நமக்கு வேண்டப்பட்ட ஒரு வடகலையார் பழநி போனார். ஊரெல்லாம் பஞ்சாமிர்தமும், முருகா முருகா சத்தமும், ஜவ்வாது வீபுதியும் மொட்டைத் தலையில் சந்தனமும் மணக்கிறது. போகிறவன் எல்லாம் பழநி ஆண்டவரைத் தொழ மலை ஏறுகிறான். வருகிறவன் எல்லாம் இறங்கி வருகிறான்.
வீர வைஷ்ணவர் முருகன் கோவிலுக்குப் போவாரா என்ன?
தேடிக் கொண்டு, லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வழி விசாரித்து ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தார்.
பெருமாள் தரிசனத்துக்கு இவர் போய் நிற்க, அவர் கோவணத்தோடு அனந்த சயனம் நீங்கி எழுந்து நின்றாராம்.
இதெல்லாம் எந்த நூற்றாண்டு அல்லது புராண காலத்தில் நடந்தது என்று கேட்கக் கூடாது.
போன வாரம் கூட நடந்திருக்கலாம்!
மாது காடுறை மெத்தென மென்முலை சேரு வேலவன் தன்பதம் கிட்டிட
ஓது வேதியர் நாளும் பழநியில் தீதில் நீறொடு ஏறுபடியுமே – வேணுமோ?
வந்து ராதையும் சொந்தக் கோதையும் பாதம் வருடிடு லக்(கு)மி நாரணன்
சுந்து ஐயங்கார் வந்து தொழுதிட நின்ற சீர்நெடு கோவணப் பெருமாளே
வேலை
———
இங்கிலாந்தில் முடி திருத்துதல் நல்ல லாபம் சம்பாதிக்க வகை செய்யும் தொழிலாக மாறி வருகிறது. முன்னைவிட நிறையப் பெண்கள் இந்தத் தொழிலில் இறங்கி இருக்கிறார்கள்.
தாய்லாந்திலும் அமெரிக்காவிலும் முடிதிருத்தகங்களில் பெண்கள் தான் முழுக்க முழுக்கப் பணிபுரிவதைப் பார்த்திருக்கிறேன். தாய்லாந்தில் பெரும்பாலும் தாய் அழகிகள் அல்லது சீன வனிதைகள். கலிபோர்னியாவில் பிலிப்பைன்ஸ், வியத்னாமியப் பெண்கள்.
ஆனால் இங்கே இங்கிலாந்தில் பிரிட்டீஷ் பெண்களே வாயில் சூயிங்கம்மைக் குதப்பிய்படி ஆண் பெண் வாடிக்கையாளருக்குச் சரமாரியாக வெட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார்க்ள்.
முடிவெட்டும் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு, கர்ப்பப்பை தொடர்பான துன்பங்கள் ஏற்படுவதாக அண்மையில் ஒரு ஆய்வில் கண்டுபிடித்தாலும் – இவர்கள் சதா கையாளும் முடிக்கு நிறமேற்றும் சாயத்தால் வருவதாம் இது – இவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
பல ஊர்களில் கிளைகள் இருக்கும் ஒரு முடிவெட்டும் நிறுவனத் தலைவருக்கு வாரிசான ஒரே மகள் படுகுஷியாக முடி வெட்டக் கிளம்பியிருக்கிறார் – அப்பா நடத்தும் ஒரு கடையில் வெட்டிப் பழகி தொழில் நுட்பம் தெரிந்தபிறகு. மில்லியன் பவுண்ட் பணம் புரளும் நிறுவனமாக அவருடைய நிர்வாகத்தில் வ்¢ரைவில் வரலாம்.
குறைந்தது ஒண்ணரை பவுண்டிலிருந்து அதிக பட்சம் முப்பது பவுண்ட் வரை கட்டணம். கிட்டத்தட்ட மொட்டை அடித்தது போல் ஒரு தலையலங்காரம் தான் இங்கே ஆண்கள் மத்தியில் பிரபலம். நாற்காலியில் உட்காரும்போதே ‘சமத்தோல்லியோ, ஒட்ட வெட்டாதேம்மா’ என்று ஸ்டாண்டிங்க் – கட்டிங் – இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்காம்ல் லேப்டாப்பில் ஏதோ வேலையில் மும்முரமாக இருந்து அரை மொட்டையனாக உலவிய அனுபவம் எனக்கு உண்டு.
தமிழ் இலக்கியத்தில் முடிவெட்டுதல் எங்கே எல்லாம் வருகிறது என்று அலசுவது ஒரு சுவாரசியமான காரியம்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா என்ற வள்ளுவரை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.
முடிவெட்டிக் கொள்ளத் தலை கொடுத்தபடி ஒரு ஆசாமி வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறார். காளமேகப் புலவர் அந்தப் பக்கம் போயிருக்கிறார். இந்த ஆள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், ‘யோவ் காளமேகம் . மன் என்று ஆரம்பித்து மலுக்கு என்று முடியும்படி ஒரு வெண்பா பாடும்’ என்று அந்த் வம்புக்காரக்கவிஞரைக் கேட்டிருக்கிறார். லட்டு மாதிரி இப்படி ஒருத்தன் மாட்டிக் கொண்டால் காளமேகம் விடுவாரா?
இந்த ஆள் நீளமாகக் குடுமி வைத்துக் கொள்ளாமல் வெட்டிக் கொள்ளக் காரணம் என்னவென்றால், இவன் வீட்டுப் பெண்டிர் குடுமியைப் பிடித்து இழுத்து ஓங்கி இவன் தலையில் குட்டாமல் இருப்பதற்குத் தான்’ என்று பாடி விட்டு அவர் பாட்டுக்கு அடுத்த வசவுக்கு ஆளை எதிர்பார்த்துப் போய்விட்டார். ‘மன்னு திருமலைராயன்’ என்றுதொடங்கி, ‘இழுத்துக் குட்டாமலுக்கு’ என்று மன்னில் ஆரம்பித்து மலுக்கில் முடியும் அந்த் வெண்பா.
சி.மணியின் ஒரு புதுக்கவிதையில்
‘வேலை வீடு தேடி வரும்
காத்து நிற்கும்’
என்று வாசலில் பெட்டியுடன் பொறுமையாகக் காத்திருந்து நடுவில் ஒரு வினாடி தலை நுழைத்து உள்ளே பார்த்து, உடனே திரும்பி வெளியே நிற்கிற நாவிதரை, வெட்டி அரட்டையில் ஈடுபட்டிருக்கும் வீட்டுக்காரர் அடுத்த வாரம் வரச் சொல்வார். அதிகம் பேசாமல் மனதை நமநமவென்று பிசையும் கவிதை இது.
ம.அரங்கநாதனின் ஒரு சிறுகதையில் அநாதையான முத்துக்கறுப்பனை (அவர் கதை எல்லாவற்றிலும் கதாநாயகன் பெயர் முத்துக்கறுப்பன் தான்!) அவர் சித்தப்பா முடி வெட்டும் தொழிலாளியிடம் உதவியாளனாகச் சேர்த்து விடுவார். தான் ‘மேல்சாதிக் காரர்’ ஆனாலும் தன் அண்ணன் மகனனச் சிறுமைப்படுத்துவதாக அவருடைய சின்னத்தனமான எண்ணம். ஆனால் முத்துக்கறுப்பன் வளர்ந்து அந்தக் கடைக்கே அதிபராகி நல்ல நிலைமைக்கு வருவதாகக் கதை வளரும்.
ம.அரங்கநாதனின் ‘காடன் மலை’ சிறுகதைத் தொகுதி படித்திருக்கிறீர்களா? தமிழ் எழுத்தாளர்களில் அரங்கநாதன் ஒரு திருமூலர்; நம்மாழ்வார். ரத்தினச் சுருக்கமாகக் கதை சொல்வதில் அவருக்கு இணையாக யாசுநாரி காவபாத்தாவைத் தான் சொல்ல வேண்டும். (காவபாத்தா பற்றி எழுதியிருந்தேனே ..)
சார்வாகனின் ‘அமர பண்டிதர்’ முடி திருத்தும் நண்பர் ஒருவர் கட்டும் கோவில் பற்றியது. அடங்கி ஒலிக்கும் அங்கதம் நிறைந்த குரல் சார்வாகனுடையது. (தொழுநோயைக் குணப்படுத்துவதற்காக, நோய்த் தடுப்புக்காக சமூகத்தில் விளிம்புநிலை மக்களிடையே இடையறாது தொண்டு புரிவதற்காக அரசு விருது பெற்ற பிரபல மருத்துவ அறிஞர் சார்வாகன் என்று எத்த்னை பேருக்குத் தெரியுமோ!)
வி.கே மாதவன் குட்டியின் மலையாள நூலான ‘ஓர்மகளுடெ விருந்நு’ புத்தகத்தில் இருந்து போன நூற்றாண்டு தொடக்கத்தில் மலையாளக் கிராமத்தில் நிலவிய தலைமுடி அடையாளம் பற்றிய பகுதியை இங்கே நான் மொழி பெயர்த்துக் கொடுத்திருந்தது நினைவு வருகிறது.
பிராமணர்கள் என்றால் குடுமி, நாயர்கள் என்றால் அழகாக வெட்டப்பட்ட க்ராப், ஈழவர் என்றால் தலையில் பப்படத்தைக் கவிழ்த்தது போன்ற பப்படவெட்டு .. நாவிதர் இப்படித்தான் வெட்டியாக வேண்டும். மாதவன்குட்டியின் கிராம நாவிதர் ஒரு புரட்சி செய்து நம்பூதிரிக்குப் பப்படவெட்டும் நாயருக்கு மொட்டையும் போடுவார் -அவர் சுதியேற்றிக் கொண்டு கத்திரி பிடித்ததால் அவரைக் கோவித்துப் பயன் இல்லாமல் போனதாம்!