வெள்ளிக்கிழமை சாயந்திரம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்தேன். காப்பி குடித்து விட்டு நானும் ரத்னாவும் புறப்பட்டோம். பார்க் ஸ்டேஷன் வரை ட்ராமில் போய், அங்கிருந்து எலக்ட்ரிக் ரயிலில் மாம்பலம் போய்ச் சேர்ந்தோம்.
ஸ்டேஷனில் இருந்து நாராயணசெட்டி தெருவுக்கு ஆட்டோ ரிக்ஷாவில் போக விருப்பப்பட்டாள் ரத்னா. மூன்று ரூபாய் வாடகை.
என்றைக்காவது ஒரு- நாள், போகட்டும், ரத்னா ஆசைப் படுகிறாள். நாங்கள் தெலக்ஸ் புவனாவின் ‘சுந்தரி’ மாளிகையில் நுழைந்தபோது மாலை ஆறு மணி. கூர்க்கா மரியாதையாக சல்யூட் வைத்து உள்ளே போக வழிகாட்டினான், ரத்னாவுக்கு. கூட வந்தவன் என்று எனக்கும் அனுமதி.
நான் உள்ளே நுழைந்ததும் பெரும் சத்தத்தோடு காம்பவுண்ட் இரும்புக் கதவுகள் சாத்திப் பூட்டப்பட்டதைக் கவனித்தபடி நடந்தேன்.
வாசலை ஒட்டி, காம்பவுண்ட் சுவருக்கு மேலெழும்பி முழுவதும் மறைத்தபடி பெரிய கூடாரம் ஒன்று, வைத்துக் கட்டி உயர்த்தப் பட்டிருந்தது. கூடாரத்தின் உள்ளே, ஜமுக்காளம் விரித்த தரையில் நின்றும், நாற்காலியில் இருந்துமாக ஒரு நட்சத்திரக் கூட்டமே இருந்ததை எந்த பரபரப்பும் ஆச்சரியமும் இல்லாமல் மகாராணி போல் கவனித்தபடி ரத்னா நடந்தாள்.
வரலட்சுமி விரதமும் நோன்பும் பெண்களுக்கானது, பெண்களுக்கு மட்டும் ஆனது என்று இத்தனை காலம் நினைத்திருந்தது பிழையாகிப் போக ஆண்கள் மயமாக இருந்தது அந்த இடம். எல்லோரும் அவர்கள் அவர்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணையாக வந்தவர்கள். வந்த இடத்தில் இன்னும் நாலு ஆம்பளைங்களை பார்த்து ஹலோ சொல்லாமல் போக முடியுமா?
நானும் ரத்னாவோடு நேரே பார்த்தபடி ராணுவ நடை நடக்க முற்பட்டேன். தோளில் யாரோ தட்டினார்கள். பின்னால் திரும்பிப் பார்க்க பந்துலு சார்.
தழையத் தழைய பட்டு வேஷ்டியை பஞ்ச கச்சமாகக் கட்டி, சட்டையில்லாத மேலுடம்பிலும் நெற்றியிலும் துவாதச நாமங்களுமாக ஆளே மாறி இருந்தார் அவர். காப்பி குடிக்கிறீரா என்று கேட்டார் ரகசியம் பேசும் குரலில். குடிச்சுக்கறேன் சார் என்றேன்.
தசாபதி வெற்றித் திரைப்படத்தில் வளைய வந்த இத்தனை பிரபலஸ்தர்கள் இங்கே கூடியிருக்க, இங்கேயும் பந்துலு சார் தான் பேச்சுத் துணை என்றால் ரொம்ப கொடூரமாக இருக்கும்.
நான் ஓரமாக சிவப்பழம் போல செக்கச் செவேலென்று நகர்ந்து வந்த, தசாபதி ஸ்கூல் வாத்தியார் வேஷத்தில் நடித்த சக்ரபாணி அருகே போய் வணக்கம் சொன்னேன்.
”பார்த்தீங்களா, பிடிச்சிருக்கா?”
அவர் நிறைவாகச் சிரித்தபடி சப்ஜெக்டுக்கு வந்து விட்டார்.
”சார், நீங்க பாடுவீங்களா?”, என்று சக்ரபாணி சாரை விசாரித்தேன். ”ஓ, சுண்டல் கிடைச்சா இப்பவே கச்சேரி செய்யத் தயார்” என்று அறிவித்தார் அவர். ”நீங்க?” என என்னைக் கேட்டார், மேலே தொடரும் முன்.
அப்போது தான் நான் யார் என்று அவரிடம் சொல்லாதது நினைவு வர, குடும்ப, ஆபீஸ் பின்னணியைச் சுருக்கமாகச் சொன்னேன்.
”தஞ்சாவூர் தமிழ் மராட்டியரா? பலே பாண்டியா. உம்மைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். எனக்கு உங்க பழக்க வழக்கம் எல்லாம் சொல்லிக் கொடுக்க முடியுமா? ஒரு படத்திலே மராட்டி பேசற தமிழனா வரேன்” என்றார் சக்ரபாணி.
”உங்களுக்கு ட்ரெயினிங் எல்லாம் அநாவசியம் சார், கொடுத்த பாத்திரமா மாற உங்களுக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும், எனக்குத் தெரியாதா?” என்றேன்.
நிஜமான சந்தோஷம் நான் பகிர்ந்தது. தசாபதியில் தெலக்ஸ் புவனா தவிரவும் நிறைய பேருடைய அற்புதமான நடிப்பு உண்டுதான். இன்னும், திரைக்குப்பின் சவுண்ட் ரெகார்டிங், காமிரா வேலை, செட் போடுதல் என்று ஏகப்பட்ட பேர் திறமையாக வேலை பார்த்திருக்கிறார்கள்.
அதுவும் எம்விஎம் செட்டியார், மெட்றாஸே காலி ஆன எவாக்வேஷன் நேரத்தில், சினிமா ஸ்டூடியோவை, மதறாஸில் இருந்து காரைக்குடிக்குப் பக்கம் செம்மண் பூமியான கல்லல் என்ற சிற்றூருக்கு மாற்றி வைத்து, தகரக் கூரை போர்த்தி அவசரமாக எழுந்த சிமிட்டிச் சுவர்களுக்குள், கஷ்டப்பட்டு எடுத்த படம் அது.
அந்த திறமைசாலிகள் எல்லாரும் இங்கே, இந்த நிமிஷத்தில்.
சக்ரபாணிக்கு அடுத்து ரெண்டு நாற்காலி காலியாக இருக்க, அதற்கு அடுத்ததில் மொட்டைத் தலையர் ஒருத்தர் தூங்குகிற மாதிரி கண்மூடி இருந்தார். பட்டையாக வீபுதி, பெரிய குங்குமப் பொட்டு. சாதா காடாத் துணி சட்டை, நாலு முழ வேட்டி. இவருக்கும் சினிமாவுக்கும் இருக்கும் தொடர்பை விட எனக்கும் தமிழ்ப் படத்துக்கும் அதிகம் தொடர்பு… வெயிட்.. இது தசாபதியின் முக்கியமான நட்சத்திரம் காளிங்க ரத்தினம் இல்லையோ.
எனக்குள் இருக்கும் ஏ ஆர் பி வார்டன் விழித்தெழுந்து அந்தப் பந்தலை ஒரு தடவை இடவலமாகச் சுற்றி வந்தார். ”மிஸ்டர் ராமோஜி”, அவர் தான் அழைத்தார். ”மிஸ்டர் ராமோஜி, உங்க முத்தியால் நாயக்கன் தெரு தங்கப்பன் முதலாளி, பிள்ளையார் கோவில் கட்டி பத்து இருபது பேரைக் கூப்பிட்டு பிரசாதம் கொடுத்தா, விருந்தாளி கட்டுப்பாடு சட்டத்தைக் காட்டி, தப்புன்னு சொல்வீங்க. இங்கே நூறு பேர், நோன்பு, விரதம்னு சொல்லி சாப்பாடு போடப் போறாங்க.. சரி, பிரசாதம் கொடுக்கப் போறாங்க.. இதைக் கண்டும் காணாமல் விட்டுடணுமா?”
அந்த மனக்குரலை உள்ளே அனுப்பித் தாழ்ப்பாள் போட்டேன். தப்போ சரியோ, யாருக்கும் இதனால் கெடுதல் இல்லை. நோன்பு, சந்தித்துப் பேச ஒரு சௌகரியமான சாக்கு தான். எனில், இது விருந்தும் இல்லை. சர்பத் கூட தரவில்லை. பிரசாதம் மட்டும் தான் விநியோகம். நடக்கும் வருஷமும், விருந்தினர் கட்டுப்பாடு சட்டம் கண்டிப்பாக அமுலாக்கப்பட்ட 1942 இல்லை. கொஞ்சத்துக்குக் கொஞ்சம் தளர்த்தப்பட்ட 1945 இது.
சப்பைக்கட்டு கட்டியபடி நானும் கூட்டத்தில் கலந்தேன்.