ஜெனரல் ஆஸ்பத்திரியை ஒட்டி பெரிய மருந்துக் கடை இருந்தது. டாக்டர் கேட்டிருந்த மருந்தெல்லாம் வாங்கியானது. மெழுகுவர்த்தி வாங்க பதினைந்து நிமிடம் கடை தேடி அலைந்து ஒரு வழியாகக் கிட்டியது. கேளப்பன் ’மெழுரியுண்டோ’ என்று மெழுகு வர்த்தி கேட்டது கடைக்காரர்கள் அப்படி ஏதும் இல்லை என்று கை விரிக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.
மருந்து, மெழுகுவர்த்தியோடு ஆஸ்பத்திரிக்குள் ஓடினேன். மீசை நாயர் டாக்டர் நல்லவேளையாக இன்னும் அங்கே தான், கைக்கடியாரத்தைப் பார்த்தபடி, நின்றிருந்தார்.
“ஷி இஸ் ஆல்ரைட்.. நாளைக்கு இன்னொரு செக் அப்… ஒண்ணும் இருக்காது.. டிஸ்சார்ஜ் செஞ்சுடலாம்”. இஞ்ஞெக்ஷன் போட்டு விட்டு அவர் என்னைப் பார்த்து மீசையில் வடிகட்டிய இத்துனூண்டு சிரிப்போடு சொன்னார்.
கொஞ்சம் போல் நிம்மதி மனதில் எல்லையில் எட்டிப் பார்த்தது.
ரத்னா படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, “வீட்டுக்கு போகலாம்” என்று என்னிடம் சொன்னாள். “சீக்கிரம் போகலாம்” என்றேன். பக்கத்தில் கூப்பிட்டாள். யார் காலையோ மிதித்துக் கொண்டு அவள் அருகே போய் நின்றேன். குனியச் சொன்னாள். குட்ட மாட்டியே என்றபடி குனிந்தேன்.
“இவங்க எல்லாம் இங்கே என்ன பண்றாங்க?” என்று காதில் கேட்டாள். “சொல்ல ஆரம்பிச்சா விடிஞ்சுடும்” என்றபடி திரும்ப, யாரோ தோளில் தட்டினார்கள். டாக்டர்.
“இந்த மருந்து ஏன் வாங்கிட்டு வந்தீங்க.. சரியா படிக்கலியா மெடிக்கல் ஸ்டோர்ஸ்லே” என்றார்.
கேளப்பன் “நீங்க இங்கேயே இருங்க.. நான் போய்ட்டு வரேன்” என்று கிளம்பினார். வேண்டாம் என்று நான் அவசரமாகப் புறப்பட்டேன்.
“பேஷண்டுக்கு துணையா பெட் பக்கம் ராமோஜி சார் இருக்கலாம் தானே?”
விலாசினி கேட்க டாக்டர் ரொம்ப யோசித்து, “புது ரூல் படி பேஷண்ட் கூட யாரும் ராத்திரி தங்கி இருக்க முடியாது. காலையிலே ஏழு மணிக்கு வந்து ராத்திரி எட்டு வரைதான் இருக்கலாம்” என்றார்.
அவரிடம் கொஞ்சம் மெய்யும் கணிசமாகப் பொய்யுமாகக் கெஞ்சினேன். “டாக்டர், அவளுக்கு ஆஸ்பத்திரி சூழ்நிலை அதுவும் தமிழ் பேசற இந்த இடம் புதுசு. மராட்டி பேசி வளர்ந்தவ.. கூட நான் இருந்தா, ராத்திரி விசிட் வர்ற டாக்டர் எதாவது கேட்டா தகுந்த பதில் சொல்ல சௌகரியமா இருக்கும்..”
கூட்டமாக கோரிக்கை விட்டோம். சரி பார்க்கலாம் என்றபடி மறுபடி கைக்கடியாரத்தைப் பார்த்தார் டாக்டர்.
“பேஷண்ட் முழுப்பேரு?” நர்ஸ் கேட்க, நான் அவசரமாக ரத்னா பாய் என்று சொல்லும்போது கரண்ட் போய்விட்டது. சட்டென்று இருட்டு சூழ அப்படியே நின்றோம்.
கரண்ட் போன அடுத்த வினாடி எங்கும் நிலவும், பள்ளிக்கூடத்துக்கு திடீர் விடுமுறை என்று அடைத்துப் பூட்டியதில் பசங்களுக்கு ஏற்படும் நிமிஷ நேர சந்தோஷம் சர்வ வியாபகமாக நிலவியது.
”ஆஸ்பத்திரி, தெரு, பேட்டைன்னு எல்லாம் இருண்டு கிடக்கு. முழுசா கரண்ட் இல்லே”, விலாசினி இருட்டில் என் அருகே வியர்த்து நின்று சொன்னாள். ஒரு வினாடி தாறுமாறாக அலைபாய்ந்த மனதை அடக்கினேன். ரத்னாவைப் பார்த்தேன். அவள் மறுபடி பெட்டில் படுத்திருந்தது தெரிந்தது.
நர்ஸ் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வெளிச்சம்பட ஜன்னல் மேடையில் வைத்தாள்.
நான் இருட்டில் மறுபடி மருந்துக்கடை போய் மருந்தை சரியாக வாங்கிக்கொண்டேன். இருட்டை எதிர்பார்த்தோ என்னமோ மாதாகோவில் மாதிரி அங்கே வரிசையாகப் பெரிய மெழுகு வர்த்தி ஏற்றி வைத்திருந்ததால் எடுத்துத்தர சிரமம் இல்லாமல் போனது.
உள்ளே போகலாம் என்று ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்தபோது கதவு அடைத்து உள்ளிருந்து பூட்டப் பட்டதைக் கண்டு நிலைகுலைந்து போனேன்.
உள்ளே போக வழியே இல்லை.
இருட்டில் இந்த நிதர்சனம் இன்னும் கொடுமையானதாக மேலெழுந்து மருட்டியது.
ரத்னா ரத்னா என்று சத்தம் போட்டு அலறினேன். இன்றைக்கு இரண்டாம் தடவை இப்படி அவள் பெயரை உச்சரித்துக் கையாலாகாமல் அலறுகிறேன்.
என் கூட வந்தவர்கள் இருட்டில் அருகே வந்தார்கள்.
“உடனே ஷெல்டர் போகணும்… ஜப்பான்காரன் விமானத் தாக்குதல் நடக்கப் போறதாம்.. போலீஸ் கண்ட்ரோல் ஃபோன்லே” என்று கேளப்பன் சொல்வதற்குள் ஆகாசத்தில் பளிச்சென்று வெளிச்சம் குவிந்து நகர்ந்தது.
அடுத்த எட்டு மணி நேரம் ஜெனரல் ஆஸ்பத்திரி காம்பவுண்ட் வெளியே பள்ளம் தோண்டி ஏற்படுத்தி இருந்த ஷெல்டரில் ஒண்டிக் கொண்டேன்.
*********************************
மன்னிக்கணும். இந்த இடத்தில் இருந்து தொடர்ந்து பேசறது ஸ்ரீ ராமோஜி ராவ்சாகேப் இல்லை. அவருடைய சம்சாரம் ரத்னா பாய் ஆகிய நான். எங்க ராவ் சாகேப் தொடர்ந்து எழுதறேன் பேர்வழின்னு நாலைந்து தடவை எழுதி, சரியாக வந்ததாக மனசில் படாமல் பக்கம் பக்கமாக குறுக்கே கோடு போட்டு அடித்து வைத்திருக்கிறார் நோட்புக்கில்.
இந்த இடத்தை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதினாலும் சரியாக வரும்னு தோணலை. இது நீ அனுபவிச்சது ரத்னா. நீ சொன்னாத்தான் அதிலே நிஜம் தெரியும் என்று சொல்லிவிட்டார். இப்படி இதைக் கடந்து போக முடியாமல் திடுதிப்பென்று அந்தரத்தில் நிற்க வைப்பதை சகிக்க ஒண்ணாமல் நான் தொடர்கிறேன் என்று அவரிடம் கை காட்டினேன். எழுது என்றார்.
நான் சாதாரணமா நாள், நட்சத்திரம் கிரமமாக நினைவு வச்சுக்கறதில்லை. இவரோடு கூட சின்னச் சின்னதா மனஸ்தாபம், திடீர்னு இவர் ஏதாவது சொல்லி அல்லது செய்து ஏற்படுத்தற சந்தோஷம், யாரையாவது ரொம்ப நாள் கழித்து பார்க்கிறது இப்படி ஏதாவது நடந்தா அந்த நாள் மட்டும் மனசில் பளிச்சுனு பதிவாகி விடும். வருஷத்துலே பத்து பதினைந்து நாள்னு எடுத்துக்கிட்டாலே கல்யாணம் ஆகி இந்த ஐந்து வருஷத்திலே எழுபத்தைஞ்சு நாள் பதிவாகி இருக்குங்கறதுலே மகிழ்ச்சி.
இந்த அக்டோபர் பதினொண்ணாம் தேதி – 1943-ஆம் வருஷம் இதில் உண்டு.
****************************
(தொடர்வது ரத்னாபாய்)
இப்போ ராத்திரி. ஒன்பது மணி இருக்கும். அதுக்கு மேலேயும் இருக்கலாம். நடுராத்திரி இல்லே.
நான் படுத்திருக்கேன். ஒரே இருட்டாக இருக்கறது மனசுக்கு ஏதோ விதத்திலே நிம்மதியாக இருக்கு. இருட்டிலே எங்கே இருக்கறதா வேணும்னாலும் கற்பனை செய்துக்கலாம். இப்போ இந்த இருட்டிலே நான் அம்மா வீட்டுலே இருக்கறதா நினைச்சுக்கிட்டா அது உடனே மகாராஷ்ட்ரத்திலே கோலாப்பூர் ஜில்லாவிலே இச்சலகரஞ்சி டவுன்லே ஒரு பெரிய ரெண்டு மாடி வீடு ஆகும். அப்பாவும் அம்மாவும் தம்பியும் குடும்பமும் அங்கேதான் இருக்காங்க. இருளோ, வெளிச்சமோ, அவங்களைப் பத்தி நினைக்கவே சந்தோஷமா இருக்கு. அவங்களோடு நான் இல்லையேன்னு கொஞ்சம் ஏக்கமும் சேர்ந்து வருது.
இருட்டிலே நான் இருக்கறது எங்க மதராஸ் புரசைவாக்கம் வீட்டுலேன்னு நினைச்சுக்கிட்டா அது தான் நான் வாழ்க்கைப்பட்ட ஜாகை. இனி என்னிக்கு கடைசி மூச்சு போகுமோ அது வரை இங்கே தான் இருப்பு. அவர் இருக்கற இடம் இது. இருட்டும் வெளிச்சமும் வாசனையும் வாடையும் இனிப்பும் கசப்பும் துக்கமும் சந்தோஷமும் அவரும் நானும் சேர்ந்து அனுபவிக்கறோம். இனியும் தான்.
மற்றபடி நான் பிரயாணம் போன பம்பாய், கன்யாகுமரி, டில்லி எல்லாம் ஒரு வினாடி நினைச்சுக்கிட்டா அந்தந்த இடமா இந்த இருட்டிலே ஆகிடும். அதெல்லாம் எதுக்கு எனக்கு?
இப்போ நான் படுத்திருக்க இடம் இதுலே எது? என் ப்ரியமான ராமோஜி ராவ்சாகேப் குரலும், வாசனையும், மூச்சுக் காற்றும், உடம்பு சூடும் இங்கே எனக்கு கொஞ்சமாகவாவது அனுபவப்பட்டதாலே வீடு தானா இது?
pic courtesy columbia.edu