எழுதி வரும் நாவல் ‘ராமோஜி’ : 1943-இல் ஓர் இரவு

சுற்றி வர மதறாஸ்லே எங்க வீட்டை ஒட்டி இருக்கப்பட்ட வீடு, எங்க தெரு, அடுத்த தெரு இப்படி சிநேகிதமா இருக்கப்பட்டவங்களோட குரல் எல்லாம் கேட்டபடி இருக்கு. கூடவே மீசை டாக்டர் நாயர் சார் குரலும் மனசுக்கு ஆறுதலா கேக்குது. அவர் யாருக்கோ ஊசி போடறார். இருட்டிலே அது யார்னு தெரியலே. என்னப் போல அச்சு அசப்பிலே இருக்கப்பட்ட ஒரு பெண். அவளுக்கு இஞ்செக்ஷன் போட்டா எனக்கு எறும்பு கடிச்ச மாதிரி வலிக்குது. இல்லே அங்கே படுத்திருக்கிறது நான் தானா? அப்போ பேசிட்டு இருக்கற நான் யாரு? தெரியலே. அது பெரிய விஷயம் இல்லே.

எங்க ராவ்சாகிப்பை கட்டில் பக்கம் குனியச் சொன்னேன். குட்ட மாட்டியேன்னு கிண்டல் பண்ணிட்டு குனிஞ்சார். மத்தவங்க எல்லாம் இங்கே என்ன பண்றாங்கன்னு கேக்கறேன். சிரிக்கறார். இது எந்த இடம்னு கேட்டபடி தளர்ந்து போய் கண் மூடிக்கறேன். என்ன ஆச்சு அப்புறம்னு தெரியலே.

கண் திறந்து பார்த்தா இருட்டு மட்டும் இன்னும் இருக்கு. என் கூட என்னைச் சுற்றி நின்ற ஒருத்தரையும் காணோம். இவரையும் தான். எங்கே என்னை விட்டுட்டு எல்லோரும் போயிட்டாங்க?

இருட்டு திடீர்னு பயமுறுத்துகிற விஷயமா போயிருக்கு. நான் உயிரோடு இருக்கேனா? இந்த இருட்டும் தனிச்சு இருக்கறதும் காலடிச் சத்தம் நெருங்கறதும் விலகிப் போறதும், குமட்ட வைக்கும் மருந்து நெடியும், அழுகின ஆரஞ்சுப்பழ வாடையும் எல்லாம் சாவோட இன்னும் பல உருவமா?

நான் ஏன் படுத்திருக்கேன்? கரகரகரகரன்னு எதை இழுத்துப் போறாங்க? யார்? இருட்டுலே என் நெற்றியிலே கை வச்சு பார்க்கறது யார்? அவரா? வளையல் போட்ட கை. அவர் இல்லே. விலாசினியா? தெரியலே. விலாசினி நல்ல பொண்ணு தான். இவர் தான் அவள் மேலே கொஞ்சம் ஈடுபாட்டோட இருக்கற மாதிரி தெரியறது. மெல்ல அதை மாத்திடலாம். முதல்லே இங்கே இருந்து எழுந்து போய் அவர் எங்கே இருக்கார்னு பார்க்கணும்.

நடக்க முடியுமா?

என் கன்னத்திலே தட்டி, மெல்ல அறைஞ்சு, தலையை உலுக்கி கேக்கறது விலாசினியா இருக்க முடியாது. யார் இது?

நடக்க முடியுமான்னு சொல்லு. திரும்பவும் யாரோ சொல்றாங்க. தோளிலே தட்டி வேறொரு குரல் அதையே கேட்குது. வயிற்றில் புதுசாக நோவு கிளம்பி வருது. உதட்டைக் கடிச்சுக்கிட்டு வலியைப் பொறுத்துக்கிறேன். நான் எழுந்து உட்கார்வேன். அவர் இங்கே தான் ஓரமா உட்கார்ந்திருக்கிறார். இல்லை, கதவைச் சார்த்தப் போயிருக்கிறார். இது வீடுதானே? நடக்க முடியுமான்னு கேக்கறது யார்? எழுந்திருக்கணும்.

எழுந்து உட்கார்றேன். இன்னும் கொஞ்சம் முயற்சி. தசையையும் சதையையும் கடந்து வலி பரவ, அதை மறக்கப் பார்க்கிறேன். நிற்க வேணும். நிற்கிறேன். வளையல் அணிந்த ரெண்டு ஜோடிக் கை என்னை இடுப்பிலும் தோளிலும் ஆதரவாகப் பிடிச்சிருக்குது. இருட்டில் அது அர்த்தமாகுது.

