ராமோஜி ஆங்கரே வருடம் 1698 – ராமோஜியம் நாவலில் இருந்து ஒரு பகுதி

“ராமோஜிக்கு அடுத்து?”

கனோஜி ஆங்கரேயின் கேள்வி புரியவே நேரம் எடுத்தது ராமோஜிக்கு.

”துணைப் பெயர் பத்மநாபராவ்ஜி என்று கேட்க சாதாரணமாக இருக்கு” என்றார் கனோஜி. குறை காண்பதாக இல்லை அது.

”ஆங்கர்வாடி என்னும் புராதன செம்படவ கிராமத்துப் பெயரில் இருந்து, ஆங்கரே என்ற துணைப்பெயரை, எனக்கு கடல் கற்பித்த கோலி இனத்துக்கு நான் செய்யும் மரியாதையாக வைத்துக் கொண்டேன்” என்றார் அவர்.

“நானும் ஆங்கரே ஆகட்டுமா?” கனோஜி புன்சிரிப்போடு தலையசைக்க, அடுத்த நிமிஷம் ராமோஜி ஆங்கரே ஆனான் எலிப்பொறி ராமோஜி.

வாழ்க்கை பூரா கோலி என்ற செம்படவ இனத்து மக்களோடு சேர்ந்து இருந்தும், விளையாடியும், கடலோடியும், மீன் பிடிக்கவும், துஷ்ட ஜந்து விலக்கவும் பயின்றும், கடல் போர் தந்திரம் கற்றும், சர்கேல் என்ற கடல் மகா அதிகாரி ஆயிருந்தார் கனோஜி.

“என் அப்பா சுவர்ணதுர்க்கக் கோட்டைத் தலைவராக படகிலோ, கப்பலிலோ போகும்போது பையைத் தூக்கிக் கொண்டு நானும் கிளம்பி விடுவேன். கடல் தான் எனக்கு ஆசானாக எல்லாம் கற்றுத் தந்தது” என்று கனோஜி சொன்னபோது தன் பாலியத்தை நினைத்துப் பார்த்தான் ராமோஜி.

எலிகளோடும் எலிப்பொறிகளோடும் தஞ்சாவூர்த் தெருக்களை ஒட்டி ஓடும் சாக்கடைகளோடுமான ஒரு வாழ்க்கை அது. ரத்னா வந்து உலுக்கி எழுப்பியிராவிட்டால் எலியாகவே முடிந்திருப்பான் அவன்.

ராமோஜியை அவன் ஆகிருதி திருப்திகராமாக இருந்ததால், கடல்படையில் கீழ்நிலை அதிகாரியாக கப்பல் முகப்பையும், பின்பகுதியான அமரத்தையும் சுத்தம் செய்யும் ஐந்து பேருக்குத் தலைவனாக நியமித்தது நேற்றுத்தான் நடந்தது போல் இருக்கிறது.

”ராமோஜி ஆங்கரே, வேலையில் எப்போது சேருவீர்?” என்று கனோஜி கேட்க, இதோ இன்றைக்கே என்று ரத்னாவிடம் பிரியாவிடை பெற்று கடலோட வந்து நின்றான் ராமோஜி. அவனை இன்னும் அதிகமாகப் பிடித்துப்போனது கனோஜிக்கு.

”ராமோஜி ஒரு ஆறு மாதம் நீர் சுவர்ணதுர்க்கத்திலேயே வேலை செய்யும். தஞ்சாவூரில் இருந்து குடித்தனத்தையும் டபோலியிலோ, ஹர்னாயிலோ , சுவர்ணதுர்க்கத்துக்கு வெகு சமீபமாக மாற்றி, வைத்துக் கொள்ளும்” என்று சலுகை கொடுத்தார் அவர். அடுத்த மாதம் ரத்னா டபோலி வந்தானது.

எட்டு வருடம் ஓட்ட ஓட்டமாகக் கடந்து போய்விட்டது. ராமோஜி இப்போது கனோஜி ஆங்கரேயின் நம்பிக்கை பெற்ற, அவருக்கு அடுத்த நிலை அதிகாரிகளில் ஒருவன்.

”ராமோஜி, நீர் இங்கே வரும் முன்னால் பிழைப்புக்கு என்ன செய்து கொண்டிருந்தீர்?” என்று ஒருநாள் கேட்டார் கனோஜி.

“நானா, எலிப்பொறி தயாரித்து தஞ்சாவூரிலும் கும்பகோணம், ஒரத்தநாடு, திருச்சி வரை போய் அதை விற்றேன்” என்றதும் ”ரொம்ப சுவாரசியமாக இருக்கே, எலிப்பொறி எப்படி செய்கிறது?” என்று ஆர்வமாக விசாரித்தார் கனோஜி. நிதானமாக எடுத்துச் சொன்னான் ராமோஜி.

கடற்படையில் பதினெட்டு மராத்திக் கப்பல் இருப்பதாகவும் எல்லா கப்பலிலும் எலித் தொல்லை சகிக்க முடியாமல் இருக்கிறது என்றும் குறைப்பட்டுக்கொண்டார் கனோஜி. ”எலிபாஷாணம் வைத்தால் எலி சாகிறதுக்குப் பதில் படை வீரன் உயிர் போகிறது” என்றார் அவர்.

கனோஜி ஆங்கரே கேட்டுக் கொண்டபடி ராமோஜி இருபது எலிப்பொறிகளை அடுத்த மூன்று மாதத்தில் செய்து தந்தது மட்டுமில்லை, மொத்தம் அறுபத்தேழு எலிகளை அவற்றைக் கொண்டு பிடிக்கவும், கொன்று கடலில் வீசி எறியவும் வழிசெய்து தந்தான். அவற்றில் பல எலி இல்லை, பழம்பெருச்சாளிகள். எலிப்பொறியையே தகர்க்கும் வலிமையோடு போராடிய அவற்றைக் கொல்ல மனதுக்குக் கஷ்டமாக இருந்தது ராமோஜிக்கு. அவன் அதுவரை எலிப்பொறி விற்றிருக்கிறான். எலி பிடித்துக் கொடுத்ததில்லை. கொன்றதும் இல்லை. அதுவும் பழக வேண்டி வந்தது.

மராத்தா கப்பல்களிலும் படகுகளிலும் எலித்தொல்லை ஒழிந்தது பற்றி சத்ரபதி ராஜாராம் போன்ஸ்லே மகராஜ் காதுக்கும் போக, கனோஜி ஆங்கரேக்குப் பாராட்டு. ராமோஜி ஆங்கரேயையும் சதாராவில் அரண்மனைக்குக் கூப்பிட்டு மரியாதை செய்தார் போன்ஸ்லே மகாராஜ்.

”உம் தஞ்சாவூர் சகோதரனா இந்தப் பையன்?” என்று பாதி கிண்டலும் மீதி விஷமமுமாகக் கேட்டார் போன்ஸ்லே. ராமோஜிக்கு இன்னும் ஏறுமுகம் தான்.

கடற்படையில் தமிழ் தெரிந்த ஒரு அதிகாரி ராமோஜியைப் பாராட்டிப் பாட்டுக் கட்டினான் இப்படி –

எலி பிடித்தான் ஓர்தமிழன் அன்று
கடல் கொண்டான் நிலம்சிறக்க இன்று
ஏழாம் பெருங்கடலும் ஏறிப்போர் வெல்லும்
ஊழித்தீ கப்பலென உருவெடுக்கக் காணீர்

அந்தப் பாட்டு இன்னும் ராமோஜியின் பிரதாபம் சொல்லி அங்கங்கே போர்க் கப்பல்களிலும் சரக்குக் கப்பல்களிலும், ராத்திரி நேரத்தில் பணியாளர்களும், பயணிகளும், படை வீரர்களும் ஓய்வெடுக்கும்போது பாடப் படுகிறது.

விஜயசந்திரிகா என்று பெயர் வைத்த ராமோஜிக்குப் பிடித்தமான இந்தக் கப்பலில் கூட அவன் இல்லாவிட்டால் பாடுவது வழக்கம் தான்.

முகப்பு – Bow of a ship
அமரம் – Stern (back) of a ship

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன