வாகன யோகம் 1943 – நான் எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி

நான் குளித்துக் கொண்டிருந்தபோது வாசலில் பூம் பூம் என்று கார் ஹாரன் சத்தம் காதில் விழ, சாடி நொடியில் குற்றாலத் துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு, வந்தாச்சு என்று குரல் கொடுத்தபடி சொட்டச் சொட்ட நனைந்து ஓடி வந்தேன். ரத்னா, இதேது கோமாளித்தனம் என்று கையில் எடுத்த கீரை கடையும் மத்தோடு ஸ்தம்பித்து நின்று, பக்கவாட்டுத் தோற்றத்தில் அழகாக ஆச்சரியப்பட்டாள்.

ஆறுமுக ஆசாரியாரே, வந்தாச்சு. நீர் ஒன்பது மணிக்கு அப்புறமல்லவோ வருவதாகச் சொன்னீர் என்று கூறியபடி நான் அவிழத் தொடங்கிய ஈரத் துண்டோடு கிட்டத்தட்ட வாசல் வரை துண்டோடு போக, ஊஞ்சலுக்குப் பக்கம் இருந்து விரைந்து கண் இமைக்கும் நேரத்தில் ரத்னா முன்வாசல் கதவைச் சார்த்தினாள்.

“என்ன ஆச்சு உமக்கு? குளிக்கப் பிடிக்கவில்லை என்றால் உமது உடம்பு சுபாவமாக எழுப்பும் நானாவித பரிமள கந்தங்களோடு வேலைக்குப் போம்.. இல்லையோ, டெட்டால் கரைத்த வெதுவெது ஜலத்தில் கதர்த் துண்டை முக்கி உடம்பு துடைத்துக் கொண்டு கிளம்பும். அதுவுமில்லையோ, பொறுமையாக வேம்பாவிலிருந்து வெந்நீர் சேந்தி ஆனந்தமாக நீராடி வாரும். அதை விட்டு, வீடு முழுக்க ஈரமாக்கிக் கொண்டு பாத்ரூமில் இருந்து ஆர்கிமிடீஸ் போல கண்டேன் கண்டேன் என்று பாதி நக்னனாக ஓடி வர என்னத்தைக் கண்டுபிடித்தீர்? உடம்பிலே பித்தம் அதிகமாகி ஏதேதோ செய்கிறீர்களோ”.

அரை மரியாதையில் அன்போடு மாதரசி கேட்டாள்.

”குளியல் அறை தரையில் கஸ்தூரி மஞ்சள் தூளும், அரம்பையரின் ஸ்நானத்துக்கான வாசனைப்பொடியும் கலந்து கிண்ணம் நிறைய வச்சிருக்கே, தண்ணீர் விழுந்து அது முழுக்கத் உபயோகமில்லாத கரைசலாகி விடுமே என்று உன்னிடம் சொல்லி கிண்ணத்தை அகற்றி தகுந்தபடி வெளியே வைக்கச் சொல்லத்தான் ஓடி வந்தேன்”, என்றேன்.

அது சரி, ஆறுமுக ஆச்சாரியார் நம் குளியலறைக்குள் ஏடாகூடமாக எப்படி வந்தார் என்று ரத்னா உடனே குறுக்கே புகுந்து விசாரித்தாள்.

”இன்றைக்கு பேப்பர் இல்லையா, எதை எதையோ மனசு, சீட்டுக்கட்டை வைத்து மாளிகை கட்டுவது போல கட்டி நிறுத்துகிறது. இதற்கு நடுவில் ராயர் மிட்டாய்க் கடையும், பட்டணம் பொடிக் கம்பெனியாரும், ஆறுமுக ஆச்சாரியாரும் புகுந்து விட்டிருக்கிறார்கள்”.

நான் சொன்ன பதிலை அவள் கிஞ்சித்தும் ரசிக்கவில்லை.

”என்னமோ போங்க, பித்தத்தோட ஆபீஸ் போனா, உக்கார்ந்து நாள் முழுக்கக் கணக்கு எழுத உடம்பிலே பலம் இருக்காது. பாதிக் கணக்குலே கோழிக் கிறுக்கலா ஏதாவது செஞ்சு வைக்கப் போறீங்க.. சுக்குப்பொடி போட்ட வென்னீர்லே எலுமிச்சம்பழம் பிழிஞ்சு தரட்டா? ஹார்லிக்ஸ் பாட்டில்லே போட்டு எடுத்துப் போய், போக வர ஒரு மடக்கு குடிச்சா எந்தப் பிணியும் அண்டாது”.

அவள் இனிப்பும் உப்புமாக ஆசை காட்டிய எலுமிச்சை பானம் உடனடியாக என்னால் வேண்டாம் என்று மறுக்கப்பட்டது. கவர்னரோ டெபுடி கவர்னரோ சூப்பரிண்டெண்டோ மீட்டிங் என்று வெற்றிலை பாக்கு வைத்துக் கூப்பிட்டால், பாட்டிலோடு போய் நிற்க முடியுமா? சீனியர் கிரேட் க்ளார்க் வேறே ஆகியிருக்கிறேன் நான்.

போன மாதம் சூப்பர்நியூமரரி ஆராவமுது, கவர்னர் துரை பார்க்க ஒரு பழைய நன்னாரி சர்பத் பாட்டிலில் திடமான வைக்கோல் நிறம் கொண்டதாக ஏதோ அடைத்துக் கொண்டு வந்து குடித்த மணியமாக இருந்திருக்கிறார்.

இது என்ன சமாச்சாரம் என்று ஆர்வத்தோடு துரை கேட்க, கருங்காலி என்று சொல்லியிருக்கிறார் நம்ம ஆராவமுது. மலையாள உச்சரிப்பில் ’கரிங்ஙாலி, எ சிம்பிள் றைஜெஸ்டிவ் வித் யூறிண் கொலர்’ என்று அரவிந்தாட்ச மேனோன் என்ற எப்போதும் சந்தனமும் வெற்றிலை பாக்கும் கலந்து வாடையடிக்கும் இன்னொரு சீனியர் குமாஸ்தா விளக்க, என்ன தோன்றியதோ துரை உடனே Whereas வேர் ஆஸ் என்று நைச்சியமாகத் தொடங்கும் சர்க்குலர் விடுத்தார். அதன் சாராம்சம் –

”இதனால் அறிவிப்பது யாதெனில், யுத்த காலத்தில் மன அழுத்தம் குறைய ரோசரி, ருத்ராட்ச மற்றும் துளசி மாலையில் மணி உருட்டுத்தலும், மேஜையில் வைக்கும் சிறிய தெய்வீகத் திருப்படம் எடுத்துக்கொண்டு வந்து அவ்வப்போது தொட்டு நமஸ்கரிப்பதும் உத்தியோக ஸ்தலத்தில் பார்க்கக் கிடைக்கிறது. அதெல்லாம் தாராளமாக அனுஷ்டிக்க அனுமதி உண்டு. இப்படி இருக்க, சிறுநீரைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு வந்து ஆபீஸில் சகலரும் பார்க்கக் குடிப்பது நல்ல பழக்கம் இல்லை என்பதோடு அங்ஙனம் பானம் பண்ணுகிறவர்களுக்கும் அருகில் முகரும் தூரத்தில் இருக்கும் மற்ற உத்தியோகஸ்தர்களுக்கும் எண்ணற்ற ரோகங்களை வரவழைக்கக் கூடிய காரியம் இது என்பதையும் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். கரிங்ஙாலி என்ற மூத்திர பானத்தை இங்கே உடனடியாகத் தடை செய்கிறேன்”.

ஆராவமுதன் கருங்காலி இல்லாமல் சீரகம் போட்டுக் காய்ச்சிய வென்னீருக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். எனினும் சமீப காலமாக அவரை துரைகளோ மற்ற உயர் உத்தியோகஸ்தர்களோ காது குடைய குண்டூசி வாங்கக்கூட மீட்டிங் எனக் கூப்பிடுவதில்லை.

நான் எலுமிச்சை நீரோடு ஆபீசில் நுழைந்தால், குந்தி இருந்து கழிக்கும் பாம்பே கக்கூஸ்கள் இல்லாத பூமிக்கு என்னை நாடு கடத்தி விடுவாராக இருக்கக்கூடும். இதை அசங்கியம் கருதி ரத்னாவிடம் சொல்லவில்லை.

புடலங்காய்க் துவட்டல், தேங்காய்த் துவையல், கோதுமைச் சாதம் கொஞ்சம், அரிசிச் சாதம் கொஞ்சம், வீட்டுத் தோட்டக் காய்கறி அரிந்து போட்ட, அரைத்து விட்ட சாம்பார், தக்காளி ரசம், அரிசி அப்பளம், மாங்காய்த் தொக்கு என்று ரத்னா வழக்கம்போல் ஃபுல் பெஞ்ச் கச்சேரியாகச் சமைத்திருந்ததை நிதானமாகச் சாப்பிட்டதை அவள் பார்த்து ஆச்சரியப் பட்டாள்.

”இது என்ன மாயம்? என் சமையல் உன்னதமானது என்று உணர்ந்து கொண்டதால் அனுபவித்து சாப்பிட முடிவு செய்ததாக காக்கா வடை கதை எல்லாம் வேணாம். துண்டோடு சாப்பிட உட்கார்ந்து பாதி சாப்பாட்டிலே எழுந்து போய் பேண்ட் போட்டு வருவீங்களே. அந்த கிறுக்குத்தனம் கூட இன்னிக்கு இல்லையே” என்பதாக உதட்டோரச் சிரிப்போடு சொன்னாள். அவள் குறிப்பிட்டது கொஞ்சம் சிக்கலான என் சாப்பாட்டு நடைமுறை பற்றி.

முழுக்க அனுபவித்துச் சாப்பிட்டு கால்சராயும் முழுக்கைச் சட்டையுமாக ஆபீசுக்குக் கிளம்பினால், கால்சராயின் இடுப்பு எத்தனை சிரமப்பட்டாலும், பொத்தான் போட வளைந்து கொடுக்காது. பேண்ட் இடுப்பை இறுக்குகிறதால் அதாவது இடுப்பு பருத்துப் போனதால் உடுக்கக் கஷ்டம் அதாவது, தொந்தி வந்திருப்பதால் சாப்பிட்டதும் பேண்ட்டை இடுப்பைச் சுற்றி வளைத்து உடுக்க பெரும் கஷ்டம்.

அதுவும் சாப்பிட்டவுடன். இரையெடுத்த வயிறு ஒரு மணி நேரமாவது உப்பலும் ஊதலுமாக பருத்திருக்கும்.

திருப்தியாகச் சாப்பிட்டு, சுலபமாக உடை உடுத்தி ஆபீஸ் போக, நான் கண்டுபிடித்த வழி குளித்து விட்டு இடுப்பில் கட்டிய அதே துண்டோடு சாப்பிட ஆரம்பிப்பது. சாம்பார் சோறோ, மோர்க்குழம்பு பிசைந்த சாதமோ உண்டபின் எழுந்து பேண்ட்டை மாட்டிக் கொண்டு திரும்ப வந்து சுட்ட அப்பளத்தை உடைத்துப் போட்டுக்கொண்டு ரசம் சோறு சாப்பிடுவது, மறுபடி எழுந்து போய் சட்டையை பேண்டுக்குள் விட்டுக்கொண்டு பொத்தான் போட்டுக் கொண்டு வந்து தயிர் சாதமும் கரகரவென்று ஒரு குத்து கிடாரங்காய் ஊறுகாயும், தொக்கும், ஒரு கரண்டி சந்தேகத்துக்குச் சாம்பாருமாக விழுங்குவது என்று வயிற்றை முறியடிக்கும் வழக்கம். அது இல்லாமல் போனால், ஆபீஸ் கிளம்பும் கடைசி நிமிடத்தில் பேண்டோடு தோற்றுப் போகும் யுத்தம் புரிய வேண்டி வரும். சைக்கிள் ஓட்டிப் போவது கடினம். ட்ராமில் குதித்து ஏறி இருந்து குதித்து இறங்குவது இன்னும் கடினம். உண்ட மயக்கம் சின்னத் தூக்கமாக எட்டிப் பார்க்கும் பொழுது அது.

இன்றைக்கு அதெல்லாம் தேவையில்லை. இன்று மட்டுமில்லை. இன்னும் ஒரு மாதமோ இரண்டு மாதமோ, இல்லை ரிடையர் ஆகும் வரையோ, வாகன யோகம் எனக்கு வாய்த்திருக்கிறது. பகார்ட், தல்போட், ஆஸ்டின் கார் அல்லது வில்லி ஜீப் என் வீட்டு வாசலுக்கு வந்து இன்று முதல் என்னைக் கூட்டிக் கொண்டு போகப் போகிறது. தினமும். ஹிஸ் மெஜஸ்டி சர்க்கார் எனக்களிக்கும் மரியாதை.

அசோகா பாக்குப் பொட்டலத்தைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டபோது ரத்னா கொஞ்சம் வாடிய ஒரு வெற்றிலையில் குல்கந்து வைத்துக் கொடுத்தாள்.

“கொழுந்து வெற்றிலை விற்ற ராஜாபாதர் எவாகுவேஷன்னு போயாச்சு. இது போன வாரம் வாங்கினது. ஈரத் துணியிலே சுத்தி வச்சிருந்தேன்.. நாளைக்கு போட வேணும்னா ஆபீஸ்லே இருந்து வரும்போது ப்ராட்வேயிலே வெற்றிலை கிடைக்குதான்னு பாருங்க”.

அவள் எச்சரிக்கை மணி ஒலித்தாலும், எப்படியாவது சமாளிப்பேன் என்ற நம்பிக்கையும் சிரிப்பாக வெளிப்பட்டது.

எதெதுக்கோ ரேஷன் வைக்கிற சர்க்கார், வெற்றிலை பாக்கு புகையிலைக்கு ஒரு ரேஷன்கடை திறந்தால் என்ன என்று சிந்தனையில் ஈடுபட்டிருக்க, வாசலில் பாம் பாம் என்று கார் ஹார்ன் சத்தம். எட்டிப் பார்த்தேன். ஆறுமுக ஆசாரிதான். ஆஸ்டின் காரில் வந்திருக்கிறார். பிரிட்டீஷ் ராஜாங்க சின்னம் பொறித்த பச்சை நிறம் பூசிய வண்டி அது.

”ராஜா மாதிரி பின்னாடி உக்காந்துட்டு வாங்க ராமோஜி சார்”.

ஆறுமுகம் ஆசாரியார் சண்டைக்கு வந்த மாதிரி, சத்தம் போட்டார். தெருவில் இன்னும் சில வீடுகள் ஜப்பான் விமானம் குண்டு வீசும் பயத்தில் பூட்டியிருக்க, மற்றவற்றில் யுத்த பயம், சாவு பயம் இல்லாமல் மெட்றாஸ் மனதே என்று ஒட்டிக் கொண்டிருந்த அத்தனை பேரும் என்ன சங்கதி என்று அறிய அவரவர் வாசலுக்கு வந்து விட்டிருந்தார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன