மதியம் கேண்டீனுக்கு முழு ஆபீசுமே படை எடுத்திருக்க நான் எண்களின் பிரவாகத்தில் அடித்துப் போகப்பட்டேன், இலக்கு உணர்ந்த வெள்ளப் பெருக்கு அது. ஒன்றும் மற்றதும் மற்றதும் அடுத்ததும் அடுத்ததும், பிறவும் எல்லாம் ஒருபோல் ஒரே கூட்டுத் தொகையை எடுத்தியம்பி வாழ்க்கையில் களிபேருவகை கொண்டு, கூகூவென மகிழ்ந்திருக்க வைப்பதே ஆகும் அது.
மணி பார்த்தேன். பிற்பகல் மூன்று. சாப்பிட்டு வேலை பார்த்த களைப்பு தீர ஒரு கூட்டம் மறுபடி கேண்டீனுக்குக் காப்பியும் டீயும் தேடிப் போய்க் கொண்டிருந்தது. நேரம் போனதே தெரியாமல் நான். இலாகா வாரியாக பென்ஷன் இந்த மாதம் வழங்கியதைப் பங்கு பிரித்து அந்தந்த இலாகாவின் கணக்கில் பற்றெழுதி துரை கையொப்பமிட குறிப்பு அனுப்பியாக வேண்டும். இன்னும் இரண்டு நாளில் மொத்தக் கணக்கு எண்கள் ஒன்றோடு ஒன்று மாறுபாடில்லாமல் கை கோர்த்து ஆட, திங்களன்று அந்த யுகப் பிரளய தஸ்தாவேஜ் ஆன மாசாந்திர பென்ஷன் நோட்டை எழுத வேண்டும்.
ஆறு மணிக்கு ட்ராம் பிடித்து வீடு போய்ச் சேர, வாசல் கதவு வழக்கம் இல்லாத வழக்கமாக அடைத்து உள்ளே இருந்து தாழ்ப்பாள் போடப்பட்டுச் சார்த்தி இருந்தது.
ரத்னா, ரத்னா என்று நாலைந்து தடவை அழிக்கதவைத் தட்டிச் சத்தம் உண்டாக்கியும் உள்ளே ஒரு அசைவும் தென்படவில்லை. கம்பி இடுக்கு வழியாக விரலை விட்டு எனக்கு மட்டும் தெரிந்த ஒரு மாதிரி கையை கோணலாகப் பிடித்து தாழ்ப்பாளைப் பற்றி அழுத்த கதவு திறந்து கொண்டது
அவசரமாக உள்ளே நுழைந்தேன். சாயந்திரத்துக்கான குத்து விளக்கு ஏற்றி கூடவே ஹாலில் டியூப்லைட்டும் போட்டு வைத்துத்தான் ரத்னா சாயந்திரத்தையும் ஆபீசிலிருந்து திரும்பும் என்னையும் வரவேற்பது வழக்கம்.
எந்த வெளிச்சமும் இல்லாமல் வீடு இருட்டில் கிடந்தது. நான் இதயம் பலமாகத் துடித்துத் திணறி மூச்சு அடைக்கத் தட்டுத் தடுமாறி ட்யூப் லைட்டைப் போட்டேன்.
என்ன சொல்ல? ரத்னா வீட்டு முற்றத்தில் துளசிச்செடி வைத்த சின்ன மேடையின் பின்னால் விழுந்து கிடந்தாள். தொட்டி அவள் கால் பக்கம் செடியோடு உருண்டு கிடந்தது.
முற்றத்துக்குப் பாய்ந்து ஓடினேன். துளசிக்கு நமஸ்காரம் செய்து தொட்டியை நேராக்கிய வினாடிக்கு அடுத்ததில் ரத்னா அருகில் தரையில் உட்கார்ந்து அவள் தலையை மடியில் வைத்துக் கொண்டு உலுக்கி எழுப்பினேன்.
மெல்லக் கண் விழித்தாள்.
”விடிஞ்சுடுத்துங்களா?”.
அவள் கேள்விக்குப் பதிலாக நான் தேம்பினேன். உடனே குரலை அடக்கி, அழுகையையும் நசித்து, “வா, ஹால்லே போய் உட்கார்ந்து பேசுவோம்” என்று சகஜ பாவத்தில் சொன்னேன்.
அவள் எழுந்து உட்கார முயற்சி செய்தாள். குழைந்து என் மடியில் கசங்கிய துணி போல விழுந்தாள்.
அவள் என்னை விட்டு எந்த வினாடியும் ஒரேயடியாகப் போய்விடுவாள் என்று மனதில் பட, குரல் எடுத்து ரத்னா ரத்னா என்று தீனமான கூக்குரலாகப் பெரும் சத்தம் எழுப்பினேன்.
அடுத்த வீட்டிலிருந்தும், எதிர் வீட்டிலிருந்தும் என்னாச்சு என்னாச்சு என்று குரல்கள். அடுத்த வினாடி என் வீட்டில் தெருவே கூடிவிட்டது.
யாரோ தெரு முனைக்கு ஓடி டாக்சி பிடித்து வந்தார்கள். இரு பெண்கள் கைத்தாங்கலாக ரத்னாவை பின் சீட்டில் மெல்ல இட்டுக் கூடவே சீட் விளிம்பில் அவள் தலையை மடியில் தாங்கி தொடுக்கினாற்போல் உட்கார்ந்தார்கள்.
நானும் டாக்சியில் ஏறிக் கொண்டேன். அவர்கள் டவுட்டன் போகச் சொன்னார்கள். நான் எனக்குப் பழக்கமான மீசை டாக்டரின் பெயர் சொன்னேன்.
போய்ட்டிருங்க. நாங்க பின்னாலேயே வரோம் என்றனர் கார்க் கதவை அடைத்து.
“கொஞ்சம் வேகமாப் போங்க” என்றேன்.
நல்ல வேளை, டாக்டர் இருந்தார். ரத்னாவைக் கிடத்திப் பரிசோதித்து என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு, “உடனே ஜெனரல் ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணணும்..நானும் வரேன்” என்றார். அப்போது தான் எனக்கு நிலைமையின் தீவிரம் உறைக்கத் தொடங்கியது. டாக்சியை அனுப்பாமல் நிற்கச் சொல்ல ஆள் போனது.
”குடல்வால் வீங்கியிருக்கறாப்பலே தோணுது. எக்ஸ்ரே எடுக்கணும். அதை அங்கேயே எடுத்துடலாம்” என்றார் டாக்டர்
எனக்கு ஜி எச்லே எந்த டாக்டரையும் தெரியாதே என்று பரிதாபமாகக் கேட்டேன். “ஏன் தெரியாது? அட் லீஸ்ட் ஒரு சீனியர் டாக்டரை உங்களுக்கு ஏற்கனவே தெரியும்” என்று என் தோளில் தட்டினார். போன வருடத்திலிருந்து அவரும் ஜெனரல் ஆஸ்பத்திரி சர்ஜனாம்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் என்ன எல்லாம் நடந்தது என்று அதெல்லாம் நடந்த வரிசையில் யோசிக்க முடியாமல், மொத்தமாகத் தான் மனதில் வருகிறது. ஆஸ்பத்திரியில் நோயாளிக்குப் படுக்கை கிடைக்க சிரமமாக இருந்தது. போன வருஷம் எவாகுவேஷன் நேரத்தில் இப்படிப் பெரிய ஆஸ்பத்திரியில் மொத்தமே பத்து நோயாளிகள் தான் டிஸ்சார்ஜ் ஆகாமல் படுத்திருந்தது. ஜப்பானுக்கும் ஜெர்மனிக்கும் பயந்து ஓடிப் போன நோயாளிகள் அப்போது. இடம் கிடைக்காமல் அலைகிறவர்கள் இப்போது.
டாக்டர் கரிசனத்தாலும் வயிற்றில் வலி உயிர் பறிக்கக் கூடும் என்பதாலும், யாரோ காலையில் டிஸ்சார்ஜ் ஆகி சுத்தப்படுத்தாமல் வைத்திருந்த படுக்கையை உடனடியாக சுத்தப்படுத்தி ரத்னாவைப் படுக்க வைத்தார்கள்.
டாக்டர் கொஞ்சமும் அவசரப்படாமல் சில சோதனைகள் செய்து பார்த்து பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றார். மதியம் ரத்னா சாப்பிட்ட ஏதோ பதார்த்தம் வலியை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என அபிப்பிராயப்பட்டார் அவர். ரத்னா பாய் எழுந்தவுடன் தான் அது என்ன என்று கேட்க வேண்டும்.
நாளைக்கு அறுவை சிகிச்சைக்கு வேறு இரண்டு சர்ஜன்களைப் பங்கெடுக்கச் சொல்லி அழைக்க இருந்த டாக்டர் அதை உடனடியாக ஒத்திப் போட்டதாகச் சொன்னார். “இப்போ வேண்டியிருக்காது.. அதான் சொல்வேன்”.
சட்டென்று அவர் குரல் உயர்ந்தது –
“இதென்ன ஒரு பேஷண்டுக்கு பதினைந்து விசிட்டர் இங்கே. ஒருத்தர் வேணும்னா எட்டு மணி வரை இருக்கலாம். போய்ட்டு காலையிலே ஏழு மணிக்கு ப்ளாஸ்கிலே எனக்கும் சேர்த்து காப்பி எடுத்துக்கிட்டு வாங்க ”
டாக்டர் சத்தமாகச் சொன்னபோதுதான் என் புத்தியில் பட்டது. அடுத்த வீட்டு ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ட்யூட்டிக்குப் போகாமல் என் ஆதிமூலமே குரலைக் கேட்டு ஓடி வந்து அங்கே நிற்கிறார். எதிர் வீட்டு விலாசினி டைப்பிஸ்டும் அவள் வீட்டுக்காரர் கேளப்பன் நாயரும் கையில் ப்ளாஸ்க், பர்சில் பணம் என்று எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டு வந்து எனக்குத் துணையாகக் காத்திருக்கிறார்கள். தெருக்கோடி சுபாங்கி அம்மாள் கந்தர்சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்தபடியே ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்கிறாள்.
இன்னும் கடைசி வீட்டு ராதாகிருஷ்ண போத்தி, விஷயம் கேட்டு ஓடி வந்த அடுத்த தெருப் பெண்மணி – உதவி அக்ராசனர். கஸ்தூர்பா மாதர் சங்கம் – என்று ரத்னாவுக்காக வந்த கூட்டம் அங்கே தான் இன்னும் நின்று கொண்டிருக்கிறது. நான் அவசரமாக அவர்களை நோக்கி நகர்ந்தேன்.
நான் நன்றி சொல்ல ஆரம்பித்து ஏதோ பிதற்றிக் கொண்டிருக்கும்போது இன்னொரு சர்ஜன் உள்ளே வந்தார். இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, “இன்னிக்கு ராத்திரி இங்கே இருக்கட்டும். காலையிலே பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணலாம்” என்றார்கள்.
உடனே விழுங்க வேண்டிய மாத்திரை என்றும், உடனே போட்டுக் கொள்ள வேண்டிய இஞ்செக்ஷன் என்றும் எழுதிக் கொடுத்து உடனே வாங்கி வர வேண்டும் என்றார்கள் அவர்கள்.
”பெர்மிஷன் வாங்குங்க, பெர்மிஷன் வாங்குங்க” விலாசினி டைப்பிஸ்டும், அடுத்த வீட்டு போஸ்ட் மாஸ்டரும் என்னிடம் மெதுவாகச் சொன்னார்கள். எதுக்கு பெர்மிஷன் யார் கிட்டே வாங்கணும்? ஒண்ணும் புரியவில்லை. ரத்னாவுக்கு மருந்து, இஞ்செக்ஷன் வாங்குவது தான் முதல் வேலை. மற்றதெல்லாம் அப்புறம் தான். ராத்திரி எட்டு மணி அடித்தது. எந்த மருந்துக்கடை திறந்திருக்கும்? சுபாங்கி அம்மாள் விவரம் சொன்னாள்.
“எங்க வீட்டுலே பிரசவம், ஹெர்னியா ஆப்பரேஷன், விழுந்து அடிபடறது, விஷக் காய்ச்சல்னு யாராவது இங்கே போக்குவரத்தா வந்து தங்கிட்டுப் போறாங்க.. ப்ளாஸ்க்லே வென்னீரும் காப்பியும், பாத்திரத்திலே இட்லியும் கொண்டாந்து கொண்டாந்து மருந்துக்கடை, பழக்கடை எங்கே இருக்குன்னு அத்துப்படி” என்றாள் அவள்.
“வரும்போது ரெண்டு பாக்கெட் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு வந்திடுங்க”, டாக்டர் சொல்ல, “விசிட்டர் எல்லாம் போகலாம்” என்று ஒரு நர்ஸ் நடந்தபடி ’விசிட்டர்’ என்பதில் அழுத்தம் கொடுத்துச் சொல்லிக் கொண்டு போனார்.
“நானும் வரேன்” என்று கேளப்பன் நாயர் கூடவே கிளம்பினார்.
ஆஸ்பத்திரிக்கு வெளியே வரும்போது சட்டைப்பையில் வைத்திருந்த பர்ஸை எடுத்து அப்படியே கொடுத்து விட்டார் என்னிடம்.
“சேட்டா, இதுலே நூற்றைம்பது ரூபாய் இருக்கு.. வச்சிக்குங்க.. மெல்ல கொடுத்தா போதும்” நான் அவர் கையைப் பிடித்துக்கொண்டு கண் கலங்க, முதுகில் தட்டிக் கொடுத்து, “ஆய்க்கோட்டே” என்று மேற்கொண்டு செயல்பட ஆதரவு தெரிவித்தார்.