ரேஷன் உலகம் – எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி

புரசைவாக்கம் போகும் ட்ராம் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. ஏறி உட்கார்ந்து முக்கால் மணி நேரத்தில் வீட்டுக்கு வந்தாகி விட்டது. அதுவரை இருப்புக் கொள்ளவில்லை. சைக்கிள் எடுத்து வந்திருந்தால் இன்னும் சீக்கிரமாகப் போயிருக்கலாம். பரவாயில்லை. போய்ச் சேர்ந்தால் சரி.

வீடு பூட்டி இருந்தது.

என்ன ஆச்சு? புருஷன் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று என்னை திராட்டில் விட்டு அவள் மட்டும் பட்டணத்திலிருந்து வெளியேற முடிவு செய்து, இச்சல்கரஞ்சியில் அம்மா வீட்டுக்குக் கிளம்பியிருப்பாளோ.

சே, என்ன மட்டமான நினைப்பு. அவளுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் விளையாட்டுக்குச் செய்து பார்க்கலாம் என்று கூட மனதில் தோன்றாதே.

ஹனம்கொண்டாவில் அமிர்தாபாய் வீட்டுக்கு ‘சக்காளத்தி சண்டை’ போடக் கிளம்பிப் போயிருப்பாளா? உலக மகாயுத்தமென்று எங்கள் தெருவிலே துப்பாக்கி எடுத்துச் சுட்டுக்கொண்டு ராணுவம் ஓடினாலும், சண்டையோ, சமாதானமோ, அமிர்தா வீட்டுக்கு அவள் போகமாட்டாளே. வாயுத்தொல்லை மிகுந்த பூமியாச்சே அது.

கஸ்தூரிபா மாதர் சங்க வேலையாக காரியதரிசியைப் பார்க்கப் போயிருப்பாள் என்று முடிவு செய்தேன். தெருவில் முதல்வீடு. இன்னும் காலி செய்யபடாத, பூதலிங்க ஆசாரியார் வகையில் பட்ட சுபாங்கி அம்மாளுடைய வெங்கடேச க்ருஹம் என்று காம்பவுண்ட் சுவரில் கொத்தி வைத்த வீடு.

நான் ஓடிப் போய் அங்கே நிற்க, பெரிய பலாப்பழத்தை உரித்துக் கொண்டிருந்த ஆசாரியாரின் பேரனும் அவருடைய மனைவி சுபா என்ற சுபாங்கி அம்மாளும் உடனே ஒரு பத்து சுளையை எடுத்துப் போகச் சொல்லி வற்புறுத்தினார்கள். நீங்களும் வாயாற சாப்பிடுங்க என்று கோரிக்கைவேறு.

வரிப்பலா… ரத்னாளுக்கு ரொம்ப பிடிக்கும் என்று சுபாங்கி அம்மாள் கூடுதல் சிபாரிசு.

வரிப்பலாவோ வரிக்குதிரைப் பலாவோ, ரத்னா ஆசைப்பட்டதை சாப்பிடட்டும். ஆனால் சாப்பிட அவள் எங்கே?

மாதர் சங்கம் இனி அடுத்த கூட்டம் நாளை மறுநாள் தான் என்றாள் சுபாங்கி அம்மாள். எங்கே போயிருப்பாள் என் தேவதை?

ஒரே ஒரு சுளையாவது தின்னுட்டுப் போங்க .. தேன் தடவி வச்சிருக்கு என்று தம்பதி சமேதராக உபசரிக்க, வேண்டாம் என்று மரியாதையும் பிரியமுமாக மறுத்தபடி வெளியேறினேன்.

மதறாஸிலிருந்து இச்சல்கரஞ்சிக்கு நேரடி ரயில் கிடையாது. கோலாப்பூர் வழியாகத்தான் போக வேண்டும். போயிருப்பாளோ. எதற்கும் சென்ட்ரல் ஸ்டேஷனில் கோலாப்பூர் போகும் ரயில் எப்போது கிளம்புகிறது என்று பார்த்து வந்தால் என்ன? கிளம்பத் தயாராக இருந்தால், அவசர அவசரமாக ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக ரத்னா ரத்னா என்று ஓங்கி அழைத்துக் கொண்டு தேடினால் என்ன? ரயில் கிளம்பும்போது ஏறி அவள் உள்ளே இருந்தால் கண்டுபிடித்தால் என்ன? அவளோடு மராட்டிய பூமிக்குப் போனால் என்ன? எவாகுவேஷன் என்பதால் ரயிலுக்கு டிக்கெட் வாங்க வேண்டாம்.

ரத்னா சென்ட்ரலுக்கு எல்லாம் தனியாகப் போக மாட்டாள். அதுவும் கோலாப்பூருக்கு ரயில் பிடிக்க. எவாகுவேஷன் பெருங்கும்பல் எல்லா ரயிலிலும் புளிமூட்டை போல அடைந்து மெட்றாஸை விட்டு ஓடிக் கொண்டிருக்கும் வேளை இது. ரத்னா கூட்டத்தைப் பார்த்தால் சங்கடப்படுவாள். ரயிலில் எங்கே போக?

என்னைத் தேடிக்கொண்டு கோட்டைக்கே என் ஆபிசுக்குப் போயிருப்பாளோ. தமிழும் தெலுங்கும் இங்கிலீஷும் மராட்டியும் இந்துஸ்தானியும் சரளமாகப் பேசக்கூடிய என் ரத்னாபாய் ஒரு வினாடியில் என் ஆபீசைக் கண்டு பிடித்து. பிடித்து விடுவாள் தான். கண்டு பிடித்து?

செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்து சேர என்ன மாதிரி அவசரம், அவசியம் அவளுக்கு? ஜப்பான்காரன் எங்கள் வீட்டு வாசலில் போர் விமானம் கொண்டு வந்து நிறுத்தி ரேடியேட்டருக்கு தண்ணீர் கேட்டிருந்தாலே ஒழிய உடனே என்னிடம் சொல்ல என்ன விஷயம்?

இனியும் ஓடிக் கொண்டிருக்க முடியாது. காலில் வலு இல்லை. வீட்டுக்குப் பாய்ந்து போய் என் சைக்கிளை எடுத்துக்கொண்டு பேப்பர் போடுகிற பையன்களைப் போல் கண்ணுமண்ணு தெரியாத வேகத்தில் மிதித்துக் கொண்டு டவுட்டன் வரை வந்து விட்டேன். பக்கத்தில் வெள்ளாளர் தெருவில் தான் மீசை டாக்டர் நாயர் டிஸ்பென்சரி வைத்து நடத்துவது.

ரத்னா, டாக்டரைத் தேடி வந்திருந்தால்? நான் பாட்டுக்கு உப்புமா கிண்டி வைத்து விட்டு, டிஎஸ்ஆர் புளிப்பசையை வைத்து திடீர் வத்தல்குழம்பு செய்து ஒப்பேற்றிச் சோறும் வடித்து விட்டுக் கிளம்பி விட்டேன். அவளுக்கு உடம்பு மறுபடி முடியாமல் போய் வயிற்று வேதனை மறுபடி ஏற்பட்டிருந்தால்?

ரத்னாவுக்கும் டாக்டர் மீசை நாயர் டிஸ்பென்சரி தெரியும். ரெண்டு பேரும் குழந்தைப் பேற்றுக்காக மருந்து சாப்பிட்டு செக் அப் செய்துகொள்ள வரும் இடம் தான். வரும்போது, டவுட்டனில் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குப் போகிற வழக்கம் என்பதால் ரத்னா டாக்டரைப் பார்க்கப் போகும் சமயங்களை ஆவலுடன் நோக்கியிருக்கும் வழக்கம் உண்டு. தாடையில் வழிய விட்டுக்கொண்டு, விரலில் கொஞ்சம் போல் பிசுபிசுப்பு தட்டுப்பட யாருக்குத்தான் ஐஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்காது?

சைக்கிள் ராக்சி தியேட்டர் பக்கம் ஓடித் திரும்ப உயர்த்திப் பிடித்த கருப்புக் குடையோடு ரத்னாபாய். கூடவே இன்னொரு குடை. பென்ஷனர் ராமச்சந்திர ராவ் அது.

ரத்னாவும் ராவும் கையில் கைத்தறிப் பைகளைச் சுமந்து வருகிறார்கள். இரண்டு பேரும் அப்பா, மகள் போல அந்நியோன்யமாகப் பேசிக்கொண்டு வேறே வருகிறார்கள். யுத்தகால உலகம் எப்படி எல்லாம் வடிவம் கொள்கிறது!

இப்போது ஒரு சைரன் ஒலித்து இந்த நல்ல நிமிஷத்தைப் பாழாக்கி விடக்கூடாது என்று பாலாஜியை வேண்டினேன்.

ஆனாலும் இந்த அபத்தமான காட்சியை களைத்துப் போன மனம் உண்டாக்கிக் காட்டியிருக்கலாம் என்றது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கிளார்க்கனின் அறிவு. ரத்னாவில் வயிற்றில் வலி, பென்ஷன் வாங்காமல் போன ராவ் என்று இரண்டு கவலைகளையும் ஒன்றாக்கி அந்தப் பூரணத்தில் கொழுக்கட்டை பிடித்து வேகவைத்து அனுபவிக்கத் தந்திருக்கும் அது.

கனவோ பிரமையோ, எதிரே ரத்னா வந்து கொண்டிருக்கிறாள். அவளோடு பேசுவதே நான் செய்ய வேண்டியது. மாய உருவம் மற்றதெல்லாம் தானே புரிந்து போகும். நான் சைக்கிளில் கால் ஊன்றி நிறுத்தி ரத்னாவின் கையில் இருந்து ஒரு சாக்குப்பையை வாங்கி கேரியரில் வைத்தேன்.

“டாக்டரைப் பார்க்கப் போனேன். அவர் சிம்லா போயிட்டாராம். வெய்யில் காலம் முடிஞ்சு தான் வருவாராம்.. வேறே டாக்டரைத் தேடணும். டௌட்டன்லே மாசாந்திர ஐஸ்கிரீமும் இல்லாமப் போகலாம்” என்றாள் ரத்னா சிரித்துக் கொண்டு.

”உன் வயிற்று வலி என்ன ஆச்சு?” நான் பதைபதைத்துக் கேட்க அவள் கனிவாகச் சிரித்தாள். “வயிற்று வலியா? சரியாச் சொன்னா அடிவயிற்று வலி. காலையிலே நீங்க போட்டுக்கொடுத்த காப்பியைக் குடிச்சதும் மாயமா போயே போச்சு”.

அவள் குரலும் காத்திரமாக இருந்தது ஆசுவாசமான ஒன்று.

“எதுக்கும் டாக்டரை நீங்க வர்றதுக்கு முன்னாலே பார்த்துட்டா, எப்படியும் நீங்க மதியத்துக்கு அப்புறம் லீவுதானே, மவுண்ட் ரோடில் போய் தர்பார் ஓட்டல்லே பெரிய கிளாஸ் நிறைய புதுசா ஐஸ்கிரீம் வந்திருக்காம்.. ஃபலூடான்னோ என்னமோ பேரு.. “

சரி, கையில் என்ன பாதி மெட்றாஸை வளைத்துப் போட்ட மாதிரி சாக்குப்பை?

”அதுவா? இன்னிக்கு ரேஷன்லே கூட்டமே இல்லே… எவாகுவேஷன்லே இது ஒரு சௌகரியம் .. போய் ரெண்டே நிமிஷம் க்யூவில் நின்னு அஸ்கா சர்க்கரையும், ரவையும் வாங்கினேன். கூடவே பாப்ளின் சட்டைத் துணியும், பத்தரை அணா விலைக்கு வேட்டியும் வேறே. ரேஷன் கடை எப்படியோ நடக்கறதுங்கறதே பெரிய விஷயம் இல்லையா? கவர்னர் ஹோப் துரைக்கு நன்றி சொல்லணுமோ என்னமோ, மேயர் சக்கரை செட்டியாருக்கு வாயிலே பிடிப்பிடியா சர்க்கரை போட்டு தேங்க்ஸ் கட்டாயம் சொல்லணும்” என்றாள்.

ஜவுளி விலைக்கட்டுப்பாடும் அரிசி, அஸ்கா, பருப்பு என்று சகலமானதும் கிடைக்காத ரேஷன் காலத்தில் ஏதாவது ரேஷன் கடையில் போடுகிறார்கள் என்று தகவல் வந்தால், தேவை இருக்கோ இல்லையோ வாங்கி வீட்டில் ஸ்டாக்கில் வைக்கிறது சகஜம் தானே? அதுவும் ஊரே காலி ஆகிறபோது.

”சுபாங்கி அம்மா ரேஷன்லே எப்போ என்ன போட்டாலும் உடனே தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்லிடும். இன்னிக்கும் அவங்க தகவல் தான்”.

அவள் சொல்ல நான் ஆதரவாகச் சிரித்தேன். சுபாங்கி அம்மாள் வீட்டில் பூண்டு புழங்குவதில்லை என்றாலும் ரேஷனில் கட்டுப்பாட்டு விலைக்குக் கிட்டியதால் அதை வாங்கி பரணில் பெட்டி வைத்துச் சேமித்து வீடே பூண்டு நெடியடிக்கப் பண்ணியதை மறக்க முடியுமா?

பிராந்தி கூட ரேஷனில் அபூர்வமாகக் கிடைக்கிறது. ரத்னா பாய்க்கு அதெல்லாம் அண்டக்கூடாது என்பதால் அந்தப் பக்கமே நான் போவதில்லை. அவ்வளவு தான். விறகுக்கு கட்டுப்பாடு வந்து கொண்டிருக்கு என்று தகவல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன