(எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலில் இருந்து)
விஜயவாடாவில் பஞ்ச பஞ்ச உஷத்காலமான காலை நாலு மணிக்குச் செய்ய எதுவும் இல்லாமல் நானும் ரத்னாவும் மறுபடி உறங்க முயற்சி செய்ய ரயில் சக்கட சக்கட என்று தொடர்ந்து ஒரே தாளத்தில் பாடித் தாலாட்டியது. கண் முழித்தால் வாராங்கல் ஸ்டேஷனில் ரயில் ஏகக் கோலாகலமாக நுழைந்து கொண்டிருந்தது. விடிந்த சுருக்கில், அழகான காலை ஆறரை மணி. பல் துலக்கி வந்தேன்.
ரயிலுக்குப் பக்கமாக, கம்பார்ட்மெண்டுக்கு பத்தடி தள்ளி ப்ளாட்பாரத்தில் பெரிய மேஜைகள் சேர்த்துப் போட்டமாதிரி மேடையும் உள்ளே நாலைந்து நாற்காலிகளும், வெளியே வரிசையாக நிற்க ஷெட் இறக்கிய படி வைத்த இடமுமாக வெஜிடேரியன் போஜனசாலை தென்பட்டது. அந்தக் காலை நேரத்தில் ஆவி பறக்கும் இட்லிகளோடும், வானளவு உயர்த்தி ஆற்றிய காப்பி டம்ளரிலிருந்து காப்பிக்கான இன்னொரு சுத்த ஆவி எழுந்திருக்கவுமாகப் பார்க்க ரம்மியமாக இருந்தது. ”சூடா இட்லி காபி” என்று உள்ளே இருந்து சத்தமாக அழைத்துக் கொண்டிருந்த குரல் பசியைக் களேபரமாகத் தூண்டியது.
கல்லாவில் காசை வாங்கிப் போட்டு ப்ளேட் ப்ளேட்டாக இட்லி கொடுத்துக் கொண்டிருந்த இளம் பெண் தெலுங்கு தேசத்துக்கே சொந்தமான பளிச்சென்ற கறுப்பும், விண்ணென்று மதர்ப்பு தெறிக்கும் உடல் கட்டும், நல்ல உயரமும் மனசைக் கெல்லும் கூர்ந்த பார்வையுமாக இருந்தாள். சுடச்சுட இட்லியும் காப்பியும், உபகாரமான உபசாரமாகத் தரப்படத் தயாராக இத்தனை அருகில் இருந்தும், நேற்று மத்தியானம் வீட்டில் வார்த்து மிளகாய்ப்பொடி பூசிய ஆறிப்போன இட்லியை சாப்பிட என் தலையெழுத்து.
ஏக்கத்தோடு ரத்னாவைப் பார்த்தேன். பக்கத்தில் வேறே யாருமில்லை என்பதால் அவள் உதட்டைக் கடித்துக்கொண்டு சின்னதாகச் சிரித்தாள்.
”என் ராஜாவுக்கு என்ன வேணுமாம்”?
அந்தக் கேள்விக்காகவே அந்த நிமிஷம் சுற்றி இருந்த எல்லோரையும், எல்லாவற்றையும் மறந்து அதை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதிரி நான் காத்திருந்தது வீண் போகவில்லை. .
உடனே பதிலுக்கு ’என் ராணி’ என்று பிரியத்தோடு அழைக்க உத்தேசித்திருந்தேன். ஆனால் சொன்னதோ-
‘தெலுங்கர்கள் கூவிக் கூவிக் கூப்பிட்டு சுடச்சுட இட்லி தராங்க.. சாப்பிட்டு உனக்கும் வாங்கிட்டு வரட்டா? இன்னும் பத்து நிமிஷம் வண்டி நிற்கும்’.
அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.
”தெலுங்கர்கள் என்ன? தெலுங்கு பொம்மனாட்டின்னு சொல்லும். அப்படி என்ன தந்த சுத்தி செய்ததும் கட்டுமஸ்தான தெலுங்கச்சி கையால் காப்பி உபசாரம் கேட்குது?”.
வார்த்தையால் சுட்டெரித்தாள் விடிகாலை நேரத்தில்.
சட்டென்று சரியான சாக்கு முன்னால் வந்து நின்றது.
“ப்ளாஸ்கை எடு, காப்பி வாங்கிட்டு வந்துடறேன்”.
காப்பி என்றால் வேண்டாம் என்று சொல்ல நாரத முனி கூட யோசிப்பாரே. தும்புருவோடு ஒரு ஓரமாக நின்று புது டிகாக்ஷன் காப்பியை அமோகமாக ரசித்துக் குடித்து விட்டு ஸ்ரீமன் நாராயணன் விஷயமாகப் புதிதாகக் கவனம் செய்து வைத்திருந்த சஹானா ராக தெலுங்கு க்ருதியைப் பாட ஆரம்பிப்பாரே. நாரதர் என்ன தியாகராஜ சுவாமிகளா? தெலுங்கு க்ருதி கவனம் செய்து பாட? காலையிலேயே குழப்பம் ஏன்? தெலுங்குக் காப்பியைக் குடித்தால் எல்லாம் சரியாகி விடும்.
கைத்தறி ஜோல்னாப்பையின் வாரைத் தோளுக்குக் குறுக்காக மாட்டிக் கொண்டு போஜனசாலைக்குப் போக, சூடா பருப்பு வடை, உளுந்து வடை, ரெடி சார் என்று ஆசையைக் கிளப்பி விட்டாள் கடைக்காரி.
பத்து ரூபாய் வள்ளிசாக எடுத்துக் கொடுக்க, நேற்றைய தெலுங்குப் பத்திரிகை காகிதத்தை கூம்பு மாதிரி மடித்து எண்ணெய்ப் பலகாரம் கை நிறையக் கொடுத்ததோடு இன்னொரு ஐந்து ரூபாய்க்கு கள்ளிச்சொட்டாட்டம் காப்பியும் ப்ளாஸ்கில் நிரப்பித் தந்தாள் அவள். வெந்நீர் ஊற்றி ப்ளாஸ்கை அலம்பிக் காபியை நிறைத்ததற்காக அவளுக்கு கூடுதல் நன்றி சொன்னேன்.
இட்லி வேணுமா என்று ஒரு தட்டில் இரண்டு இட்லியை வைத்து நீட்டினாள். தொட்டுப் பார்த்தேன். அசல் பாறாங்கல். எது எப்படி இருக்குமோ, இட்லி பாறாங்கல்லாக இருக்கக்கூடாது. என் ரத்னா பிரியமும் நல்ல மனசும், கரிசனமுமாக வார்த்து, ரெண்டு நாள் வருவதாக நெய்யில் குழைத்த மிளகாய்ப் பொடி தடவி எண்ணெயில் முழுக்காட்டிக் கொண்டு வந்த இட்லியின் மெத்தென்ற மென்மை எங்கே, அதன் ருஜி தான் எங்கே.