“ஐயோ பக்கத்திலே சத்தம் கேக்குது. ஜப்பான் ப்ளேன் ஆஸ்பத்திரிக்குள்ளே வந்துடுமா?”

“உள்ளே எதுக்கு வரணும்? மேலே பறந்தே.. கடவுளே இதென்ன?”

சத்தம், வெளிச்சம், எங்கேயோ ஒரு ஜனக்கூட்டம் சேர்ந்து அலறிக்கிட்டு ஓடுறாங்க. பிரகாசமான பறவைகள் நகர்வது போல ஜன்னலில் தெரியுது.

ஜன்னலை சார்த்து. ஜன்னலை சார்த்து. யாரோ ஓடிப் போய் வாசல் கதவு, ஜன்னல் இப்படி ஒவ்வொண்ணா சாத்துகிற சத்தம். இருட்டு இன்னும் ஆக்ரோஷமாகப் படர்ந்து வருது.

“இந்த ராத்திரி நாம உசிரோட இருந்துட்டா இன்னும் கொஞ்ச நாள் ஜீவிக்கலாம்”

ஒரு குரல் வருது. நான் ஈன ஸ்வரத்தில் ”என்ன சத்தம்?” என்கிறேன்.

”தீவிளி. பட்டாசு வெடிக்கறாங்க. வெங்காய வெடியை அடிச்சு வேடிக்கை பார்க்கறாங்க. நீயும் பட்டாசு வெடிக்கிறியா?”.

முகம் தெரியாத யாரோ கேலி பேச, அபத்தமாக சத்தம் போட்டு வானத்தில் ஏதோ ஒண்ணு நகர்கிற பெரிய சத்தம். ப்ளேனா? ஜப்பான் காரன் இங்கேயும் வந்துட்டானா? சாகப் போறேனா? இவர் எங்கே போனார்? இருக்காரா? ஓ-ன்னு அலற்றேன்.

ராவ்சாகேப் ராவ்சேகப் எங்கே போயிட்டீங்க? எங்கே போனீங்க? பக்கத்தில் எங்கேயோ பலமான சத்தத்தோடு எதுவோ விழுந்து இன்னும் அதிக வெளிச்சமும் சத்தமுமாக காற்றில் திறந்து மூடற ஜன்னல் வழியே தெரியுது.

”சும்மா படுத்திரும்மா. எல்லாரும் இங்கேதான் அங்கே இங்கேன்னு இருக்கறாங்க. ஜப்பான்கார ப்ளேன் மெட்றாஸ் மேலே குண்டு வெடிச்சுக்கிட்டிருக்கு. சும்மா கிட”.

”செஞ்சுலா, பத்து பேஷண்டை ஷெல்டருக்கு மாத்தியாச்சு. இங்கே நாலு மட்டும் தான் பாக்கி. நாலும் நடக்க முடியாத கேஸ்” மறுபடி வளைச் சத்தம்;

“இந்த பேஷண்ட் எப்படி? கைத்தாங்கலா கூட்டிப் போகலாமா?”

”செஞ்சம்மா, நடக்காது போல இருக்கு.. இருக்கட்டும்”, ஒரு குரல் சொல்ல, இரண்டு பேரும் விலகி நடக்கிற சத்தம்.

நான் நடந்தா என்ன ஆகியிருப்பேன், நடக்கலை என்பதால் என்ன ஆகப் போறேன்? இன்னொரு உறக்கம் வருது. கரகரவென்று எதையோ இழுத்து வர்ற சத்தம்.

“காஞ்சம்மா, நீ தானா?”

யார் காஞ்சம்மா? படுக்கை பக்கம் ஏதோ வண்டி வந்து நிற்கிறது.

“எந்த பெட்?”

“பெட் எதுக்கு? சும்மா தரையிலே போடு”.

”என்ன ஆச்சு? அடுப்பிலே இருந்து தீ மேலே விளுந்து எரிஞ்சு போயாச்சு”.

”பிழச்சதா?”

”என்னத்தை? முப்பது வயசுப் பொம்பளை. அய்யோ அதென்னடி ஆகாசத்திலே?”

தொப்புனு எதுவோ என் பக்கம் தரையில் விழுறது. ஒரு மெழுகுவர்த்தி இருந்தா என்னன்னு பார்க்கலாம். திரும்பவும் ப்ளேன் சத்தம். ஜன்னலைச் சார்த்துங்க. அது திறந்திருந்தால் உள்ளே வந்து விடும்.

”நீங்கல்லாம் யாரு? என் வீட்டுக்காரர் எங்கே? இது எந்த இடம்?”

நான் கேட்கிறேன். மறுபடி கேட்கிறேன். பதிலே இல்லை. வெளியே அமைதியாக இருக்குது. இருட்டாக இருக்குது. தரையிலே, என் படுக்கை பக்கம் நெருங்கி யாரோ அசந்து தூங்கிக்கிட்டிருக்காங்க.

”யார் அது தரையிலே?”

கேட்ட கேள்விக்குப் பதில் இல்லை.

”வீட்டிலே அடுப்பு பத்த வச்சு.. தீ மேலே வந்து.. போய்ச் சேர்ந்தாச்சு”.

போய் போய் போய்?

பக்கத்துலே கிடக்கிறவள் உயிரோடு இல்லை. நிமிஷாம்பா. நிமிஷாம்பா. எனக்கு என்ன ஆச்சு?

”ஒண்ணும் ஆகலே. நீ விடிஞ்சதும் கல்லுக் குண்டாட்டம் எழுந்து உக்காரப்போறே? கற்பகாம்பாளே காப்பாத்து. கற்பகம் பரபரப்பா இருக்கா. நான் இருக்கேனே குழந்தை நிமிஷாம்பான்னு கூப்பிட்டா ஒரு நிமிஷத்திலே உன் துன்பம் எல்லாம் தீர்த்து வைக்க வந்துட்டேன்”.

மல்லாந்து படுத்து முதுகெலும்பு நோவுது. இடது பக்கமா திரும்பி படுத்தேன். தரையில் கிடந்தது அசைந்த மாதிரி இருந்தது.

“நிமிஷாம்பா. நிமிஷாம்பா:.

”எதுக்கு பயப்படறே? அங்கே இருக்கறதும் இங்கே இருக்கறதும் நான் தான்”.

இருந்தாலும் பயமா இருக்கே. இந்தப் பக்கம் புரண்டு படுக்கக் கூடாது. மனசுலே திடமா உறுதி எடுத்துக்கிட்டேன்.

இன்னிக்கு காலையிலே இவள், இந்த உடம்பு பக்கத்துலே கிடக்கே இதுலே உயிரா இருந்தவ, குளிச்சு வீடு பெருக்கி, வாசல்லே கோலம் போட்டு, காலையிலே பசங்க, வீட்டுக்காரன் பசியாற இட்லி செஞ்சு சட்னி தொட்டுக்க வச்சுக் கொடுத்திருப்பா, பசங்க பள்ளிக்கூடம், அவன் ஆபீசு, கடை, இரும்படிக்கற இடம் போக புளிசாதம் பண்ணி டப்பாவிலே அடைச்சிருப்பா. போனதும் சாப்பிட்டுட்டு தீயோட ஏதோ விளையாடியிருக்கா. என்னடி விளையாடினே? திரும்பு சொல்றேன். நிமிஷாம்பா திரும்பட்டுமா?

”நீயே பயம்னு சொல்றே. நீயே திரும்பட்டுமான்னு கேக்கறே”.

“சரி நீ கோவிச்சுக்கிடாதே. இவர் எங்கேயோ போயிட்டார். நீயும் போயிடாதே. நான் திரும்பலே”.

இது என்ன இடம்? ஆஸ்பத்திரியா? பினாயில் வாடை அடிக்கலியே ஏன்? எதுக்காக இருட்டா வச்சிருக்காங்க?

”ஏனா, இங்கே பாரு, இப்படித் திரும்பேன். நான் தான்பேசறேன். உசிர் இல்லாட்ட என்ன மனசுக்குள்ளே பேசக்கூடாதா? எனக்கு மனசு இல்லையா?”

”நிமிஷாம்பா, நிமிஷாம்பா, இது என்ன விபரீதமா..”

”அதுவும் இதுவும் நான் தான்னு சொன்னேனே. விருப்பம் இருந்தா கேளு. இல்லேயா உறங்கப் பாரு”.

”இது என்ன இடம்னு கேட்டியே. இது என் மாதிரி உசிரில்லாத உடம்பை அடைச்சு வைக்கற கிடங்கி. நீ இங்கே என்ன பண்றே ரத்னா”?

”நிமிஷாம்பா, இந்த ஜடத்தை கொஞ்சம் அசங்காம இருக்கச் சொல்லேன். இது சவக் கிடங்காம்மா”?

”சே சே பொய் சொல்றா. ஆஸ்பத்திரி வார்டுலே பெட் இதெல்லாம்”.

”திரும்பிப் படுத்துக்கோ. ராப்பூறா பேசிட்டிருக்கலாம். திரும்ப சத்தம் வருது பார். ஜப்பான் ப்ளேன் திரும்பி வந்துடுச்சு. இப்போ இந்த இடமே இடிஞ்சு தீப்பிடிக்கப் போறது. நீ வேணும்னா பாரு. நீயும் கீழே தரையிலே வந்துடுவே. கட்டில் எல்லாம் மூச்சு இருக்கற வரைதான் கொடுப்பாங்க”..

திரும்பவும் ப்ளேன் வருது.. தூரத்திலே சத்தம் கேக்குது..

”இன்னிக்கு நம்ம கதையை முடிச்சுடுவாங்க போல இருக்கு… இங்கே இருக்கற பேஷண்ட் பேர் என்ன? ஒண்ணு பொன்னம்மாவோ என்னமோ சொன்னாங்க.. ரத்தினா பாய்.. இன்னொண்ணு? அதுக்கு பேர் வேறே வேணுமா? சவம்.. ஏண்டி இம்புட்டு நெருக்கமா வர்றே.. கட்டிக்காதேடி.. எப்படியோ இருக்கு.. பயமா? என்ன பயம்? போனா நீ, நான், ரத்னா பேஷண்ட் எல்லோரும் ஒரேயடியா… பேஷண்ட் அழுவுது.. விலகு.. பார்த்துட்டு வரேன்”..

உதடு உலர்ந்து தாகம் எடுத்தது. மூத்திரம் போகணும் என்று உடம்பு யாசிக்கிறது.எப்படியும் போயாக வேணும்… அதைப் பற்றி நினைத்தாலே சொட்டுச் சொட்டாக… ஐயோ.. ராவ்சாகிப்,… இருக்கீங்களா? ஏன் என்னைத் தனியா விட்டுட்டு போனீங்க .. அம்மா… புண்ணியமா போவுது.. எனக்கு ஒண்ணுக்கு போகணும்.. கொஞ்சம் கைத்தாங்கலா பிடிச்சு.. நான் நடப்பேன்.. கால்லே சக்தி இருக்கு..

”இந்த இருட்டுலே எங்கே கக்கூஸ தேடி உன்னை இட்டுப் போக? உன் படுக்கைக்கு அடியிலே பெட் பான் இருக்கு.. அதுலே போ.. இல்லே பெட் மேலேயே போ…”

”எப்படி எடுக்க? குனியணுமே… இருட்டிலே எங்கேன்னு தெரியாதே”..

”ரத்னா.. கொஞ்சம் இங்கே இந்தப்பக்கம் புரண்டு படுடீ.. காலையிலே நீ என்ன சமையல் செஞ்சே? பணியாரம்? சட்னி? உப்பு போட்டியா ரெண்டிலேயும்? நான் போடலே .. அதுக்காக அந்தாள் பண்ணின ரகளை.. இப்போ பாரு கரிக்கட்டையா தரையிலே உருண்டு கிடக்கேன்”..

”நிமிஷாம்பா… நிமிஷாம்பா.. நிமிஷாம்பா.. எழுந்திருக்கணும்.. பெட்பானை தேடணும்.. வேணாம்… எங்கே போய் யூரின் போகணுமோ அங்கே வரைக்கும் கூடவே வா.. நிமிஷாம்பா.. வா..”

வந்தேன்னு சொல்லிட்டு அம்மா வந்தான்னு தான் நினைக்கறேன். எங்கிருந்தோ அசுர பலம் வந்து எழுந்து நின்னேன். ஜன்னல் வழியா புகை சன்னமா வந்துட்டிருந்தது… இருட்டு மாறி ரெண்டு விளக்கு எரிஞ்சுது

நான் யூரின் போய்ட்டு வரும்போது எல்லா விளக்கும் எரிய வெளியே இருந்து கதவை இடிக்கும் சத்தம். என் படுக்கைக்கு வந்தேன். உட்கார்ந்தபடி திரும்பி தரையைப் பார்த்தேன்.

என்னால் பார்க்க முடியாத கோரமாக ஒரு பெண் உடம்பு.

மயக்கம் போட்டு விழும்போது ரத்னா வந்துட்டேன் நான் வந்தாச்சுடா என்று ராவ்சாகிப் குரல். எங்க வீட்டுக்காரர் வந்தாச்சு.. ஒரு நிமிஷம் … நானும் வந்தாச்சு..

ஒண்ணு மட்டும் சொல்லியே ஆகணும். நேத்து ராத்திரி இருந்த பயங்கொள்ளி ரத்னா இல்லே இப்போ நான். அவர் இல்லாம இருந்தாலும் சமாளிக்க முடியும் என்னால். அவரையும் சேர்த்துப் பார்த்துக்கணுமா அதுவும் முடியும். ஜப்பான்காரன் ப்ளேன்லே வந்து கற்றுக்கொடுத்துட்டுப் போயிருக்கான்.

நான் ராமோஜி இதைத் தொடர்ந்து எழுதறேன். நேற்றைக்கு ஒரு ராத்திரி என் அருமை ரத்னாவைப் பிரிந்து துடிச்சுத் துவண்டு இருந்தபோது அவள் தனியா என்ன கஷ்டப்பட்டா என்று அவள் சொன்னதைக் கேட்க எனக்கே கண்ணுலே ரத்தம் கொட்டறது… நாங்க, அப்பாவை, அம்மாவை, மகளை, மகனை, பெண்டாட்டியை ஆஸ்பத்திரி உள்ளே விட்டுட்டு, வாசல்லே பெரிய கதவைப் பூட்டி வச்சதாலே ராத்திரி முழுக்க என்ன ஆச்சுன்னு தெரியாமல் துன்பப்பட்டோம்.. ரொம்ப அருகிலே ஆனா நடுவிலே ஒரு கதவு அடைத்து ரொம்ப தொலைவிலே நான் ரத்னாவைத் தொலைச்சேன்.. இங்கே என்னோடு இருந்த ஒவ்வொருத்தரும் நெருங்கிய யாரையோ நேற்று ராத்திரி முழுக்க இழந்து போனோம்… ஜப்பான் விமானம் ஒண்ணே ஒண்ணு வந்து ஏழெட்டு குண்டு போட்டுட்டு ஓடினதாம்… ஹார்பர்லே ரெண்டு கிடங்குலே தீ பிடிச்சு அணைச்சாங்களாம்.. ஆனா அந்த எதிரி விமான பசங்க பத்து லட்சம் பேர் இருக்கற ஒரு பெரிய பட்டணத்தையே முழங்கால் நடுங்க பயந்து போய் பேயடிச்ச மாதிரி இருக்க வச்சுட்டாங்க..

ஏஆர்பி சைரன் ஏன் நேற்று ராத்திரி ஜப்பான் விமானம் வந்தபோது சத்தம் போடலே… இன்னிக்கு பேப்பர்லே போட்டிருக்காங்க.. போன மாசம் வந்த அடைமழையிலே சைரன் எல்லாம் கரண்டு கனெக்ஷன் விட்டுப் போய் ஊமையாயிடுச்சாம்.. மழை முடிஞ்சு அதை எல்லாம் செக் பண்ணி தயரா வைக்கணும்னு கவர்னர், மேயர், ஏஆர்பி வார்டன்கள் யாருக்குமே தோணலியே.. பேட்டை எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடு சொன்னார் – சாதா கனெக்ஷன் பிரச்சனை தாங்க.. வயரை சீவிட்டு போட்டு திருகியிருந்தா எட்டு ஊருக்கு சைரன் அலறி இருக்கும்.

நான் ஏஆர்பி வார்டனாக பதவி வந்தால் நிச்சயம் நாயுடுவை வைத்து வாராவாரம் சைரனைச் சோதனை செய்ய வைப்பேன். மீசை நாயர் டாக்டரை சக்கரவர்த்தியின் டாக்டராக அறிவிக்க சிபாரிசு செய்வேன். நிமிஷாம்பாள் கோவிலுக்கு வாராவாரம் தம்பதி சமேதராகப் போய் அம்மாவிடம் பேசிவிட்டு வருவேன். அவளிடம் கேட்டிருக்கிறேன் – இன்னொரு ஜப்பான் விமானம் குண்டுபோட மெட்றாஸுக்கு வர வேண்டாம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன