கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் 1943
டில்லியில் ரத்னாவின் மூத்த அண்ணன் மகள் புஷ்பவதியானதற்காக வீட்டு மட்டில் சுப நிகழ்ச்சி. அங்கிருந்து ஹரித்துவார் போய் வந்து வாரணாசி. வாரணாசியில் இருந்து மதறாஸ் திரும்புதல். முதல் கட்டமாக டில்லிக்கு இன்று சாயந்திரம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் பயணம் வைத்து நானும் ரத்னாவும் புறப்பட்டாகி விட்டது.
பஞ்சாங்கக்காரர் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் ஆறு மணிக்கு தயிரும் சர்க்கரையும் குழைத்துச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பச் சொன்னதோடு இன்னொன்றும் குறிப்பிட்டார்.
வடக்கு நோக்கிப் பயணம். அவ்வளவு சிலாக்கியம் இல்லை ஞாயித்துக்கிழமை. ஒரு லக்கேஜை தெருக்கோடி வீட்டில் இப்பொழுதே வைத்து விட்டால் போதும். பரஸ்தானம் என்று அதற்கு ஜோசியப் பெயர். இப்பொழுது வடக்கே பயணம் போக நல்ல நேரம் என்பதால் இன்று மூட்டை கொண்டு போய் வைத்தாலே பயணம் கிளம்பிய மாதிரி தான்.
சுபாங்கி அம்மாள் வீட்டில் ரத்னாவின் ரெண்டு ஆறு கஜப் புடவையும் ரெண்டு ஒன்பது கஜமும் வைத்த துணிப்பையை ரத்னா நேற்று சனிக்கிழமை ராத்திரி ஏழு மணிக்கு வைத்து விட்டு வந்தாள். யாத்திரை சுபமாக ஆரம்பம்.
காசிப் பயணிகளை வழியனுப்ப பாதி தெரு வீட்டு வாசலில். மீதி பூ, பழம், தித்திப்பு என்று கொண்டு வர ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தது. நாலு வீடு தள்ளி இருக்கும் திண்டுக்கல் பூட்டு கடைக்காரர் முதலியார் முதல் ஆளாக வந்து நின்று குதிரைக்கு வாழைப்பழம் கொடுத்துக் கொண்டிருந்தார். காசி போக சரீர ரீதியாக முதல் பிரயத்தனம் அந்த நாலுகால் பிராணியுடையது தான்.
தெருச் சிறுவர்கள் என், ரத்னாவின் காலைத் தொட்டு நமஸ்காரம் செய்தார்கள். ரத்னா தயாராக எடுத்து வந்திருந்த ஆரஞ்சு மிட்டாய்களை அவர்கள் வாயில் இட்டாள். சுபாங்கி அம்மாள் காலில் நாங்கள் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டோம். விலாசினி டைபிஸ்ட் ஓரமாக ஒதுங்கி நின்று ரத்னாவைத் தவிர்த்து என் காலில் மட்டும் விழ முயற்சி செய்ய, அவள் தோளைப் பிடித்துத் தூக்கித் தடுக்க மனதில் ஆர்வம் புறப்பட்டதை உடனே நிறுத்திப் புன்முறுவலோடு விலகிக் கொண்டேன். காசிக்கு மனசில் விலாசினி எதற்கு கூடுதல் லக்கேஜ் என்று கேட்டு இறக்கி வைத்தேன். காசி போய்த் திரும்பும் வரை, அதற்கப்புறமும் ரத்னா என்னை வழிநடத்திப் போகட்டும்.
வாங்க, போகலாம், நேரம் ஆகிடப் போறது என்றபடி ஒரு சிறுவனுக்கு மிட்டாய் கொடுத்துவிட்டு ரத்னா புறப்பட்டாள். வாசல் கதவைப் பூட்டியாச்சா, நல்ல பூட்டுதானே போட்டிருக்கீங்க? முதலியார் கேட்க, உங்க கடை பூட்டு தான் என்று பதில் சொன்னேன். தெருவே திருப்தியடைந்த பதில் அது.
ரத்னா இருந்ததாலோ என்னமோ, குதிரை உற்சாகமாக ஓட ஆரம்பித்தது. கடல்காற்று புறப்பட்டு மதறாஸ் பட்டிணத்தை சந்தோஷமாக இருக்கத் தகுந்த வசிப்பிடமாக அழுத்தந்திருத்தமாக எடுத்துக் காட்டியது. தில்லியில் கடல்காற்று இருக்காது என்று எச்சரித்தபடி குதிரை ஓடி நின்றது. செண்ட்ரல்.
செண்ட்ரல் ஸ்டேஷன் யுத்தகால பயம் காரணமாகவோ என்னமோ ஆள் அரவம் கம்மியாக பரபரப்பு ஏதும் தென்படாமல் இருந்தது. சர்க்கார் ரயில்வே போர்ட் பத்திரிகைகளில் செய்யும் விளம்பரங்களில் ரயில் பிரயாணத்துக்குக் கிளம்பினால் ஜட்கா வண்டிக்கு பேரம் பேசும் தகராறும், ஸ்டேஷன் உள்ளே மூட்டை முடிச்சு, குடும்பத்தோடு நுழைய சிரமமான மனுஷப் போக்குவரத்து இருக்கும் என்று படித்திருக்கிறேன்.
“ காசியோ, ராமேஸ்வரமோ, ஹரித்வாரோ, பயணம் அப்புறம் யுத்தம் ஓய்ந்து சாவகாசமாக மேற்கொள்ளலாம். இப்போது வேணாம்” என்று ரயில்வே அதிகாரிகள் செண்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் கூட்டமாக நின்று என் காலைப் பிடித்து மன்றாடுவார்கள் என்று எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.
கொண்டு வந்த மூட்டை முடிச்சை எண்ணிப் பார்த்தேன். என் உடுப்பு, விடா சவர ப்ளேடு, ரேசர் ….
இன்னொரு ஸ்டீல் ட்ரங்க், பச்சை நிறத்தில் கொஞ்சம் பெரியதாக – ரத்னாவின் உடுப்பு, புடவை, மேட்சிங் ரவிக்கைகள்…
பெரிய சாக்குப்பையில் …. வேளாவேளைக்கு சாப்பிட ரத்னா தயார் செய்து வைத்திருந்த சாப்பாடு. பெட்டியில் வைத்திருந்த காகிதத்தில் இதற்கான அட்டவணை இந்த ரீதியில் –
இன்று ராத்திரி எட்டு மணி – ஆளுக்கு நாலு மிளகாய்ப்பொடி இட்லி, தயிர் சாதம், கொத்தமல்லி தொக்கு, மைசூர்பாகு, பிளாஸ்க்கில் பசும்பால். பிளாஸ்கை அலம்பி வைக்க மறக்க வேண்டாம்
நாளைக் காலை ஏழரை மணி – ஆளுக்கு ரெண்டு இட்லி, அதிரசம், திருப்பதி பிரசாத வடை, திருப்பதி லட்டு, ரயில் காபி
நாளைப் பகல் ஒரு மணிக்கு – புளியஞ்சாதம், ஜவ்வரிசி வடாம், சப்பாத்தி, உருளைக் கிழங்கு பொடித்தது, தயிர்சாதம், வேப்பிலைக் கட்டி, குலோப்ஜாமுன்
நாளை சாயந்திரம் – பாதுஷா, மிக்சர், ரயில் காபி
நாளை ராத்திரி – பூரி மசாலா, புளியஞ்சாதம், உருளை வறுவல், தயிர் சாதம், எலுமிச்சை ஊறுகாய், ரயில் பால்
நாளை மறுநாள் காலை – அதிரசம், பிரட் ஜாம், ஜாங்கிரி, மிக்சர், ரயில் காபி
நாளை மறுநாள் பகல் – சப்பாத்தி, பூரி மசாலா, பிரட், ஜாம், ஜாங்கிரி
நாளை மறுநாள் சாயந்திரம் – மீந்த இனிப்பு, மீந்த காரம், ரயில் காபி
இத்தனை பண்ணிட்டு வந்திருக்கியே. வழியிலே வெய்யில் அதிகமாச்சே. புளியஞ்சாதம் ஊசிப்போச்சுன்னா என்ன பண்றது? இட்லி நொசநொசன்னு ஆனா தின்ன முடியாதே என்று கேட்டேன்.
அதெல்லாம் நீங்க சாப்பிடணும். ரயில் ஸ்டேஷன்லே நிக்கறபோது போய் சூடா வாங்கிட்டு வந்து எனக்கு ஊட்டி விடணும் நீங்க. சீரியஸாகச் சொல்லி என்னைப் பார்க்க, ஊட்டறதுன்னா இன்னிக்கே ஆரம்பிச்சுடலாமே என்றேன்.
(எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘ராமோஜி’யில் இருந்து ஒரு சிறு பகுதி இது)