெண்ணும் மட்டும் அறையில்.
இந்தச் சுறுசுறுப்பான பெண் யாராக இருக்கும்? தில்லியில் பார்த்தவளா?
சங்கரனின் ஞாபக சக்தி கை கொடுத்தது. புத்தியின் உள்ளறையில் இருந்து சரியான தகவலை எடுத்துக் கொடுத்து அது விலகிப் போக, புன்னப்புரம் ரூட் பஸ் என்றான். கொச்சு தெரிசா இல்லை என்று தலையசைத்தாள். கொஞ்சம் ஏமாற்றம் அவள் கண்ணில் தெரிந்தது.
வெளிநாட்டுப் பெண். இங்கத்திய பெயர்கள் அதுவும் மலையாள பூமியில்
குட்டநாடு பிரதேச ஊர்களும் கிராமங்களும் இன்னும் சங்கரனுக்கே பரிச்சயமாகவில்லை. அவள் எப்படி புன்னப்புரத்தை நினைவு வைத்திருக்கக் கூடும். வேறு ஏதாவது தகவல் துணுக்கு உண்டா என்று தேடினான் அவன்.
ஒரு பாதிரியாரும் லுங்கி அணிந்த, நல்ல ஆங்கிலத்தில் பேசக் கூடிய கனவான் ஒருத்தரும் கூட வர, நீங்கள் என்னோடும் என் மனைவி வசந்தியோடும் பஸ்ஸில் வந்த மாலை நேரம்.
கொச்சு தெரிசா பெரிய சிரிப்போடு ஆமாம் என்று அங்கீகரித்தாள். நேர்த்தியான நெற்றிப் பொட்டு வச்ச அழகான பெண்மணி அவங்க. உங்க மனைவியை, தினமும் குளிச்சு உடுக்கும் போது நினைச்சுக்கறேன்.
கொச்சு தெரிசா தகவல் பகிர்ந்த மகிழ்ச்சியின் அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினாள். அவளுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடப் போகின்றன என்ற நம்பிக்கை விழிகளில் தெரிந்தது.
சங்கரனின் பார்வை அவளுடைய உருண்ட தோளில் பதிந்திருந்தது. கண்ணை ஒரு வினாடிக்கு மேல் பார்க்க முடியவில்லை. பார்க்கப் பார்க்க மனதில் ஆழமாகத் துளைத்துக் கீறி மனமெல்லாம் பரவுகிற விழிகள் அவை.