யாத்ரா சர்வீஸ்
————————————————————————–
நைனியப்ப நாயக்கன் தெருவில் இரு மத்திய வயசுத் தெலுங்கர்கள் ஒரு கம்பேனியை போன வருஷம் தொடங்கி இருக்கிறார்கள். காசி, ஹரித்வார், வட மதுரை இப்படி புண்ணிய ஸ்தலங்களுக்கு அவரவர்கள் ரயில் டிக்கெட்டு வாங்கி, பிரயாணத்தை அவரவர் மட்டுக்கு சௌகரியமாக்கிக் கொள்வது என்ற நடைமுறை உண்டல்லவா? அதற்கு மாறாக கோஷ்டி அடிப்படையில் ஸ்தல யாத்திரை போவது பற்றிய பிரஸ்தாபத்தை இந்தக் கம்பேனி செய்கிறது. அதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். யுத்த காலத்தில் பயணத்தைத் தவிர்ப்பீர் என்று சர்க்கார் திரும்பத் திரும்ப ஒரு பத்திரிகை விடாமல் கோரமாக கார்ட்டூன் படம் போட்டுப் பிரச்சாரம் செய்யும் போது, தவிர்க்க முடியாத பயணத்தை ஏன் தள்ளிப்போட வேண்டும் என்று மறைமுகமாகக் கேட்டு கோஷ்டியாக யாத்திரை போய்வர வழி செய்கிறது இந்தக் கம்பேனி.
சாப்பாட்டுக் கவலை இல்லாமல் பிரயாணம் வைக்கவும் இந்த யாத்ரா சர்வீஸ் வழி செய்திருப்பதாக பிரஸ்தாபம். ஒரு ரயில்வே கம்பார்ட்மெண்ட் முழுக்க இவர்கள் வாடகைக்கு எடுத்து சமையல்காரர்கள், சமையல் தளவாடம் சகிதம் யாத்திரா கோஷ்டியோடு அனுப்புகிறார்கள் என்று தெரிகிறது. ரயில் போகும் வழியில் பெரிய ஸ்டேஷனில் கம்பார்ட்மெண்டைப் பிரித்து விட்டு, ஓரமாக ஒரு ப்ளாட்பாரத்தை ஒட்டி அதை நிறுத்தி விடுவார்கள். சமையல், சாப்பாடு, துணி துவைத்தல், குளித்தல், சமையல், சாப்பாடு, எல்லாம் நிறைவேறின பிறகு அடுத்து வரும் ரயிலில் கம்பார்ட்மெண்டை இணைத்துப் பயணம் தொடரும். சாவகாசமாக காசி, பிரயாக், ஹரித்வார் இத்யாதி. என்ன, மூன்று நாளில் ரெகுலர் ரயிலில் காசி போக முடியும் என்றால் இந்த யாத்ரா சர்வீஸ் ஏற்பாட்டில் அது ஒரு வாரம் ஆகக் கூடும். வட இந்திய யாத்திரை என்று இன்னும் ஸ்தலங்களைப் பிரயாண லிஸ்டில் சேர்த்தால் ஒரு மாதம் பிடிக்கும் போய்த் திரும்பி வர.
’தீபாவளிக்கு காசியில் இருங்கள், கங்கா ஸ்நானத்தை வீட்டு பாத்ரூமில் வைக்காமல் கங்கை நதியிலேயே தீபாவளியன்று குளிக்கலாம் வாருங்கள்’ என்று விளம்பரம் எத்தனையோ பேரை ஏங்க வைக்கிறது எனத் தெரியும். ஆயிரம் இருந்தாலும் தீபாவளி மாதிரி நல்ல நாள் பெரிய நாளுக்கு வீட்டில் சகுடும்பத்தோடும் சிநேகிதர்களோடும் கொண்டாடாமல் ஹிந்தியில் மூச்சுவிடும் ஒரு பெரிய கூட்டத்தோடு அடித்துப் பிடித்துக்கொண்டு நின்று கங்கா ஸ்நானம் என்று பேருக்கு முழுக்குப் போடுவது விநோதமாக இருக்காதோ.
ஒரு மாதம் முழுக்க யாத்திரையில் போனால், ஆபீஸுக்கு எப்படி லீவு சொல்ல? காசிக்குப் போக லீவு வேணும் என்று கேட்டால் மத்யானம் அரைநாள் எடுத்துண்டு பேஷா போய்ட்டு வந்துடுங்கோ என்று சூப்பரண்டெண்ட் திருமலாசார்யார் ஆசீர்வாதம் செய்து அனுப்புவார். அரைநாளோ ஒரு நாளோ, லீவு கொடுத்தாகி விட்டதா, அது தான் முக்கியம். அப்புறம் லீவ் எக்ஸ்டென்ஷன் என்று நீட்டித்துக் கொண்டு போய்விடலாம். ஒரு மாத லீவு சுளுவாக வாங்கும் வழி இதுதான்.
ஆனாலும் மனசு கேட்காது. ஒரு வாரம் லீவு அனுபவித்தபின் குத்திக்காட்ட ஆரம்பிக்கும். நான் போகாததால் கோட்டையிலே சர்க்கார் வேலைக்காக ஏற்படுத்தப்பட்ட குடிநீர் விநியோக இலாகாவே ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டதால் மெட்றாஸில் ஜலக் கஷ்டம் என்று தமிழ்ப் பத்திரிகையில் முதல் பக்கத்தில் அலறல் நியூஸ் வரும். ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்திகள் லண்டனில் பக்கிங்க்ஹாம் அரண்மனையில் பேப்பர் படித்து இந்த நியூஸால் மிகுந்த மனக் கிலேசமடைந்து மெட்றாஸுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு நீங்கும்வரை ராஜாங்க விருந்து ஏதும் அரண்மனையில் நடக்காது என்று அறிவித்துப் போடுவார். ராஜாங்க உயர் அதிகாரிகள் ராமோஜி என்ற முக்கியமான சிப்பந்தி காசிக்குப் போகிறதாக அரை நாள் லீவு வாங்கி அதை ஒரு மாதமாக நீட்டித்திருப்பதால் மெட்றாஸுக்குத் தண்ணீர் கிட்டவில்லை என்பதை இதமாகப் பதமாகப் பலமாகச் சொல்ல, சக்கரவர்த்திகள் எப்படியாவது ராமோஜியை வேலைக்குத் திரும்ப வரச்செய்ய ஆணையிடுவார். வேண்டாம், இன்னும் தூங்கினால் நடுப்பகல் ஆகிவிடும். படுக்கையைச் விட்டு எழுந்தேன். அது போன ஞாயிறு காலையில் குழிப் பணியாரமும், தோசையும் வயிறு புடைக்கச் சாப்பிட்டு நேரமில்லா நேரமாகக் காலை எட்டரை மணிக்கு ஊஞ்சலில் படுத்து நித்திரை போன போது.
அப்பாஜி ஒவ்வொரு வருடமும் அவர் இருந்தவரை காசிக்குப் பிரயாணம் வைக்க திட்டம் போடுவார். பத்து நாள் என் பழைய ஸ்கூல் காம்போசிஷன் நோட்டில் கிழித்தெடுத்த ரூல் போட்ட பக்கங்களில் மராட்டியும் இங்க்லீஷுமாக எழுதி செலவு குறித்திருப்பார். எங்கள் குடும்பம், என் மாமா குடும்பம், அத்தை குடும்பம் என்று யாத்திரைக்கு வர இருக்கிறவர்களின் பட்டியல் நீளமாக மொத்தத் தொகை ஒரு ஓரமாக எல்லாம் சேர்த்து வளரும். அது ஐயாயிரம் ரூபாய் அளவு வரும்போது காசிப் பயணத்தை ஒத்தி வைத்துவிடுவார் அவர். ரொம்ப செலவு பிடிக்கும். இன்னொரு டைம் சாவகாசமா போகலாம் என்று கச்சாலீசுவரரைக் கும்பிட்டு துரை பங்களா வேலைக்குக் கிளம்பி விடுவார்.
அவர் திட்டம் போல் இல்லாமல் நானும் ரத்னாவும் மட்டும் போவதாக ஒரு காசி யாத்திரை. பண விஷயத்தில் அவ்வளவு கடக் ஆக இருக்கத் தேவை இல்லாமல் கோட்டையில் சீனியர் குமாஸ்தா வேலை கணிசமாகத் தருகிறது.
(எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலில் இருந்து)
pic courtesy 24coaches.com