கட்டபொம்மனையும் ஊமைத்துரையையும் (அப்புறம் மருது பாண்டியரையும், சின்ன மருது மகன் துரைசாமியையும்) பற்றி நல்ல வார்த்தை, புகழ்ந்து சொல்ல வெள்ளைக்காரன் தான், அதுவும் அவங்களுக்கு ஜென்ம சத்ருவாக இருந்த கர்னல் வெல்ஷ் தான் வேண்டியிருக்கு.
நாம் கேவா கலர்லே கட்டபொம்மனைக் களி கிண்டி அவன் பேசியே இருக்காத அடுக்கு மொழியில் (தெலுங்கு தாய்மொழியாகக் கொண்ட பாளையக்காரன்) சக்தி கிருஷ்ணசாமி வசனத்தில் (நூற்றாண்டு விழா இப்போது) பேச வைத்து அப்புறம் மறந்து போய்விட்டோம்.
மருது பாண்டியரை கண்ணதாசன் தமிழ் சினிமா ஆக்கியது (டி எஸ் பகவதி, முஸ்தபா) ஓசைப்படாமல் தகரப் பெட்டியில் முடங்கி விட்டது.
—————————————–
போகேந்திர சாயினம் – குந்தலவராளி ராகப் பாடல்.
இப்போது தன் அருமையான பாடாந்தரத்தால் சஞ்சய் சுப்ரமணியன் கிட்டத்தட்ட தனியுடைமை ஆக்கிக் கொண்ட பாடல் இது.
மகராஜா ஸ்வாதி திருநாள் குந்தளவராளியில் பள்ளிகொண்டபுரம் பத்மநாபப் பெருமாளைப் பற்றி எழுதிய கீர்த்தனத்தை எம்.எஸ் அம்மா பாடியதும் கேட்க இனிமைதான்.
மேற்கத்திய வாசனை செண்ட் போட்டுக் கொண்டு கனவான் பூங்காவில் மாலை நேரத்தில் கைத்தடியைச் சுழற்றியபடி உலவுகிற காட்சி எனக்கு குந்தலவராளி கேட்கும்போது மனதில் வரும். (அதே பூங்காவில், எதிர்த் திசையில் ஒயிலாக நடந்து வரும் அழகிய இளம்பெண் வசந்தா).
வேகத்தின் காரணமாகவோ என்னமோ பெரும்பாலும் கச்சேரி இறுதியில் வரும் கானமாக, தில்லானாவாகவே நிற்கிறது குந்தலவராளி. இந்த ராகத்தில் ஆலாபனை செய்து நிதானமாகப் பாடக் கூடிய வேறு கீர்த்தனைகள் உண்டா?
——————————-
வரவர விக்கிலீக்ஸ் ‘லூஸ் டாக்’ களமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ராஜிவ் காந்தி, சஞ்சய் காந்தி, பெர்ணாண்டஸ் அக்கப்போர் ஓய்ந்து, அந்தக்கால திமுக அமைச்சர் ராஜாராம் ‘தனித்தமிழ் நாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு தருமா?’ என்று அமெரிக்க தூதரக அதிகாரியைக் கேட்டது. ‘நானாத் தான் கேக்கறேன்.. கட்சி மேலிடம் அப்படி எல்லாம் தனியாகப் போக நினைக்கலை’ன்னு தன் நிலை விளக்கம் வேறே.
வடிவேலு காமெடி தான் நினைவு வருகிறது. ‘ நான் யார் தெரியுமில்லே.. அல் க்வய்தா.. ‘
——————————
Clean chit – நம்ம ஊர்லே எல்லாரும் அப்படியே தான் – க்ளீன் சிட் – உச்சரிக்கறோம்.. க்ளீன் ஷிட் தான் சரியான உச்சரிப்பாம்.. வேணாம்.. இதுவே இருந்துட்டுப் போகட்டும்…
————–
இசையிலும், கவித்துவத்திலும்தமிழ் திரையிசையின் உச்சத்தைத் தொட்டுவிட்டோம் என்று புரிந்து கொள்கிறேன்.
காலங்கார்த்தாலே காதில் விழுந்த பாடல் ‘டவுசர் உயுந்துடுச்சி’. பல்லவி, சரணம்? நாசமாப் போச்சு.. முழுப் பாட்டுமே இதேதான்.. வேறே வேறே அபஸ்வரம், கமகம், நெரவல் எல்லாம் கொடுத்து..
படத்தின் பெயர் ‘சூது கௌவும்’.
பாரதி கவிதையிலிருந்து சுவாதீனமாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
a real affront to the auditory perceptions..
பாரதியாரையும் ஜூட் விடச் சொல்ல வேண்டியதுதான். ’சூது கௌவும்’ – தப்பும் தவறுமான இடங்களில் அழுத்தம் கொடுத்துச் சொல்லும் ரேடியோ ஜாக்கி, டிவி விடியோ ஜாக்கிகள் வாயில் என்ன பாடுபடப் போகுதோ..
————————-