எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி – பைல்களின் உலகம் 1942

ட்ராமில் போவதா, சைக்கிள் மிதித்து ஆபீஸ் போவதா என்று யோசித்து, ட்ராமே சரிப்படும் என்று முடிவு செய்தேன். ராத்தூக்கம் சீராக இல்லாமல், தலை கிறுகிறுத்து, உடம்பு சமநிலை தவறி ஒரு பக்கமாகக் கொண்டுபோய்த் தள்ளுகிற அயர்ச்சி அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருந்தது. அதோடு நீளநெடுக சைக்கிள் மிதித்து ஆபீஸ் போய்த் திரும்ப சிரமமாக இருக்கும். ட்ராம் என்னதான் மெல்ல ஊர்ந்தாலும் ஒன்பதரை மணிக்கு கோட்டைக்குள் நான் நுழையும்படியாக சேர்ப்பித்து விட்டது.

ஒரு சிறிய கூட்டம் எதிர்பார்ப்போடு எனக்காகக் காத்திருந்தது.

“ராமோஜி சார் வந்தாச்சு” – யாரோ அறிவித்தார்கள். யாரோ
“வாங்க தம்பி”, என்றார்கள்.

மேஜை டிராயரைத் திறந்துகொண்டே எல்லோரையும் நமஸ்கரித்தேன்.

“ஏன் தம்பி, உத்தியோகத்திலே இருக்கப்பட்டவங்க எவாகுவேஷன்லே மெட்றாஸை விட்டு ஓடிப்போக கவர்மெண்ட் பயணப்படி தருதாமே?”. வேறு யாரோ கேட்டார்கள்.

“வாஸ்தவம் தான்..” என்றேன். அதை வாங்க ரெண்டு நாளாக கூட்டம் அலைமோதுகிறது இவர்களுக்குத் தெரியாதிருக்கலாம்.

‘அலவன்ஸ் கைக்கு வந்த அப்புறம் எவாகுவேஷன் செஞ்சா போதும்’ என்று சில பிடிவாதமான உத்தியோகஸ்தர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

“பென்ஷனர்களுக்கு கிடையாதா அது மாதிரி அலவன்ஸ்?”, ஒரு பெரியவர் முகத்தைத் துண்டால் அழுத்தத் துடைத்தபடி கேட்டார். பாவம் எத்தனை மைல் கடந்து பென்ஷன் வாங்க வருகிறாரோ.

“கிடையாது சார்… இனி வருமான்னு தெரியலே” உள்ளபடிக்கே வருத்தத்தோடு சொன்னேன்.

“மெல்ல வரட்டும்.. என் வண்டி அதுக்குள்ளே வந்துடும்..” என்றவரைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். இந்த முதியவர்களுக்கு ஒரு ஐம்பது ரூபாய் ஒரே ஒரு தடவை பயணப்படியாக கொடுத்தால் என்ன? முப்பது முப்பத்தைந்து வருஷம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்காக இங்கே கிடந்து உழைத்தவர்கள்.

“ரிடையர் ஆனதும் தூக்கிப் போட்டுட வேண்டிய பிரயோஜனமில்லாத குப்பை செத்தை நாம எல்லாம்”, யாரோ சொல்ல நான் மேஜை உள்ளே இருந்து ஃபைல்களை எடுத்து வெளியே வைத்தேன். எல்லோரும் அதையே பார்த்தபடி மௌனமாக இருந்தார்கள். மரமேஜை, நாற்காலி, ஃபைல் கட்டு என்று வாழ்க்கையில் பெரிய பகுதியைச் செலவழித்தவர்கள் அந்த லகான்கள் இல்லாமல் நடக்க முயன்று தடுமாறுகிறார்கள். ’சர்க்கார் உத்தியோகம் ஒரு வசதி இல்லை, மனநிலை. வாழ்க்கை முறை’. முந்திய கவர்னர் துரை ஏதோ கொண்டாட்டத்தில் பேசியபோது சொன்னார். வாஸ்தவம்தான்.

இந்த முதியவர்களிடம் யுத்தகால டெம்பரரி உத்தியோகஸ்தராக கால் சம்பளத்தில் வேலை செய்கிறீர்களா என்று கேட்டால் ஆட்சேபணையே இன்றி வந்து விடுவார்கள். காலையில் ஒன்பது மணிக்கு ஆபீஸ் போகிற சந்தோஷத்துக்காகக் காசு வாங்காமல் கூட வேலை செய்வார்கள்.

ஏக்கத்தோடு என் மேஜையை அவர்கள் பார்ப்பதாகத் தோன்ற “அப்புறம், எப்படி சார் இருக்கீங்க எல்லோரும்..” என்று பொதுவாகப் பார்த்து விசாரித்தேன்.

“என் ஜி ஓக்களுக்கு தனியா எவாகுவேஷன் ரயில் ஓட்டப் போறாங்களாமே” என்று ஒருத்தர் கேட்க, “அதெல்லாம் கப்சா, இலவச ரயில் சேவை போறாதுன்னு அலவன்ஸும் கொடுத்து அதுவும் போதாம ஸ்பெஷல் இலவச ரயிலா? சரிதான்” என்றார் மற்றவர். எல்லோரும் சிரிக்கிற ஓசை.

இவர்கள் எல்லாம் சாப்பிட்டார்களோ? இல்லை என்றால் கோபியிடம் சொல்லி ஆளுக்கு ரெண்டு இட்லி கேண்டீனில் வாங்கித் தரலாம். என் அப்பாஜி இருபது உருவங்களாக எனக்காகக் காத்திருக்கிறார். இவர்கள் எல்லாருக்கும் இங்கே காலை ஆகாரமும் காப்பியும் கொடுக்க முடியுமானால் பஞ்சாங்கக்காரரோ ஸ்வஜாதி புரோகிதரோ நடத்தித் தரும் வருடாந்திரக் காரியம் எல்லாம் உபரி புண்ணியம் தேடும் உபாயங்கள் தானே?

இருபது பென்ஷன் தாரர்களுக்கும் ஏற்கனவே வவுச்சர் போட்டு தனித்தனி பழுப்பு உறைகளில் பென்ஷன் பணத்தைப் போட்டு வைத்திருந்தேன். ஒவ்வொருத்தராகக் கூப்பிட்டு ரெண்டு நிமிடம் குசலம் விசாரித்து விட்டுப் பணம் கொடுப்பது இந்த டிபார்ட்மெண்ட் வந்து, இரண்டு மாதமாக வாடிக்கை. அவர்கள் ஒவ்வொருத்தருக்குப் பின்னாலும் ஆளுக்கொரு பெரிய வாழ்க்கைக் கதை இருப்பதை அறிவேன். நோயும், முதுமையும் அவர்களை அலைக்கழித்து அல்லல்படுத்துவதோடு சர்க்கார் வேறே ஒவ்வொரு மாதமும் நேரில் வந்து பென்ஷன் வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று விதிமுறை உண்டாக்கித் தன் பங்குக்கு சிரமப்படுத்துகிறது.

ஜியார்ஜ் டவுணிலிருந்து ரெண்டு மைல் குதிரை வண்டிப் பிரயாணம் செய்து பென்ஷன் வாங்க வருகிறவரிலிருந்து, கிட்டத்தட்ட ஐம்பது மைல் அரக்கோணத்திலிருந்து ரயில் வண்டியேறி வருகிறவரும் இதிலுண்டு.

எல்லாரும் வாங்கிக் கொண்டு இருமலும் உடம்பு நோவுமாக கை கூப்பிப் போக, நான் சீக்கிரம் இதை ஏறக்கட்டி வைத்துவிட்டு வீடு திரும்பி ரத்னாபாயை டாக்டரிடம் கூட்டிப் போவதிலேயே மனசு செலுத்தி இருந்தேன். அப்படியே சற்றுல் கண்ணயர்ந்து விட்டேன் என்பதையும் சொல்லியாக வேண்டும். நேற்று ராத்திரி கண் விழித்தது எப்படியெல்லாம் படுத்துகிறது!

இதென்ன, எல்லோரும் பணம் வாங்கியும் மேஜை ஓரமாக இன்னும் ஒரு கவர் பாக்கி இருக்கே. அது இப்போதுதான் கண்ணில் பட்டது. பட்டுவாடா புத்தகத்தில் பார்க்க, ராமச்சந்திர ராவ் இன்னும் பென்ஷன் வாங்கவில்லை என்று தெரிந்தது. எங்கே போயிருப்பார்? இன்றைக்கு வந்திருக்கிறாரா?

மற்ற பென்ஷனர்கள் எல்லாம் பென்ஷன் வாங்கிக் கொண்டு போய் விட்டிருந்தார்கள் என்பதால் அவர்களைக் கேட்கவும் வழியில்லை.

எதுவும் செய்யத் தோன்றாமல் மணியை அடித்து பரபரப்பானேன்.

பியூன் வீரையா என்ன என்று கேட்டபடி வந்து நான் தான் மணி அடித்தேன் என்று தெரிந்து சுவாரசியம் குறைந்து போய்த் திரும்ப வெளியேற உத்தேசித்தபோது அவசரமாகக் கேட்டேன் –

“ராமச்சந்திர ராவ்னு ஒரு பெரியவர், ஆவடியிலே இருந்து வரப்பட்டவர், இதுவரை பென்ஷன் வாங்க வரலியே, வந்தாரான்னு தெரியுமா?”

என்னை, அதாவது பென்ஷன் இலாகா சீனியர் கிளார்க்கைச் சந்திக்க யார் வந்தாலும் வீரையாவுக்குத் தெரியாமல் போகாது. பென்ஷனர்களை அவன் பார்த்துப் பார்த்துப் பரஸ்பரம் நல்ல பழக்கம். அவர்களின் பூர்வ ஜன்மம் கூட வீரையாவுக்கு அத்துப்படி.

ஆனால், வீரையாவைக் கெல்லித் தகவல் வாங்குவதும், கல் சுவரில் ஆணி அடிப்பதும் ஒரே மாதிரி கணிசமாக வியர்த்தமாகும் காரியமாகும்.

பௌர்ணமி ராத்திரிகளில் ஏழுகிணற்றில் தன் காரை வீட்டுவாசல் வேப்ப மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி, தெலுங்கில் சிங்காரம் கொஞ்சும் பாட்டுகள் பாடுவதில் ஈடுபாடுள்ள வீரையா அப்படியான தோதில் ஒரு பாடலை சத்தமில்லாமல் பாடியபடி தனக்குத் தெரியாது என்று கைவிரித்து அபிநயம் பிடித்தான்.

பொழுது போகாத நேரங்களில் என் சீட்டுக்கு வந்து எதிரே நின்று பௌர்ணமி ஊஞ்சலாட்டம், பாட்டு, காரை வீட்டுக்குள் கூட்டிப்போன பெண்களின் லாவண்யம், உள்ளே நடந்தேறிய சேஷ்டைகளின் விவரம் என்று தெலுங்குத் தமிழில் பொழிந்து, இங்கே பலரையும் பொறாமைப்பட வைக்கிறவன் வீரையா.

’நேனு பட்டுகுன்னானு’ என்று அவன் ராகம் இழுத்ததை நிறுத்தி, ”அதை எல்லாம் அப்புறம் பிடிச்சுக்கலாம் … ராமச்சந்திர ராவ் விஷயம் தெரிஞ்சா சொல்லு.” என்று நான் மன்றாட, சட்டென்று மனம் மாறி விஷயத்துக்கு வந்துவிட்டான் அவன்.

ராமச்சந்திர ராவ் அடைத்துப் பூட்டி வைத்த கட்டிடப் பகுதிகள் ஓரமாக மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்ததை இரண்டு மணி நேரம் முன்னால் வீரையா பார்த்திருக்கிறான். அப்புறம்? கொஞ்சம் இருங்க, வரேன் என்று போய் வாய் நிறைய சோற்றை அடைத்து மென்றபடி இருந்த இன்னொருத்தரைக் கூட்டி வந்தான் வீரையா.

டஃப்திரி உன்னித்தான் என்று அடையாளம் சொல்லப்பட்ட அந்த மெலிந்த மனுஷர் பக்கவாட்டில் ஷேக்ஸ்பியர் மாதிரி இருந்தார். அவர் கேண்டீன் வடையைக் கடித்தபடி யோசித்தார். கோட்டை வாசலில் மேற்கண்ட ராமச்சந்திர ராவ் கைத்தடி ஊன்றி நடந்து போனதைப் பார்த்ததாகச் சொன்னார்.

அது ஒரு மணி நேரத்துக்கு முந்தி இருக்கலாமாம். ”ஊணு கழிக்க விடமாட்டீங்களே.. தலை போகிற காரியமா இது?” என்று சாடிவிட்டுப் போனார் ஷேக்ஸ்பியர்.

போனமாதம் ராமச்சந்திர ராவ் பென்ஷன் வாங்கிக் கொண்டது நினைவு வந்தது. மகனோ யாரோ அவரைக் காலையிலேயே கொண்டு வந்து விட்டுவிட்டு சாயந்திரம் வரை வரவேயில்லை. பம்பாயில் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆபீசில் முப்பத்தைந்து வருஷத்துக்கு மேல் சீனியர் க்ளார்க் ஆக உத்தியோகம் பார்த்து ரிடையர் ஆனவர். மெட்றாஸுக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்து, இங்கே பென்ஷன் மாற்றிக் கொண்ட ராவுக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது.

போன மாதம் மதியச் சாப்பாட்டுக்குக் கூட யாரும் கேண்டீனுக்கு வழிகாட்டாமல் என் ஆபீஸ் அறை ஓரம் வைத்திருந்த பானைத் தண்ணீரை மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் குடித்தபடி என் பார்வையில் பட்டார் ராவ்.

மராட்டியில் பேசி அவர் யார் என்று தெரிந்து கொண்டு, கேண்டீனில் அப்போது போட்டிருந்த கோதுமைக் கத்தரிக்காய் என்ற வினோதமான உணவுப் பண்டத்தை ரெண்டு ப்ளேட் வாங்கி அவரோடு சாப்பிட்டேன்.

வாங்கிபாத் செய்ய அரிசி இல்லாததால் கோதுமை வேகவைத்து கத்தரிக்காய் வதக்கிப் போட்டு ஒரு யுத்த கால உணவு. ராவ் நல்ல பசியில் இருந்ததாலோ என்னமோ ருசித்து சாப்பிட்டார். எனக்கும் பசி வந்து அந்த வடக்கத்தி வாங்கிபாத்தை நேசிக்க ஆரம்பித்தேன் அன்று.

அன்றைக்குச் சாயந்திரம் வந்த அவர் மகன், ”ஆபீஸ் போற அவசரத்துலே அப்பா கையிலே காசு கொடுக்க மறந்து போயிட்டேன். அதான் பென்ஷன் வருதே… அதுலே இருந்து எடுத்து சாப்பிடலாமே.. அவருக்கு எதுவும் தனக்காகத் தெரியாது.. சொன்னா செய்வார்.. அம்புட்டுத்தான்” என்று நொட்டைச்சொல் சொன்னபடி பென்ஷன் பணத்தை நான் பார்த்துக் கொண்டிருக்க, சாவதானமாக எண்ணி நாலு ஐந்து ரூபாய் நோட்டுகளை மட்டும் தன் அப்பாஜியிடம் கொடுத்து மிச்சத்தை தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். தம்புசெட்டி தெருவில் ஏதோ பிரைவேட் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக இருக்கிறானாம். கோணலாக டபுள்நாட் முடிச்சு போட்ட டை கட்டியிருந்தான் சேல்ஸ் மேனேஜர்.

அந்தப் பெரியவர் அன்றைக்கு இருமத் தொடங்க, அவசரமாக அதை நிறுத்தி என்னைப் பார்த்துச் சிரித்தார். என் அப்பாஜிக்கு சுருட்டும் மூக்குத் தூளும் படைக்காமல் ஒரு பாட்டில் பெப்ஸு இருமல் மாத்திரைகளைப் படைத்து அவர் மூலம் இந்த ராமச்சந்திர ராவுக்கு இருமல் சுவஸ்தமாக்கலாம் என்று கிறுக்குத்தனமாக அன்று தோன்றியது.

இருமிக் கொண்டே ராவ் இன்றைக்கு எங்கே போனாரோ.

பகல் ஒரு மணி வரை அவருக்காகக் காத்திருந்து ஆளைக் காணோம். அவருக்குச் சேர வேண்டிய இந்த மாதப் பென்ஷன் பணத்தை வவுச்சர் போட்டு இரும்புப் பெட்டியில் வைக்க வேண்டியது தான். ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டே. வவுச்சரில் இரண்டாம் கையெழுத்து போட ஹெட் க்ளார்க் வேண்டுமே. இன்றைக்கு என்று ஹெட் கிளார்க் லீவு எடுத்திருக்கிறார். சூப்பரிண்டெண்ட் சாரிடம் போகலாம என்றால் காலையிலேயே கவர்னரின் காரியதரிசியோடு ஏதோ மீட்டிங் என்று உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் எழுகிற வழியாக இல்லை.

சாப்பிடாவிட்டால் கூடப் பரவாயில்லை. டாக்டரைப் போய்ப் பார்க்க வேண்டும். நேற்றைக்கு சாயந்திரம் அபாயச் சங்கு ஊதிய நேரத்தில் விமானத் தாக்குதல் ஷெல்டரில் அவள் பட்ட துன்பம் கொடிது.

ராமச்சந்திர ராவ் பென்ஷன் பணத்தை என் வசமே வைத்திருந்து பிற்பகல் நாலு மணியைப் போல் கோட்டைக்குத் திரும்பி வந்து அவரிடம் கொடுக்க முடிவு செய்தேன். இங்கே தான் எங்கேயாவது கக்கூஸ் எங்கே இருக்கு என்று அபிநயம் பிடித்து அவசரமாக விசர்ஜனத்துக்கு அலைபாய்ந்து கொண்டிருப்பார். பென்ஷன் வாங்காமல் போக மாட்டார். அவர் விட்டாலும் டை கட்டிய அவருடைய மகன் சும்மா விடமாட்டான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன