நான் காளிக்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்து, ரத்னா எங்கே என்று பார்வையால் தேடினேன். இந்தப் பக்கம் தெலக்ஸ் புவனாவும் அந்தப் பக்கம் சி.டி.சந்திரகாந்தமும் கையை விரித்துக் காட்டிக்கொண்டிருக்க, ஏக காலத்தில் அவர்களுக்கு ரத்னா கைரேகை பார்த்துப் பலன் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு கைரேகை பார்க்கத் தெரியும் என்று எனக்கே அப்போதுதான் தெரியும். இந்த சி.டி.சந்திரகாந்தம் தான் தசாபதியில் தெலக்ஸ்க்கு நிகரான பிரபலம் அடைந்தவள். மூன்று அழகிகள் ஒரே இடத்தில் இருந்து சிரிக்க, சண்டை ஏதும் அதுவரை வரவில்லை என்பதில் நிம்மதி தான் எனக்கு. மூன்றில்லை. நான்கு அழகிகள். இப்போது மேடையில் பாட ஆரம்பித்திருப்பது தசாபதியில் இனிமையாக இசைத்த பி.ஏ.அகிலாண்டநாயகி தான். தமிழில் ரஞ்சனி ராகத்தில் லட்சுமியை அழைக்கும் பாட்டு, ராகமாலிகையாக ஆனந்தபைரவிக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தது.
நிமிர்ந்து என்னைப் பார்வையால் சுட்டி, பக்கத்தில் சந்திரகாந்தத்திடம் ஏதோ சொன்னாள் தெலக்ஸ். இப்போது மூன்று பேரும் என்னைப் பார்க்க சந்திரகாந்தம் மெச்சுகிற பார்வையோடு ரத்னாவை நோக்க, என் மனைவி கண்ணில் நிரம்பி வழிந்த பெருமிதம் எனக்குப் புரிந்தது. அவர்கள் என்னைப் பற்றி சிலாகித்து ஏதோ பேசிக் கொள்கிறார்கள். ஆச்சரியம் தான்.
நான் எழுந்து அந்தப் பக்கம் போக நாற்காலியைச் சற்றே தள்ள, பக்கத்தில் கண்மூடி உட்கார்ந்திருந்த காளிங்க ரத்தினம் கண் திறந்தார்
”நமஸ்காரம் சார்” என்றேன். நமஸ்காரம் என்று அவரும் முணுமுணுத்தார். என்னை நிமிர்ந்து பார்த்த பார்வையில், ‘என்ன தசாபதியிலே நடிப்பு நல்லா இருந்ததா’ என்று கேள்வியை எத்தனையாவதோ முறையாக எதிர்பார்த்துக் கிட்டிய அலுப்பு தெரிந்தது.
நான் அவரிடம் சொன்னேன் – ”இல்லை சார், தசாபதி பற்றி இல்லே. உங்களுக்கு பொய்க்கால்குதிரை ஆடத் தெரியுமாமே? நிஜம் தானா?”
அவர் முகம் மலர்ந்தது.
“ஆமா யார் சொன்னது அது?”
ஏழு வருஷம் முந்திய பழைய சினிமா பத்திரிகையில் படித்த தகவல் உரிய நேரத்தில் நினைவு வந்ததில் சந்தோஷப்பட்டேன்.
’சினிமா உலகம்’ அஞ்சு வருஷம் முந்தி தீபாவளி மலர்லே படிச்ச நினைவு”.
”அட ஆமா, அவரு நல்ல தோஸ்த்.. யாரு?”. என்னைக் கேட்டார். பி.எஸ் செட்டியாரா என்று பதிலுக்குக் கேட்டேன். அவர் தான் சினிமா உலகம் பத்திரிகை ஆசிரியர் என்றும் நினைவில் இருந்தது. காளிங்க ரத்னம் கொஞ்சம்போல் சந்தோஷமடைந்தார்.
”தம்பி நீங்க சினிமாவிலே இருக்கப்பட்டவரா?” அவர் இத்தனூண்டு புன்சிரிப்போடு வினவினார். சிடுமூஞ்சி இல்லை, நான் நினைத்திருந்தபடி. சுமுகமானவரும் இல்லை தான். ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தை பேசுகிற இவரா தசாபதியில் நிமிடத்துக்கு ஒரு தடவை சிரிக்க வைக்கிறார்? அதுவும் ப்ளடி ஃபூல் என்று அர்த்தம் புரியாமல் வாத்சல்யத்தோடு எல்லாரையும் கூப்பிட்டுக் கொண்டு.
நான் என் ஆபீஸ் பின்னணியும், வழக்கம் போல் இல்லாமல் கும்பகோணம் பூர்வீகமான வீட்டுப் பின்னணியும் சொல்லி, தஞ்சாவூர் மராட்டா சத்ரியன் என்றேன். கும்பகோணம் பெயர் கேட்டதும் அவர் முகம் முழுக்க மலர்ந்தது.
”அதானே பார்த்தேன். நம்ம ஊர் பிள்ளை. விவரமா இருக்கீர். நானும் கும்மோணம் பக்கத்து கிராமம் தான்”. என்றார் காளி.
ஒரு பதினைந்து வயதுப் பையன் தட்டு நிறைய கலர் ஊற்றிய கிளாஸ் வைத்து எடுத்து வந்து என்னிடமும் காளிங்க ரத்தினத்திடமும் நீட்டினான்.
அவர் மோர் மட்டும் தான் சாப்பிடுவார் என்றேன். காளி என் தோளில் தட்டி, ”அதுவும் தெரியுமா? எங்க வீட்டுலே பிறக்க வேண்டியவர் நீங்க தம்பி” என்றார். அவரைப் பற்றிப் படித்தது, கேட்டது எல்லாம் நினைவில் வந்து சரியான நேரத்தில் உபயோகமாகிக் கொண்டிருக்கின்றன.
”சார், பாய்ஸ் கம்பெனியிலே நடிப்பு சொல்லித்தர நீங்க பையன்களை அடிச்சு உதச்சு கண்டிப்பா இருப்பீங்களாமே? அதோ இருக்காங்களே.. பாய் இல்லே தான்.. அவங்களுக்கு எப்படி சொல்லிக் கொடுத்தீங்க?”
நான் அவர் மனைவியாகப் போகிற சி டி சந்திரகாந்தத்தை சுட்டிக் காட்ட, தன்னை அழைக்கிறதாக ரத்னா துள்ளி, புள்ளிமானாக நான் இருந்த இடத்துக்கு வந்து சேர ஓடி வர, எதிரே நாற்காலியில் மோதி நிலைகுலைந்து நின்றாள்.
அவள் மோதிக் கொண்டது கண் இரண்டும் மொச்சைக் கொட்டை போல் குண்டு குண்டாக நிலைகுத்தி நின்ற டி டி ராமசந்தர் மேல். சாட்சாத் தசாபதி சினிமாவின் பிரபலமான ஹீரோ. என்னில் முக்கால் உயரமும் பூஞ்சை உடம்பு வாகும் அவருக்குப் பொருந்தி வந்தன.
”அந்தப் பொண்ணுக்கு சொல்லியே தரவேணாம். கற்பூர புத்தி” என்றார் சுருக்கமாக, காளி சந்திரகாந்தத்தை நோக்கியபடி.
“யுத்தம் வந்ததாலே ஒரே ஒரு நன்மை இப்போ கண்டிப்பா சினிமாங்கற பேர்லே கச்சேரி வச்சு நாற்பது பாட்டோடு இருபதாயிரம் அடிக்கு சினிமா எடுக்கமுடியாது. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா பத்தாயிரம் அடி. மேலே சினிமா நீளமா இருந்தா இனி சென்சார் சர்ட்டிபிகேட் கிடைக்காது”. சொன்னபடி டிடி ராமசந்தர் தன் குண்டுக் கண்களால் பார்த்தது என்னை இல்லை. ரத்னாவை.
“சாரி சார், ஐ கேம் ரன்னிங் லைக் எ டைனி டாட்” ரத்னா சொல்ல ராமசந்தர் சத்தமாகச் சிரித்தார்.
“புவனா பிரண்ட் தானே.. ஒரே காலேஜா…?” என்று கேட்க இல்லை என்று சொன்னபோது ” ஓ ஐ எம் சாரி” என்று மன்னிப்பு கேட்டார். அதற்கு யாதொரு முகாந்திரமும் இல்லை என்று ரத்னா சொன்னது காதில் விழுந்தது.
காளிங்க ரத்னம், ”உங்க சம்சாரமா?” என்று ரத்னாவைச் சுட்டிக் காட்டி என்னைக் கேட்டார். ஆமா என்றேன்.
”பிள்ளைங்க?” நான் பதில் சொல்ல தடுமாறும் கேள்வி இது. காளிங்க ரத்னம் கேட்டபோதும் அப்படித்தான்.
ரத்னா பின்னாலேயே சந்திரகாந்தமும் எழுந்து நாங்கள் இருக்கும் இடத்துக்கு வந்தானது. காளியும் காந்தமும் என்னிடமும் ரத்னாவிடமும் ஒரே நேரத்தில் சொன்னது, ”அவசியம் திருக்கருகாவூர் போய் வாங்க. நல்ல திருத்தலம்”.
”அடுத்த வாரம் அங்கே தான் போறோம் அக்கா” என்று ரத்னா சொல்ல, காளி அவளையும் என்னையும் ஆசிர்வதித்தார்.
பூஜைக்கு வந்த புரோகிதர் எலக்ஷன் மீட்டிங் போல் பேச ஆரம்பித்தார் –
“வரலட்சுமி தேவியை கும்பரூபமாக ஆவாஹனம் பண்ணியிருக்கு. இப்போ இவாளுக்கு லக்ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி பூஜை பண்ண இருக்கு. அந்த ஸ்லோகம் தெரிஞ்சவா நம்ம மிஸ் பி.ஏ.அகிலாண்டநாயகி ஸ்ரீமல்லி படத்துலே பாடின மாதிரி வாயைத் திறந்து ஸ்பஷ்டமா கூடவே சொல்லலாம். தெரியாதவா ஜே.ஜி ருக்மணி அதே ஸ்ரீமல்லி படத்துலே இவா பாட்டுக்கு வாயசைச்ச மாதிரி வாயை அசைத்து ஜாயின் பண்ணிக்கலாம்” என்றபோது வீடு முழுக்க சிரிப்பு. நடிகை வீட்டு ஆஸ்தான புரோகிதரும் சினிமா முற்றும் தெரிந்த, விவரமானவரே.
“பாக்யதா லக்ஷ்மி பாரம்மா, நம்ம மன, ஸௌபாக்ய லக்ஷ்மி பாரம்மா”
பி.ஏ. அகிலாண்ட நாயகி கணீரென்று புரந்தரதாசர் க்ருதியைப் பாடத் தொடங்க, ரத்னா நானும் பாடலாமா என்று சைகையால் அவளைக் கேட்டாள். நிச்சயம் என்று பக்கத்தில் கூப்பிட்டு இருத்திக்கொள்ள இருவர் இசையாகப் பாட்டு தொடர்ந்தது.
அது முடிய அகிலாண்டம் ரத்னாவைக் கேட்டுக்கொள்ள, ரத்னா நல்ல மராட்டி உச்சரிப்போடு அபங்க் பாடினாள் – ’மாஜெ மாஹெர் பண்டரி’.
’பண்டரிபுரம் என் தாய்வீடு’ என்று அர்த்தம் சொல்லிப் பாடியதால் அகிலாண்ட நாயகி தொடங்கி மொத்த கூட்டமுமே அபங்கை ரசித்தது.
புரோகிதர் எல்லாரையும் அமைதியாக இருக்கச் சொல்லி சைகை பாஷையில் கேட்டுக் கொண்டார். ”வாங்கோ, தெலக்ஸ் மகாலஷ்மி, பூஜை உங்க சார்பிலே தான் நடத்தறது” என்று சொல்ல, பந்துலு மனைவி பன்னிபாய் அம்மாள் அவரிடம் காதில் ஏதோ சொன்னாள்.
”அதுவும் சரிதான். கன்யாப்பொண்ணு. நோம்பு சரடை கட்டிக்கலாம். பூஜை பண்ண அவா சித்தி வரலாமே” என்றார். மறுபடி காது கடிபடுதல். ஓ ஆத்துலே இல்லையா என்கிறார் புரோகிதர் எட்டு ஊருக்குக் கேட்க.
பன்னிபாயம்மாள் அரைமணி நேரம் தரையில் உட்கார்ந்திருக்க முடியாது. கால் மரத்து கஷ்டப்படுவாள் என்றார் பந்துலு.
”யார் வர்றது பூஜை பண்ண? பிரசாதத்தை பார்க்க பார்க்க பசியெடுக்குதே.. சீக்கிரம் வாங்கோ”. தெலக்ஸின் புதுப்படப் பாட்டை அவர் சந்தர்ப்பத்துக்கு ஏற்றதுபோல் மாற்றிப் பாடி அஷ்டோத்திரத்தைத் தொடர பெரும் சிரிப்பொலி.