எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ராமோஜி – ஒரு சிறு பகுதி

ஆபீசில் வேறு யாரும் வந்திருக்கவில்லை. இன்றைய கார் சவாரி பற்றிய கிண்டலும், கேலியும், பாராட்டும், அடுத்து என்ன ஆகும் என்ற ஆருடமும், வரப்போகும் புது வருஷ புரமோஷன்கள் பற்றி ஊகங்களும் என்று எல்லாமே கலந்து கட்டியாக மதியச் சாப்பாட்டு நேரத்தில் கேண்டீன் வாசலிலும், பின்னால் நின்று டெனார் சிகரெட் குடிப்பவர்கள் குழுவிலும், வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவுகிறவர்களின் பெருங்கோஷ்டியிலும் பரிமாறப்பட்டு விவாதிக்கப்படும். நான் இல்லாதபோது என்னைப் பற்றி என்ன விமர்சித்தார்கள் என்பதை வேறு யாரோ பற்றி என் காதில் விழுந்ததை அவரிடம் பண்டமாற்று செய்து பெற்றுக் கொள்ளலாம். அதுக்கு இன்னும் ஆறு மணி நேரம் கடந்து பகல் சாப்பாட்டு வேளை வர வேண்டும்.

ஆபீஸ் ஆரம்பித்ததும் வயசான ஒருத்தர் தனக்குத்தானே பேசியபடி வந்து நின்றார். பென்ஷன் போடுகிற குமாஸ்தா என்பதால் வயதானவர்கள் எப்படி நடந்தாலும், என்ன பேச ஆரம்பித்தாலும், என்னிடம் அனுப்பி விடுகிறார்கள். இவருக்கு என்ன கஷ்டமோ? எங்கே இருந்து வந்திருக்கிறாரோ. அவர் பேச ஆரம்பிக்கும் முன் நானே அடியெடுத்துக் கொடுத்தேன்.

”உடம்பு சௌகரியமா இருக்கீங்களா?”

”கரகரன்னு போகாம அப்பப்ப மலபந்தம்.. அதை விட்டா என் வயசுக்கு நல்லாத்தான் இருக்கேன் தம்பி”.

”எத்தனை வயசு?”

”அறுபத்திரெண்டு”.

”அதெல்லாம் ஒரு வயசா?”

”சரி அறுபத்து மூணுன்னு வச்சுக்குங்க”.

”வச்சுக்கலாம். சொல்லுங்க வேறே என்ன விஷயம்?””

”இந்தாண்டை வந்தேனா சரி பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். இந்த பென்ஷன் இருக்கே?”

“வரலியா?”

“இன்னிக்கு கரகரன்னு”

“அதைச் சொல்லலே …..பென்ஷன் வரல்லியா?”

”அதெல்லாம் ஈஸ்வரன் கிருபையிலே தானே மாசா மாசம் வந்துக்கிட்டு இருக்கு தம்பி. செங்கல்பட்டுலே இருந்து வர்றேன். பென்ஷன் வந்து நான் வாங்கிக்க வரலேன்னா கூட கூப்பிட்டு விட்டு கொடுக்கறாங்க.”

அப்ப என்ன தான் பிரச்சனை? அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். நான் உசிரோட இருக்கேனா என்று என்னைக் கேட்டார். நான் ஸ்தம்பித்துப் போனேன்.

குத்துக்கல்லாட்டம் ஒருத்தர் முன்னாலே உட்கார்ந்து, நான் உசிரோட இருக்கேனான்னு தன்னைப் பற்றிக் கேட்பதற்கு என்ன பதில் சொல்ல?

”பிரமாதமா இருக்கீங்க. முக சவரம் தான் செஞ்சுக்கலே போல இருக்கு”.

”அது இருக்கட்டும்’பா.. அடுத்த வாரம் தீபாவளி நேரத்துலே மழிச்சுக்கலாம்”.

”செய்யுங்க”.

”செய்ய என்னப்பா இருக்கு. நான் போன வருஷம் நவம்பர் எட்டாம் தேதி உயிரோடு இருந்தேனா? அப்போ என்ன ப்ரூப் அதுக்கு?”

பெரியவர் கேட்டார். நான் சும்மா இருந்தேன்.

”டிரஷரியிலே நான் போன நவம்பர்லே உயிரோடு இருந்ததா சர்ட்டிபிகேட் கேக்கறாங்க’பா”.

நான் அவரை உட்காரச் சொல்லிவிட்டு மேஜை டிராயரில் இருந்து கரகரவென்று கையால் செய்த காகிதத் தாளை எடுத்தேன். மசிப்பேனாவை எடுத்து கொஞ்சம் பெரிய எழுத்துகளில் எழுதினேன் –

’இந்தச் சான்றிதழ் ஸ்ரீமான் கண்டனூர் ராம.சோம. ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பென்ஷன் ஆபீஸ் சீனியர் உத்தியோகஸ்தனான பத்மநாப ராவ் ராமோஜிராவ் வழங்கியது. மேற்படி ராம.சோம மதறாஸ் ராஜதானி குடிநீர் விநியோக இலாக்காவில் சீனியர் குமாஸ்தாவாக வேலை பார்த்து 1942 ஜனவரியில் ரிடையர் ஆனவர். அவரை ராமோஜி ஆன நான் அவர் ரிடையர் ஆன டிசம்பர் 31, 1941, நவம்பர் 1, 1941, நவம்பர் 1, 1942, மேலும் அக்டோபர் 10, 1943 ஆன இன்றைய தினம் ஆகிய நாட்களில் நேரில் பார்த்துப் பேசியிருக்கிறேன். அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார். இதற்கு முன்பும் நான் சந்தித்தபோதும் உயிரோடு இருந்தார்’.

நான் கையெழுத்தும் தேதியும் போட்டு காகிதத்தில் எழுதித் தந்த சான்றிதழைப் பொன்னே போல் தன் கைப்பையில் வைத்துக் கொண்டார் ராம.சோம. அதோடு கூட கைப்பையில் இருந்து இன்னொரு காகிதத்தையும் எடுத்து நீட்டினார்.

இது என்னங்க, போன ஜன்ம விவரம் கேக்கறாங்களா? ஜோசியக்காரரைக் கேட்டு எழுதி வாங்கித் தரேன்னு சொல்லிடுங்க என்றபடி வேலையை ஆரம்பித்தேன்.

வேலை பிரமாதமாக வேறே எதுவும் இல்லை. பிரைமரி லெட்ஜர் தொகுதியில் இருந்து ஏழு துணை லெட்ஜர் தொகுதிகளுக்கு பென்ஷன் தொகைகளை இலாகா வாரியாக பிரித்து ஒவ்வொரு தொகையையும் வெவ்வேறு கணக்குத் தலைப்புகளில் கால் பங்கு, காலே அரைக்கால் பங்கு, அரைக்கால் பங்கு, இன்னொரு கால் பங்கு என்று பிரித்து எழுதும் காரியம் அது. இன்னும் இரண்டு நாளைக்கு அது தொடரும். மதறாஸ் மாகாணம் முழுக்க மொத்தம் ஏழாயிரத்துச் சில்லறை பென்ஷனர்கள். அத்தனை பேர் விவரமும் எழுதி துணை ஜெட்ஜர் வாரியாக, பங்கீடு வாரியாகக் கூட்டுத் தொகை கணக்கிட்டுப் போட வேண்டும். பிரைமரி லெட்ஜர் தொகுதிகளையும் சந்தேகத்துக்கு ஒரு தடவை கூட்டிப் போட வேண்டும். இந்தக் கூட்டுத் தொகை அந்தக் கூட்டுத்தொகையோடு ஒரு பைசா கூடக் கூடாமல் குறையாமல் இருந்தால் சகலமும் டாலி. பொருந்தி வந்ததற்காக கீழே வேலை பார்க்கும் நாலு ஜூனியர் குமஸ்தர்களுக்கும் டவாலிக்கும் கேண்டீனில் காப்பி உபசாரம் என் செலவில் நடத்தித் தர வேண்டும். கல்பகோடி வருஷக் காலமாக இதுதான் நடைமுறை.

”தம்பி டோட்டல் அடிக்க உக்கார்ற முந்தி கொஞ்சம் இந்தக் கடுதாசையும் பார்த்துடுங்க. துரை கையெழுத்து போட்டு வந்திருக்கு. போன வாரம் வந்துச்சு” என்றார் ராம.சோம.

“உங்களுக்கு குழந்தை பிறந்து தற்போது ஒரு வருடமாகிறது என்றும் ஸ்பெஷல் பிரசவ அலவன்ஸ் தர வேண்டும் என்றும் கோரி நீங்கள் அளித்த மனுவை உதவி கவர்னர் துரையவர்கள் கருணையோடு ஏற்றுக் கொண்டுள்ளார். நீங்கள் எந்த பிரசவ ஆஸ்பதிரியில் குழந்தை பெற்றுக் கொண்டீர்கள், குழந்தை பிறந்த நாள், குழந்தையின் தந்தை பெயர் ஆகிய தகவல்களையும் பென்ஷன் ஆபீசில் கொடுத்து வருடாந்திர ஸ்பெஷல் பிரசவ அலவன்ஸ் ரூபாய் முப்பத்தியேழு மாதாந்திரப் பென்ஷனோடு பெற்றுக் கொள்ளவும்”.

ஒரு வருடத்துக்கு முன் ராம.சோம கர்ப்பமாக இருந்து ஒரு குழந்தையைப் பிரசவித்திருக்கிறார். அதை வளர்க்க சகல அதிகாரமும் வாய்ந்த கவர்னர் தனி ஆபீஸ் ஸ்பெஷல் அலவன்சு தர வேண்டும் என்று கோரி அதுவும் ஏற்றுக்கொள்ளப் பட்டு, வருடம் முப்பதேழு ரூபாய் சாங்க்ஷன் ஆகியுள்ளது, இந்தத் தகவல்களை அறிந்து திகைப்பு மிகுந்து வர வேலை செய்யத் தோன்றாமல் கையில் எடுத்த பென்சிலை வைத்துக் காது குடைந்தபடி அப்படியே உறைந்து விட்டேன்.

”ஐயா, சொல்லவே இல்லியே, கன்கிராஜுலேஷன்” என்றபடி அவர் கையைக் குலுக்கினேன். அவர் புன்சிரிப்போடு சொன்னது இன்னும் தூக்கிவாரிப்போட வைத்தது.

“ஏதோ ஃபைல் மாறி நோட் போட்டு எனக்கு பிரசவ அலவன்ஸ் சாங்க்ஷன் பண்ணினதா லெட்டர் அனுப்பிட்டாங்க.. சும்மா விட்டுடலாம்னு திருமலாசாரி சாமிவாள் சொன்னார். பிரசவ ஆஸ்பத்திரி பேரு ஊர் கேட்டு ரெண்டு லெட்டர் வந்து அதுவும் நின்னுடுச்சு. இந்த மாதம் பார்த்தா, பென்ஷன் முப்பத்தேழு ரூபாய் அதிகமா வந்திருக்கு. நீங்க தான் கொடுத்திருக்கீங்க தம்பி” என்றார் அவர் நைச்சியமாக. அங்கே சுத்தி இங்கே சுத்தி என் மடியில் இந்தப் பலாப்பழம் விழுந்து விட்டிருக்கிறது.

நான் மரபீரோக்களை வரிசையாகத் திறந்து ஐந்து நிமிடம் போராடிய பிறகு ராம.சோம பென்ஷன் ஃபைலைக் கண்டேன். அதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. ராம.சோம எனக்கு முன் பொறுமையாக, சுமார் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார். ரிடையர் ஆனதும் கடவுள் கொடுக்கும் கொடை இது – உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்தபடிக்கே தூக்கம் போடுதல். பத்து நிமிடமோ ஒரு பகல், ஒரு ராத்திரியோ இந்தத் தூக்கத்துக்கு வரைமுறை இல்லை.

எழுப்பி அவருக்கும் கேண்டீன் சப்ளை காப்பியை சுடச்சுட வாங்கிக் கொடுத்தேன். அப்புறம் வரச் சொல்லி அனுப்பி விட்டு லெட்ஜர்களின் உலகத்தில் அமிழ்ந்து நாளை நகர்த்த முடிவு செய்தேன்.

“ராவன்னா மானா, நான் இதெல்லாம் பார்த்து நிதானமா நோட் போடறேன்.. நீங்க சமாதானமா வீட்டுக்குப் போய் சௌகரியமா இருந்து வாரும்”. எப்போ நான் திரும்பி வரணும் தம்பி என்று கேட்டார் பெரியவர். இன்னிக்கு அக்டோபர் பத்தாம் தேதி. அக்டோபர் இருபத்தேழு தீபாவளி.. மாசக் கடைசி . அதுக்கு அடுத்து பென்ஷன் பட்டுவாடா. நவம்பர் ஒண்ணும் ரெண்டும் கும்பல் அதிகமா இருக்கும். நவம்பர் மூணு வாங்க. புதன்கிழமை.. நீங்க உயிரோடு இருக்கறதா புது சர்ட்டிபிகேட்டும் கொடுத்துடுவேன். வருஷாந்திர சர்ட்டிபிகேட் தொல்லை இன்னும் ஒரு வருஷம் இல்லாம போகும்”.

“சரி பிரசவ அலவன்ஸ்?” அவர் விசாரித்தார். உங்க ஊரோ பக்கத்து ஊரோ கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலே பிரசவமாச்சுன்னு லெட்டர் தருவாங்களான்னு கேட்டுப் பாருங்களேன்”. அவர் சொன்னார் – “வேணாம் தம்பி. சட்டைப்பையிலே பத்து ரூபா நோட்டு வெளியே தெரியற மாதிரி போனா, கொடுத்தாலும் கொடுத்திடுவாங்க.. வாங்கிட்டு வந்தா உங்களுக்குத்தான் கஷ்டம்.. நோட்டு போடணும்” என்றார் சிரிக்காமல்.

“நோட்டு போடறதுக்கெல்லாம் ராமோஜி என்னிக்கும் அஞ்சினதில்லே ராவன்னா மானா” என்றபடி பென்சிலை லெட்ஜர் முதல் வரியில் வைத்தேன். அவர் குடையைத் தூக்கி கையிடுக்கில் வைத்தபடி வரேன் என்று போனார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன