1970-களின் முற்பகுதி. மதுரை. மதுரா கோட்ஸ் துணி உற்பத்தி நிறுவனத்தின் அலுவலகம். காலை பத்து மணி கடந்திருக்கிறது.
தலைமை நிர்வாகி வேகமாக உள்ளே வருகிறார். அலுவலக ஹாலில் ஓரமாகப் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனின் மேசை. அங்கே அவர் பார்வை நிலைக்கிறது.
அந்தப் பையனுக்கு முன்னால் உட்கார்ந்து ஒட்ட வெட்டிய நரைத்த தலைமுடியும், நாலு முழ வேட்டியும், அரைக்கைச் சட்டையும், முகத்தில் பட்டிக்காட்டுக் களையுமாக ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
நிர்வாகிக்குக் கோபம் தலைக்கேறுகிறது.
‘யாருய்யா அது, துணி கொள்முதல் செய்யணும்னா குடவுண் போக வேண்டியதுதானே.. இங்கே என்ன செய்யறே?’
அந்தப் பெரியவர் அமைதியாக எழுந்து நிற்கிறார். பையனும் பதறிப்போய் நிற்கிறான்.
‘நான் துணி கொள்முதலுக்கு வரல்லே’
‘அப்ப பஞ்சு விக்க வந்தியா?’
இல்லை என்று தலையாட்டிய பையன் ஏதோ சொல்லும்முன் நிர்வாகி அவனைப் பார்வையால் எரிக்கிறார்.
‘இல்லேன்னா, ஊர்லேருந்து சித்தப்பு, பெரியப்பு, மாமன், பாட்டன் பூட்டன்.. இதே வேலையாப் போச்சு.. வேலை நேரத்திலே தொந்தரவு செய்யக் கூடாதுன்னு சொல்லி அனுப்பி வை. இன்னொரு தடவை பார்த்தா, உன் சீட்டைக் கிழிச்சுடுவேன்’.
கோபம் சற்றும் வடியாமல் நிர்வாகி தன் அறைக்கு நடக்க, பின்னால் இருந்து குரல். கணீரென்ற, தெளிவான, பிரிட்டீஷ் இங்கிலீஷ்.
‘மன்னிக்க வேண்டும். ஒரு நிமிடம் என்னைப் பேச அனுமதிப்பீர்களா?’
நிர்வாகி திடுக்கிட்டுப் பின்னால் திரும்பிப் பார்க்கிறார். அந்தப் பட்டிக்காட்டுப் பெரியவர் தான்.
பெரியவர் ஆங்கிலத்திலேயே தொடர்கிறார் – ‘ இந்தப் பையன் ஊரில் என் பக்கத்து வீடு. அவனுடைய தகப்பனார் நான் மதுரைக்கு வருவதால் ஒரு தகவல் சொல்லி விட்டிருந்தார். அவர் உடல் நலமில்லாமல் இருப்பதால் பயணப்பட முடியாது போனது. நான் இவரைச் சந்திக்க உங்கள் அலுவலகத்தின் நுழைவாயிலில் முறையான அனுமதி பெற்றுத்தான் வந்தேன். ஐந்து நிமிடம் பேசிப் போக அனுமதி. பேசி முடித்து விட்டேன். உங்களுக்குத் தொந்தரவு கொடுத்ததற்காக வருந்துகிறேன். உங்கள் நாள் இனியதாக இருக்கட்டும்’.
தோளில் போட்டிருந்த சிவப்புத் துண்டால் முகத்தைத் துடைத்தபடி டயர்ச் செருப்பு ஒலிக்க பெரியவர் புன்சிரிப்போடு வெளியே போகிறார். நிர்வாகி திகிலும் வியப்புமாகத் தன் ஊழியனான புதுப்பையனைப் பார்க்கிறார்.
‘யாருப்பா இவர்?”
‘தோழர் கே.டி.கே தங்கமணி சார்’.
லண்டனில் சட்டம் படித்துப் பட்டம் பெற்ற பார் அட் லா. ஹோ சி மின், மா சே துங் ஆகிய உலகப் பொதுவுடமை இயக்கத் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தவர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர், ஏஐடியுசி தொழிற்சஙக்த் தலைவர். காட்சிக்கு எளியவர்.
1913-ல் பிறந்த தோழர் கே.டி.கே தங்கமணிக்கு இது நூற்றாண்டு விழா நேரம்.