Comrade Nayanarதோழர் நாயனார்

தோழர் நாயனார்

First Year Remembrance (Onnam Charama Vaarshikam) –
————————————————————————-
(written – May 2004 on the eve of Comrade Nayanar’s demise)

தோழர் நாயனார் காலமானார்.

ஏரம்பால கிருஷ்ணன் நாயனாரைப் பற்றிய கலைடாஸ்கோப் பிம்பங்களாக அடுக்கடுக்கான நினைவுகள்.

அசல் கண்ணூர் மலையாளத்தில் எந்தத் தலைவரையும் பற்றி ‘ஓன்’ (அவன்) என்று குறிப்பிடும் சகஜம், யார் எத்தனை சொல்லியும் கவலையே படாமல் தோழர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டைக் கட்சிக் கூட்டத்தில் குறும்பாக ‘திருமேனி’ என்று உரக்க விளித்து உற்சாகமாக உரையாடும் நாயனார்.

அவரை நல்ல வண்ணம் அறியாதவர்கள் அவருடன் கைரளி டிவியில் உரையாடத் தொலைபேசியில் அழைக்கும்போது கொஞ்சம் பயப்பட வைக்கும் கனமான குரலும் நரைத்த கட்டை மீசையும் கனத்த பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியுமாக ‘ஆரா விளிக்குன்னு? கொல்லத்தில் நின்னா? ஆய்க்கோட்டே. எந்தா வேண்டது?’ என்று பொறுமையிழந்ததாகத் தோன்ற வைக்கும் முகபாவத்தோடு சொல்லி, அடுத்த நிமிடம் குலுங்கிச் சிரிக்கும் தோழமையுள்ள நாயனார்.

திருவனந்தபுரம் தர்பார் ஹாலில் போன வியாழக்கிழமை அதே கட்டை மீசையும், மூக்குக் கண்ணாடியுமாகக் குரலும் உயிரும் விலகிப் போய்ப் பேழையில் கிடத்தப்பட்ட நாயனார். அவர் மார்பின் மேல் மடித்து வைக்கப்பட்ட, அவர் உயிருக்கு உயிராக நேசித்து வளர்த்த, கம்யூனிஸ்ட் கட்சியின் தினப்பத்திரிகையான தேசாபிமானி. தர்பார் ஹாலுக்கு வெளியே பெருமழைக்கு அஞ்சாமல் நனைந்தபடியும் குடையோடும் மலைப்பாம்பாக நீளும் வரிசையில் சமூகத்தில் சகல நிலைகளிலும் இருக்கப்பட்ட மக்களின் பெருங்கூட்டம்.

கூட்டத்தை விட்டுச் சற்றே விலகி, நாயனாருடன் ஒரு காலத்தில் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்து அப்புறம் பிரிந்து ஏ.கே. ஆன்றணி அமைச்சரவையின் பங்கு பெற்றிருக்கும் கௌரி அம்மாளும், எம்.வி.ராகவனும் நிற்கிறார்கள்.

நாயனாரா? மனுஷர் சாப்பாட்டுப் பிரியராச்சே. அதுவும் ஸ்வீட்டுன்னா எங்கே எங்கேன்னு அலைவாரே? கட்சிப் பொதுக்குழுவுக்குக் கிளம்பிப்போக எல்லோரும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் ‘சாப்பிட என்னப்பா இருக்கு?’ என்று விசாரிக்க ஆரம்பித்துவிடுவார் என்கிற ராகவனிடம் கௌரி அம்மாள் சொல்கிறார் – ‘நீரிழிவு வியாதி வந்தா அப்படித்தான் அகோரப் பசி எடுக்கும்’.

(தோழர் ஜீவாவுக்கும் நீரிழிவு உண்டு. அவரைப் பெருந்தீனிக்காரனாகச் சித்தரித்துத் தமிழில் ஒரு நாவல் கூட வந்திருக்கிறது).

சுதந்திரப் போராட்டக் காலம். திருவிதாங்கூர் அல்லாத கரையோரப் பிரதேசங்கள் பிரிட்டீஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது நிகழ்ந்த அரசு எதிர்ப்பு இயக்கமான கையூர் சமரத்தில் ஈடுபட்டு, அரசு அலுவலரான போலீஸ்காரரைக் கொலை செய்த வழக்கில் மூன்றாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுத் தேடப்படுகிறார் நாயனார்.

நாள்கணக்கில் இளநீரில் ஊறவைத்த அவலை மட்டும் உண்டபடி காலில் புரையோடிய புண்ணையும், கடும் பசியையும் தாகத்தையும் பீடிப் புகை வலித்துத் தாங்கிக் கொண்டு ஒரு சிவந்த புலர்காலப் பொழுதுக்காகக் காத்திருந்தபடி நெடிய தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட அந்த நாயனாருக்குச் சாப்பிடப் பிடிக்கும்தான். யாருக்குத்தான் பிடிக்காது?

நாயனார் கையூர் சமரத்தில் ஈடுபடவே இல்லை என்று பின்னால் ஒரு கூட்டம் பிரசாரம் செய்ய ஆரம்பித்தபோதும் (போலீஸின் இறுதிக் குற்றப் பத்திரிகையில் அவருடைய பெயர் இல்லையாம்) அவருடைய பங்களிப்பு அப்புறம் சந்தேகத்து இடமில்லாமில்லாமல் நிரூபிக்கப்பட்ட போதும், அதைப் பற்றிக் கோபமோ, மகிழ்ச்சியோ காட்டாமல் ஒரு புன்சிரிப்போடு “டோ, ‘நீக்கறியல்லே அதொண்ணும்” என்று புறங்கையை அசைத்துவிட்டுப் போன நாயனார்.

கட்சிக் கூட்டத்தில் ஓர் அகில இந்தியத் தலைவர் (தற்போதைய காலகட்ட கிங் மேக்கர்களில் ஒருவர்) வீர உரை நிகழ்த்த முற்பட்டபோது, பக்கத்து நாற்காலியில், மைக்கில் தான் பேசுவது விழுந்து ஒலிபரப்பாகும் என்ற நினைவே இல்லாமல், ‘அது சரி, வச்சுக் காய்ச்சு. ‘ம்ப்ட ‘ங்கள் கேள்கட்டே. உனக்கு உங்க ஊர்லே நாலு தாடிக்காரங்களைக் கட்சியிலே இழுத்துப் போட முடியலே. சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு தில்லியிலே குந்திக்கிட்டு இருந்தாப் போதுமா?” என்று உரக்க முணுமுணுத்த நாயனார்.

மலையாளக் கவிதாயினியும், ஐபிஎஸ் அதிகாரியுமான சந்தியா திருச்சூரில் டி.எஸ்.பியாகப் பொறுப்பேற்று முதலமைச்சர் நாயனார் பேசும் கூட்டத்தில் பாதுகாப்பு அளிக்கப் போனபோது, பிரசங்கம் செய்து கொண்டிருந்த நாயனார் அவரைப் பார்க்கிறார். பேசியதைப் பாதியில் விட்டுவிட்டு, ‘திருச்சூர் ஜனங்களுக்கு நிம்மதி. கைக்கூலி வாங்காத பெண் டி.எஸ்.பி இல்லியா உங்களுக்கு இப்போ? அதுக்காக ரொம்பப் பெருமைப் பட்டுக்க வேணாம். சீனாவுக்குப் போயிருந்தபோது அங்கே பயணம் முழுக்க எனக்குப் பாதுகாப்பு கொடுத்தது பெண் போலீஸ் தான். அவங்களோட ஒப்பிடும்போது இங்கே பெண்கள் இப்படிப் பதவி வகிக்கறது ரொம்பக் குறைச்சலாக்கும்.’

தேசாபிமானியில் ஃப்ரூப் ரீடராகத் தொடங்கி, பத்திரிகையாளராகவும், தீவிரவான படிப்பாளியாகவும், ‘சகாவு லெனின்’, ‘காலத்தின்றெ கண்ணாடி’ போன்ற புத்தகங்களின் ஆசிரியருமான நாயனார். திருவனந்தபுரம் ஏ.கே.ஜி செண்டரில் (கட்சியின் தலைமை அலுவலகம் இது) பதினெட்டாம் எண் அறையில் ஊரில் அச்சுப்போடும், வந்து சேரும் எல்லாப் பத்திரிகைகளும் வேணும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கி வரிவிடாமல் படிப்பது மட்டுமில்லாமல், பத்திரிகைக்கு நடுவே செருகி வைத்த பிட் நோட்டீசுகளையும் வாசிக்கத் தவறாத முன் முக்கியமந்திரி நாயனார்.

வாட்டிகனில் போப்பாண்டவரைச் சந்தித்தபோது அவர் விவிலியத்தைப் பரிசாகத் தர, பதிலுக்கு மாத்ருபூமி பதிப்பித்த பகவத்கீதையைக் கொடுத்த நாத்திகரும், மாத்ருபூமிக்கு எதிரணியில் முன் நிற்கும் தேசாபிமானியின் ஆசிரியராகவும் இருந்த நாயனார்.

அறுபத்தேழில் பாலக்காடு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் மலம்புழயிலிருந்தும் தலைச்சேரியிலிருந்தும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தியபடி தில்லிக்கு சிகிச்சைக்குப் புறப்பட்டுப்போன நாயனார்.

நெருக்கடி நிலைப் பிரகடனத்தைக் கடுமையாக எதிர்த்த தன் நெருங்கிய தோழரும் அரசியல் தலைவருமான ஏகேஜி என்ற ஏ.கே.கோபாலன் அந்தக் காலகட்டம் முடிந்த நேரத்தில் அதை அறிய முடியாமல் உயிர் விட்டது போல், அறுபத்தி இரண்டு இடத்தை இந்த லோக்சபையில் இடதுசாரிகள் வென்ற செய்தி வெளிவந்தபோது அது தெரியாமலேயே உயிர் துறந்த நாயனார்.

கட்சிப் பணியிலும் கட்சி தடைசெய்யப்பட்ட போதெல்லாம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் இடைக்கிடை சிறை வாழ்க்கையிலுமாகக் குடும்பம், திருமணம் பற்றி எல்லாம் நினைக்க நேரமில்லாமல் போய், நாற்பதாவது வயதில் சாரதா டீச்சரைக் கல்யாணம் செய்து கொண்ட நாயனார். கேரள சரித்திரத்திலேயே அதிகக் காலம் (கிட்டத்தட்ட பனிரெண்டு வருடம்) முதலமைச்சராகக் கணவர் இருந்தாலும், தன் உத்தியோகத்தை விடாமல் தொடர்ந்து ரிடையரான சாரதா டீச்சர் ‘சாரதேஎஎஎ’ ன்னு நீட்டி முழக்கிப் பிரியமாய் ஒரே ஒரு தடவை கூப்பிட மாட்டீங்களா’ என்று அவருடைய உடல் வைத்திருந்த திருவனந்தபுரம் தர்பார் ஹாலில் கண்ணாடிப் பேழையை அணைத்தபடி குமுறிக் குமுறி அழ, ஒரு அனக்கமும் இல்லாமல் அந்திம உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நாயனார்.

நல்ல பேனாக்கள், வெயில் சுட்டெரிக்கும்போதும் சட்டைக்கு மேல் அணியும் பாதி கோட், நல்ல சாப்பாடு, பால் பாயசம், கால் பந்து விளையாட்டில் ஈடுபாடு, நாய் வளர்ப்பு, வெளிநாடு போனால் அணிந்து போக ஒரு சூட் என்ற சின்னச் சின்ன ஆசைகள் கொண்ட நாயனார். கண்ணூர் கல்லியாசேரியில் சாரதா டீச்சர் கட்டிய நடுத்தர வீட்டில் ஒரு அறை முழுக்கத் தான் படிக்க வேண்டிய புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்த நாயனார். சீக்கிரம் எம்.பி பென்ஷன் கிடைத்து அந்த வீட்டில் நிரந்தரமாகக் குடியேறித் தீவிர அரசியலிலிருந்து சற்றே விலகிக் குடும்பத்தோடும் புத்தகங்களோடும் மிச்ச வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற கனவு நிராசையாகிப் போன நாயனார்.

திருவனந்தபுரத்திலிருந்து திருச்சூர், தலைச்சேரி மார்க்கத்தில் இரண்டு நாள் பயணமாக அவருடைய உடல் தகனத்துக்குக் கண்ணூர் வந்து சேர்வதற்குள் வழிநெடுக மழையில் சொட்டச் சொட்ட நனைந்து இரவெல்லாம் விழித்துக் கேரளமே காத்து நின்றது. ஏ.கே.கோபாலன், ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் போன்ற மற்ற முக்கியமான கேரள அரசியல் தலைவர்களுக்குக் கூடக் கிடைக்காத அத்தகைய அன்பும் நேசமும் மரியாதையும் கிட்டிய மக்களுக்கு நெருக்கமான மக்கள் தலைவர் நாயனார்.

அரபிக் கடலின் அலைகள் வெகு அருகில் முழக்கமிட்டுக் கொண்டிருக்க, தென்னை மரங்களும் செடிகொடிகளுமாகப் பசுமை விரியும் தன் மனதுக்குப் பிரியமான நிலப்பரப்பில், ஏகேஜி, அழிக்கோடன் ராகவன் போன்ற மனதுக்குப் பிரியமான தோழர்கள் வெந்தடங்கிய பய்யாம்பலம் மயானத்தில் மலையாள மண்ணோடும் நீரோடும் காற்றோடும் கலந்து போன நாயனார்.

‘முத்தச்சா லால் சலாம்’. தொலைக்காட்சியில் தனக்கு மழலையில் வணக்கம் சொன்ன குழந்தையோடு குழந்தையாக உற்சாகத்தோடு முட்டி மடக்கி லால் சலாம் என்று தளராத குரலில் முழக்கமிட்ட எண்பத்தாறு வயதான நாயனார்.

சகாவே, லால் சலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன