நான் ரத்னாவிடம் சொன்னேன் – ஆறுமுக ஆசாரியார் பிறந்தபோது நல்லா சத்தமா பேச வரணும்னு அவங்க வீட்டுலே ஒரு பலம் கோரோஜனையை பால்லே கரைச்சு கொடுத்தாங்களாம். அது போதாம சுமார் சைஸிலே ஒரு கடப்பாரையும் முழுங்கிட்டாராம். வால்யூம் கண்ட்ரோல் அவுட். அவராலே சத்தத்தை குறைக்கவே முடியாது.
அவர் கார் ஸ்டீரிங்கில் இருந்து கையை எடுத்து ரத்னாவை நமஸ்கரித்தபடி சொன்னது இது – எல்லாம் சரிதான். பெயரை ராங்கா சொல்லிட்டார் சார். நான் ஆறுமுக ஆசாரி இல்லே. ஆறுமுகத்தா பிள்ளை.
ஓ சாரி ஆறுமுகம் பிள்ளை என்று ஜகா வாங்கினேன். வண்டியைக் கிளப்பிக்கொண்டே ஆறுமுகம் பிள்ளை இல்லை, ஆறுமுகத்தா பிள்ளை என்றார். நான் நிதானமாக சரியான பெயரைச் சொல்லி, பின்னால் ராஜா மாதிரி உட்கார எனக்கு வராது. அவர் பக்கத்திலேயே ஒண்டிக்கொண்டு வருவதில் ஆறுமுகத்தா பிள்ளையாருக்கு பிரச்சனை ஏதும் உண்டோ என்று விசாரித்தேன்.
“பாருங்க மறுபடி தப்பா சொல்றீங்க. அது ஆறுமுகத்தா பிள்ளைவாள், பிள்ளையார் இல்லே”.
இன்னிக்குப் பூரா ஆறுமுகம் வகையறா பெயரைச் சரியும் தப்புமாக உச்சரித்தே நாள் நகரப் போகிறது என்ற பயம் பிடித்துக் கொள்ளப் பின்னால் உட்கார்ந்து பேச்சை மாற்றினேன்.
”கார் நல்லா இருக்கு”.
“பின்னே, நல்லா வாட்டர் வாஷ் செஞ்சு, முழு டாங்க் இஸ்பிரிட் போட்டு, விளக்கை, போனட்டை எல்லாம் தகதகன்னு மின்ன வச்சுட்டேன். பத்திரமா இருக்குதான்னு நாம் போய்ச் சேர்றதுக்குள்ளே தெரிஞ்சிடும். போய்ச் சேர்றது என்ன, போறதே இதுவரை காணாத வேறே எங்கேயோ இல்லையா?”
ஸ்டீரிங் வீலில் இருந்து கை எடுத்து அவசரமாகக் கும்பிடு போட்டு என் வயிற்றில் திகிலைக் கிளப்பினார் அவர்.
எனக்கும் தெரிந்ததுதான் என்றாலும், ஆறுமுகம் பிள்ளை, சரி வேண்டாம், பிள்ளையார் டிரைவர் என்னை தினமும் ஆபீசுக்குக் கூட்டிப் போகப் போவதே கவர்னரும் பிற துரைகளும் இந்த வாகனத்தை உபயோகிக்கும் முன் அதில் எந்த அபாயமும் இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொள்ளத்தான்.
எப்படி பழங்கால அரசர்கள் சாப்பிடும் முன் சாப்பாட்டை சுவைத்து சாப்பிட்டு கல்லுக் குண்டு மாதிரி உருள ஒருத்தனுக்கு சம்பளம் போட்டுக் கொடுத்தார்களோ அது போல இங்கே கார் பாதுகாப்பை உறுதி செய்ய நான்.
இதை ரத்னாவிடம் சொன்னால் முதலில் அந்த கார் உபசாரத்தைத் தூக்கி குப்பையில் எறியுங்கள் என்று சத்தம் போடுவாள். வேண்டாம். ஓடுகிற வரை ஓடட்டும்.
இந்தக் காரை யாரெல்லாம் உபயோகிக்கிறார்கள் என்று பிள்ளை டிரைவரிடம் விசாரித்தேன். ஆர்தர் ஹோப் துரை எப்பவாவது குஷி கிளம்பினால் காரை ஓட்டிக் கொண்டு ரேஸ் கிளப் போவார் என்று தெரிந்தது. குதிரை ரேஸில் பைத்தியம் பிடித்தது போல் ஈடுபாடு உள்ள மனுஷர் அவர்.
அவரைத் தவிர இன்னும் இரண்டு துரைகளின் பெயர்களைச் சொன்னார். அதில் ஒருத்தர் எவாகுவேஷன் நேரத்தில் மெட்றாஸ் மிருகக் காட்சி சாலைக்கு யமனாகப் போனவர். மிருகங்கள் எல்லாம் எவாக்குவேஷன் நேரத்தில் ஊருக்குள் வந்து வழியோடு போகிற யாரையும் அடித்துத் தின்று விடும் என்ற பயத்தால் அவருக்கு அரசாங்க அனுமதி கொடுத்து ராத்திரியோடு ராத்திரியாக வேலையை முடித்து வர அனுப்பியிருந்தார்கள்.
ரிப்பன் கட்டடத்துக்கு பின்னால் மிருகக் காட்சி சாலையில் வாசல் கதவை அடைத்துப் பூட்டி விட்டு, டார்ச் விளக்குகளோடு நாலு காவலாளிகள் கூட நடந்து வர, சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, கொரில்லா இப்படி ஒவ்வொரு விலங்காக கம்பி வழியே துப்பாக்கியால் துடிக்கத் துடிக்கச் சுட்டுக் கொன்ற படுபாவி அந்த வெள்ளைக்காரன். காண்டாமிருகத்தையும் நீர்யானையையும் கொல்ல காவல்காரர்களும் துப்பாக்கிகளால் சுட்டார்கள் என்று தகவல். அது மட்டுமில்லை, குட்டி யானையோடு அம்மா யானையையும் சேர்த்து மத்தகத்தில் குறி பார்த்துச் சுட்டுக் கொன்ற பாதகன் அவன். மிருகக் காட்சி சாலை உள்ளே இருந்த கவரிமான், புள்ளிமான் என்று அத்தனையையும் வேனில் ஏற்றித் தூக்கிப் போய் அடுத்த ஒரு மாதம் எல்லா வெள்ளைக்காரன் வீட்டிலும் மான்கறி, சமைத்து, கபாலத்திலிருந்து கொம்பு முளைக்கும் அளவு தின்று தீர்த்ததாகத் தகவல் வந்தது. குரங்குகள் மட்டும் தப்பித்து திருப்பதி பக்கம் ஓடி விட்டதாக நிம்மதி தரும் செய்தியும் வந்தது.
இந்தக் கொலைகாரனுக்குக் கொஞ்சமும் குறையாத இன்னொரு பாபாத்மா காரில் தினசரி வரப் போகிற இன்னொரு தடியன். இவன் மெட்றாஸ் தெருவில் அலைந்த லைசன்ஸ் இல்லாத நாய், கிழட்டு மாடு, வழி தவறிய வெள்ளாடு என்று எல்லா மிருகங்களையும் வர்ஜாவர்ஜமில்லாமல் கொன்று, மிருகக்காட்சிசாலை சிங்கத்துக்கும் புலிக்கும் அந்த மாமிசத்தைச் சாப்பிடப் போட்டவன். நாய் மாமிசம் சாப்பிடுகிற வன விலங்குகள் மதறாஸில் தான் இருந்திருக்கும். யானையும் காண்டாமிருகமும் மாமிசம் தின்னாது என்று யாரோ சொல்ல, யுத்தகாலத்தில் கிடைக்கிறதை வைத்துத்தான் ஜீவிக்க வேண்டும் என்று யானைக்கு புத்தி சொன்ன அபூர்வ புத்திசாலி இவன்.
“சாமிகளே, கோட்டைக்கு வந்தாச்சு. கொடி பிடிச்சு நடந்து போங்க”, பிள்ளையார் ஓரமாக நிறுத்தினார். ஓரக் கண்ணால் பார்த்தேன். இரண்டு மூன்று உத்தியோகஸ்தர்கள் போகிற போக்கில் அலட்சியமாக என்னைப் பார்த்து மூக்கைச் சிந்தி எறிந்து சுவரில் விரலைத் துடைத்துப் போனமாதிரி இருந்தது. நான் இறங்க முற்பட்டேன்.
“சாமிகளே, இந்தாங்க, கையெழுத்து போடுங்க” என்ற் ஒரு நூறு பக்க நோட்புக்கை நீட்டினார் ஆறுமுகத்தா பிள்ளை.
“கையெழுத்தெல்லாம் போடணும்னு யாரும் சொல்லலே. தினம் காலையிலே ஆபீஸ் வர கார் அனுப்பறோம்னு தான் பேச்சு அண்ணாச்சி” என்றேன்.
“அதை எனக்குச் சொல்லலியே, தம்பியாப்பிள்ளே. துளசிங்க முதலியார்வாள் நேத்து கார் சாவியைக் கொடுத்தபோதே நோட்டுப்புத்தகம் வாங்கி அதையும் சேர்த்துத்தான் கொடுத்தார். தினம் என்ன என்ன செய்யணும்னு வேறே சாங்கோபாங்கமா சொல்லியிருக்கார்”, பிள்ளையார் வெளியே வந்து எனக்கு முன்னால் கொஞ்சம் ஒதுங்கி மரியாதையாக நின்றார்.
“என்ன என்ன செய்யணும்?” இன்னிக்கு ஆபீஸ் ஐந்து பத்து நிமிஷம் தாமதமாகப் போனால் பரவாயில்லை. துரை காலைக் கழுவிக் குடிக்கிற இவர்களாச்சு, நானாச்சு.. துளசிங்கம் முதலியார் போன ஜன்மத்தில் இருந்து ஜூனியர் குமாஸ்தாவாகவே இருக்கப்பட்டவர். அவர் என்னை அதிகாரம் செய்வதாவது.
”காலையிலே டெப்போ போகணும், கவுர்மெண்ட் காரெல்லாம் ட்ராம் கார்களோட தான் நிப்பாட்டி வச்சிருக்கு. டிப்போவிலே இருபத்திநாலு மணி நேரமும் காவல் இருக்கும்கறதாலே பாதுகாப்புன்னு இந்த ஏற்பாடு. போய் காரைத் திறந்து சீட், ஸ்டீரிங்க், ப்ரேக் எல்லாம் இருக்கா, அததோட இடத்தில் அதது இருக்கான்னு செக் பண்ணனும். இஸ்பிரிட்டு இருக்கான்னு டேங்கைத் துறந்து பாத்துக்கணும்.”
“இஸ்பிரிட்டா?”
”ஆமா இல்லாட்டி பெட்ரோல் ஐயங்கார் பம்புலே போய் போட்டுக்கிட்டு சீட்டு வாங்கிட்டு வந்துடணும். அப்புறம் அதை ட்ரஷரியிலே கொடுத்துட்டு வந்தா போதும். ஐயங்காருக்கு காசு போயிடும்”..
இன்னும் இருக்கிறது என்று கையமர்த்தித் தொடர்ந்தார் –
”இஸ்பிரிட் இருந்தாலும் இல்லேன்னாலும் சீட் கீழே, பானட் உள்ளே, டாங்கு ஓரம், பின்னாடி டிக்கியிலே எல்லாம் தரோவா செக் பண்ணிடணும். வெடி குண்டு, குடுக்கை ஏதும் இருந்தா உடனே பக்கத்துலே போலீஸ் ஸ்டேஷன்லே சொல்லணும். அவங்க இருக்கட்டும் போய்ட்டு வாங்கன்னு அனுப்பி வைக்கலாம். குiண்டு இருந்தா, ஆபீஸ் வாசல்லே நிறுத்தி வச்சு பிகில் ஊதி ஆர்ப்பாட்டம் பண்ணி வெளியே எடுக்கவும் செய்யலாம். குண்டு இல்லேன்னு தெரிஞ்சா கார்லே அன்னிக்கும் அடுத்த நாளும் ஒரு கான்ஸ்டபிள் கூடவே வருவார்”.
இதுலே நான் எங்கே வரேன் என்று குழம்பிப்போய்க் கேட்டேன்.
“நீர் இல்லாமலா, கல்யாண மாப்பிள்ளையே நீர் தான்.. தினம் உங்க வீட்டுக்கு வந்து உம்மை வச்சு ஓட்டிப் போகணும். கார் உள்ளாற குண்டு இருந்து வெடிச்சா நம்ம ரெண்டு பேருக்கும் கைலாச பதவி கிடைச்சுடும்.. விஷ வாயு குடுக்கை இருந்தா, எனக்கு ஏதொண்ணும் செய்யாது. மூக்கு வீக்கு எனக்கு. உமக்கு அப்படி இல்லே. ரொம்ப நாசுக்கானது. அப்படித்தான் துரை சொன்னாரு…”
சமய சந்தர்ப்பம் தெரியாமல் எனக்கு பேருவகையும் பெருமையும் ஏற்பட்டது.
பின்னே இல்லேயா? ரத்னா பாய் பொடிபோட்டு பொடி போட்டு என் மூக்கையும் வாசனை பிடிப்பதில் கூர்மையானதாக்கியிருக்கிறாள். ஆனால் இது எப்படி அந்த கேடுகெட்ட ஜூனியர் துரைக்குத் தெரியும்?
”விஷ வாயு இருந்து மூக்கிலே குத்தினா நீங்க உடனே மயக்கம் போட்டுடுவீங்க.. இல்லையோ நாக்கு தொங்கி மூஞ்சி விகாரப்பட்டு வைகுந்தம் போயிடுவீங்க.. அப்போ நான் ஓரம் கட்டி வண்டியை நிறுத்தி..”.
போதும் என்றேன். நோட்புக் பத்தி சொல்லலியே என்று பிள்ளையாரே தகவல் பரிமாற முன்வந்தார்.
”தினம் நீங்க ஆபீஸ் போய்ச் சேர்ந்ததும், வண்டியிலே குண்டு இல்லே, விஷ வாயு இல்லே.. நான் இன்னிக்கு சவாரி வந்து இன்னும் உயிரோடு இருக்கேன்னு கையெழுத்து போடணும் தேதி போட்டுஅதைக் காட்டினால் தான் பெரிய துரை, சின்ன துரைங்க வண்டியிலே ஏறுவாங்க”.
எனக்கு வகைதொகை இல்லாமல் கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன். கோபத்தில் சாமியாடி, நாலு நல்ல வார்த்தையைத் துப்பித் தாண்டவம் ஆடலாம் தான். ஆனால் மாதம் பிறந்ததும் சம்பளம் கிடைக்காது. தடித்தோல் இருந்தால் சம்பளம், ப்ரமோஷன், அந்தஸ்து என்று எல்லாம் தானே வந்து சேரும். சக்கரவர்த்தி நீடூழி வாழ்க, கழிந்து விட்டு குண்டி துடைத்துப் போடும் அவருடைய பட்டாளத்தின் கடைக்கோடியில் நிற்கிற இந்த படுபாவிகளும் கட்டுப்பாடில்லாமல் காகிதம் கிடைத்து வாழ்க என்று துதித்துப் போனால் நானும் ரத்னாவும் திண்டாட்டம் இல்லாமல் ஜீவித்திருக்கலாம்.
பிள்ளையாரே எங்கே கையெழுத்து போடணும்? ஒண்ணு போதுமா?