எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி – பத்திரிகை ஸ்ட்ரைக் 1943

இன்று நியூஸ்பேப்பர் வரவில்லை. இந்தியா முழுக்க ஒரு பத்திரிகையும் நேற்று அச்சாகவில்லை. காலைச் சுற்றின சனி தானே ஒழிந்து போனதாக, பேப்பர் வராத இன்றைய தினம் வெகு அமைதியாக இருந்தது. நான் எசகு பிசகாகப் பிடித்திருந்த ஷேவிங் ரேசரைக் கைதவறித் தரையில் போட்ட சத்தத்தில் பிராணசகி ரத்னாபாயை விழித்தெழ வைத்த சைலன்ஸ் அது.

விடா. பிளேடு பெயரைப் பார்த்தாலே பற்றிக்கொண்டு வருகிறது. சர்ஜிக்கல் எஃகு வைத்து செஞ்சது என்று பத்திரிகை விளம்பரம் சொல்லும். என்னமோ சத்ரசிகிச்சை – ஆபரேஷன் – செய்ய உண்டாக்கிய கூர்மையான பரிசுத்தமான கத்தியை உடைத்து உருக்கி அதே கூர்மையான ப்ளேட் பண்ணின மாதிரி பாவ்லா. எனக்கென்னமோ பழைய டிரங்கு பெட்டியை அறுத்து நெருப்பில் வாட்டித் தகடு ஆக்கியிருப்பானோ என்று சந்தேகம்.

ஷேவிங் சோப் இன்னொரு கண்றாவி. சலவை சோப்பால் முகம் அலம்பிய மாதிரி ஷேவிங் சோப் திட்டுத்திட்டாக அப்பும். அதைத் தடவி ரேசரால் இழுத்தால் ரத்தக் காயமும் சொரசொரவென்று பாதி வழித்துப்போட்ட சவரமுமாக முகம் கூடுதலாகச் சகிக்க முடியாமல் போகும்.

இந்த சனியன் சவரமே வேண்டாம் என்று தாடி வளர்த்துப் போனால் வங்காளத் தீவிரவாதிக்கு வால் பிடிக்கும் தமிழ்த் தாடிவாலா என்று ஆபீசில் மெமோ கொடுப்பார்கள். தேவையா?

யுத்தத்தைக் கை காட்டி என்ன எல்லாம் நம் தலையில் கட்டப்படுகிறது! எப்படி எல்லாம் ஆட வேண்டிப் போனது! வெறுத்துப் போய், கை தவறாமல் ரேசரைத் தரையில் வீசினேன்.

”இத்தனை வயசான அப்புறமும் சரியாகப் பிடித்து ஆன காரியத்தை கவனிக்க முடியாதா?” அர்த்தம் குழம்பி நான் மருள, தரையில் கிடந்த ரேசரைப் பார்த்தபடி தனக்கும் எனக்கும் முதல் தரமான காப்பி சேர்த்துக் கொண்டு வந்தாள் ரத்னா.

நரசு கம்பெனியார் ஸ்டூடியோ வைத்து சினிமா எடுக்காமல் காப்பிப்பொடி விற்பதிலேயே முழுக் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கிருபை செய்ய காலை நேரத்துக்கான தேவதையை நான் தொழுதேன்.

பேப்பர் வராத நல்ல காலை, நல்ல காப்பி. நல்ல பெண்டாட்டி. இந்த மகிழ்ச்சி நல்ல மனதில் இருந்து வடிவதற்குள் நல்ல ஆபீஸுக்கு நல்ல விதமாகக் கிளம்ப வேண்டும் என்ற ஆசையை எல்லாப் பொழுதுக்கும் என் தேவதையான ரத்னாவிடம் சொன்னேன்.

பட்டணம்பொடி வைத்த பெரிய பீங்கான் ஜாடியிலிருந்து சின்ன ஜாடிகள் நாலைந்துக்கு இடம் மாற்றியபடி ரத்னா சொன்னது –

”பாரத தேசமே வெள்ளையனே வெளியேறு-ன்னு சமுத்திரத்துப் பக்கம் விரல் நீட்டி சகலமான துரை, துரைசானிகளைக் கப்பலேறிச் சொந்த ஊரைப் பார்க்கப் போகச் சொல்லிக் கொண்டிருக்கிற நேரம். அந்தத் தகவலைப் பத்திரிகையிலே பிரசுரிக்கக் கூடாதுன்னு சட்டம் போட்டது சரிதானா? இதைக் கண்டிச்சு தேசத்திலே கன்யாகுமரியிலே இருந்து சிம்லா வரைக்கும் ஒரு பத்திரிகையும் வராத துக்க தினம் இன்னிக்கு. உங்களுக்கு என்ன விபரீத சந்தோஷம்?”

”மெட்றாஸ் சர்க்கார் சட்டம் போட்டா, சிம்லா பத்திரிகை ஏன் வரக்கூடாது?” என்று. அவள் மூக்கை நிமிண்டியபடி சும்மா வீம்புக்காகக் கேட்டேன்.

“தேச துரோகி” என்று அவள் ஒரு விரல் நீட்டிக் குற்றம் சாட்ட, அந்த விரலை மெல்லக் கடித்தேன். இதெல்லாம் இல்லாம இருக்க பத்திரிகை எப்பவும்போல் வந்திருக்கலாம் என்றாள் ஜாக்கிரதையாக விலகி அமர்ந்து.

கன்யாகுமரியிலிருந்து என்ன பத்திரிகை வருதாம்? நான் திரும்பச் சீண்ட சட்டென்று ‘குமரி’ என்று பதிலளித்தாள் அந்தப் பேதை. பேதை நான் தான். உள்ளூர்ப் பத்திரிகையே ஒழுங்காகப் படிக்காத ஞானசூனியம்.

குமரி எங்கே கிட்டியது அன்பே?

மாதர் சங்கத்தில் ஒரு உறுப்பினர் சரோஜினி தங்கம்மா நாஞ்சில் நாட்டுக்காரி. படித்து கொடுத்து வாங்கிக் கொள்வது வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி ஆகிய மகா எழுத்தாளர்களின் நாவல்கள் மட்டுமில்லை, குமரி போன்ற பத்திரிகைகளும் தானாம். பேப்பர் கிடைக்காமல், விளம்பரம் இல்லாமல் வந்தாலும், அடர்த்தியாக ஒரு பக்கம் விடாமல் படிக்க அச்சுப் போட்டு வரும் அபூர்வப் பத்திரிகையாம் அது.

ரத்னா பத்திரிகைத் துறை பிரமுகர் போல் கருத்துச் சொன்னதை ஓரக்கண்ணால் களிப்போடு கவனித்தேன்.

அவள் பெரிய ஜாடியை ஸ்டோர் ரூமில் ஜாக்கிரதையாக வைத்து விட்டு, அதன் குட்டிகள் போல இரண்டு சின்ன ஜாடிகளையும் உக்கிராணத்தில் அலமாரி ஓரமாக பேப்பர் விரித்து வைத்த மூலையில் இருத்தினாள்.

நான் பிரயோஜனமில்லாத சிந்தனைகளில் மனம் ஓட உட்கார்ந்திருந்தேன்.
க்விட் இண்டியா என்று சொல்வதை விடத் தமிழில் அதை ஒத்துழையாமை இயக்கம் என்று சொல்வது இன்னும் வசீகரமானது. வெள்ளையனே வெளியேறு என்று எதுகை மோனையாக ஒரு வரி சொல்வது இன்னும் நேர்த்தியானது. ‘டூ ஆர் டை’ என்பதைத் தமிழில் ‘செய் அல்லது செத்து மடி’ என்று ஆக்கினால் அது தடித்தோலையும் துளைத்துச் செயல்பட வைப்பது.

பேப்பர் வராவிட்டால் மனம் எப்படி எல்லாம் விரிவாகச் சிந்திக்கிறது. நாளைக்கும் ஒரு நாள் எல்லாப் பேப்பரையும் அடைத்துப் பூட்டி வைக்கட்டும். ரேடியோ கூட இருக்கும்வரை அச்சுப் போட்டு வந்த வார்த்தையை ஒதுக்கி வைக்கலாம். இன்று ஆபீசுக்கு எந்தப் பரபரப்பும் இல்லாமல் போகலாம். பேப்பர் வராததன் காரணம் இல்லை இது. இன்னும் சுவாரசியமானது. ரத்னாவிடம் இதுவரை சொல்லாதது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன