எலி பிடித்ததோடு தொடங்கி, பத்து கடல் கொள்ளைக்காரக் கப்பல்களை அடுத்தடுத்து வென்ற கோலியில்லா கோலியிவன் (செம்படவ இனத்தில் பிறக்காத சிறந்த மீனவன் இவன்), கனனோஜி நண்பன் இவன் என்று ராமோஜியின் பராக்கிரமம் சொல்வதாக அந்தப் பாடல் நீளும். வார்த்தைகள் இன்றி தாளம் மட்டும் கொட்டி சொற்கட்டு உதிர்த்து அலைகள் அதிர முடியும்.
தனனான தன்னான தானா
தனனான தனனான தானா
அந்தத் தத்தகார மெட்டை முணுமுணுத்தபடி கப்பல் மேல்தளத்தில் மெல்ல உலவினான் ராமோஜி ஆங்கரே.
பலமான ஒரு காற்று வீச ஆரம்பித்தது. கப்பல் குசினியில் இருந்து ராச்சாப்பாட்டுக்காகக் கருவாடு பொறிக்கும் வாடை காற்றோடு பரவி வந்தது.
கடல் பரப்புக்கு மேலே உயர்ந்து துள்ளிக் கடலுக்குள் நேர்குத்தலாக மறையும் அபூர்வ மீன்கள் காணப்படும் பகுதி இது. போன மாதம் இந்தக் கடல் பரப்பில் ஒரு பிரம்மாண்டமான சுறா மீன் கடல்நீரை அருவியாக எடுத்துப் பீச்சியடித்து, கூர்மையான பல்வரிசை வெளியே தெரியப் பயங்காட்டி, விஜயசந்திரிகா கப்பலின் முகப்புக்கட்டையையும், சீப்போம்பையும் பற்றியபடி மணிக்கணக்காகத் தொடர்ந்து வந்தது. ராமோஜிக்கு மறக்க முடியாத காட்சி அது.
”படகை இறக்கலாமா?”
விட்டோபா கோலி சுக்கான் அறையிலிருந்து வெளிப்பட்டுப் பணிவோடு வந்து நின்று ராமோஜியைக் கேட்டார்.
கோலி என்ற துணைப் பெயரைச் சொந்தப் பெயரோடு இணைத்துக்கொள்ள தயக்கமான கடலோடும் செம்படவ இனத்தினருக்கு இடையே பெருமையோடு கோலி என்று அடையாளம் காட்டிக்கொண்ட விட்டோபா, ராமோஜியை விட பத்து வயதாவது மூத்தவர்.
விட்டோபா என்ற பெயர் வேதாள அரசனுக்கு உரியது என்று அவர் மூலம் ராமோஜிக்குத் தெரிய வந்தது. சாத்தையா என்று அந்தப் பெயரைத் தமிழில் சொன்னான் அவன். விட்டோபாவுக்கு தமிழ்ப் பெயர் பிடித்துப் போனது. என்ன எளிமை, இனிமை என்று சொல்லிக் கொண்டே இருந்தார் அவர்.
சுவர்ணதுர்க்கத்தில் ராமோஜிக்கு வேலைக்கு நடுவே சுரைக்குடுக்கை மாட்டி, நீச்சல் சொல்லிக் கொடுத்தவர் விட்டோபா தான். ராமோஜி இன்னும் கரைகாணாத திறமை அது. நேரமும் காலமும் இனியும் வாய்க்குமென்று தோன்றவில்லை. பதினெட்டு வயதுக்கு மேல் நீச்சல் வராதாமே என்று விட்டோபாவைக் கேட்டான் ராமோஜி. உங்களுக்கு பதினெட்டு கடந்து விட்டது என்று நினைக்கத் தொடங்கும்வரை வரும் என்று திருத்தினார் அவர்.
”ஏணியை இறக்கி விடலாமே. ரங்கீலாவையும் ஒரு தடவை நடந்து பார்த்தபின் அதிகாரிகளோடு சந்திப்பு ஆரம்பிச்சுடலாம். சீக்கிரம் முடிக்கணும்னு தோணுது.. ஏனோ உடம்பு வலிக்குது.. சள்ளைக்கடுப்பு போல..”
”இன்னிக்கு முடியலேன்னா நாளைக்கு போகலாமே பாவு” என்று விட்டோபா மெல்லிய குரலில் பணிவு அடர்த்திச் சொன்னார். பரவாயில்லை பாவு என்றான் ராமோஜி.
ராமோஜி தன் கப்பல் அறைக்குப் போய், தொளதொளத்த பைஜாமாவையும் குப்பாயத்தையும் விழுத்து, இறுக்கிய கால்சராயையும் கமீசையும் அணிந்து கொண்டு புறப்பட்டான்.
“தீத்தாங்கியை மாற்றணும் போல இருக்கே.. கயிறு அங்கங்கே நைந்திருக்கு பாரும்” என்று விஜயசந்திரிகா கப்பலின் நைந்த அடிதாங்கியைச் சுட்டிக் காட்டியபடி ஏணியை நோக்கி வேகமாக நடந்தான் ராமோஜி.
“மோதல் ஏதாவது இருந்தா, பக்கவாட்டிலே கப்பல அடிபடாமல் வச்சுக்க அந்தக் கயிறு வேணுமே”, அவன் கடல் இரைச்சலை மீறிக் குரல் உயர்த்திச் சொன்னான்.
“மோத யார் இருக்காங்க பாவு?
விட்டோபா பதில் சொல்லியபடி நடையின் வேகத்தை அதிகப்படுத்தினார்.
மராட்டா சமுத்திர சேனை இதுவரைக்கும் இல்லாத அ,ளவு பெரிய, வலிமை வாய்ந்த, தேவையானால் போர்க் கப்பலாக வடிவமெடுக்கும் கப்பல்களின் நீண்ட தொகுப்பாக அமைந்தது. எவ்வளவு கப்பல்கள் மொத்தம் என்று எண்ணிக் கணக்கெடுத்தாலும் வாய்விட்டுச் சொல்லக் கண்டிப்பாகத் தடை உண்டு.
’நம்ம கண்ணே, நம்ம வாயே கொள்ளிக்கண்ணாக, அஸ்து சொல்லும் வாயாகக் கொட்டி நல்லது நடக்க சின்னதாகவாவது விக்னம் தந்துவிடும்’ என்று பயம். வரும் விக்னம் எல்லாம் நீக்க பாபா விக்னாச்சி, விநாயகரை ஒவ்வொரு கப்பலிலும் மனதிலும் சதா வழிபடுகிற கடற்படை இது.
மகா சர்கேல், மகா சத்ரப், மகாவீரர் கனோஜி ஆங்கரே தலைமையில் அத்தனை போர்க் கப்பலும் இயங்கிக் கொண்டிருந்தன. அதில் ஐந்து கப்பல் ராமோஜி ஆங்கரே தலைமையில்.
ராமோஜி போல் கடற்படை உப தலைவர்கள் பலர் உண்டு. ஒவ்வொருத்தர் கட்டுப்பாட்டிலும் ஐந்து முதல் பத்து சிறிய கப்பல்களோ, இரண்டு அல்லது மூன்று பெரிய நாவாய்களோ உண்டு. இந்த உபதலைவர்கள் கனோஜியின் கண்காணிப்புக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்டவர்கள்.
இருபத்தாறு கோட்டைகளும் இன்னும் வந்து கொண்டிருக்கும் கோட்டை கொத்தளங்களும் மொத்தமாக கனோஜியின் அதிகாரத்தில் வரும்.
ராமோஜியின் ஐந்து கலங்களில் இரண்டு நடுக் கடலில் இப்போது – இந்த நடுத்தர அளவுக் கப்பலான விஜயசந்திரிகாவும், கூடவே நிழல் போல் தொடரும் சிறு கப்பல் ரங்கீலாவும்.
ரங்கீலா மராட்டிய கடல் படை கட்டமைத்தது இல்லை. கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து கனோஜி ஆங்கரே ஐந்து வருடம் முன் கைப்பற்றியது. விட்டோபா, ரங்கீலா கப்பலின் தலைமை மாலுமி.
படகு இறங்கட்டும் என்று எக்காள இசை இனி கேட்கும். விஜயசந்திரிகாவின் உயர்ந்து நின்று காற்றில் மடங்கித் திரும்பி நீளும் பாய்களைச் சுமந்து நிமிர்ந்த பாய்மரத் தாங்கிக்குக் கீழே இருந்து வரும் ஒலி அது. அங்கே மரக்கூரையும் சுற்றிலும் கீற்றுத் தடுப்பும் வைத்த ஒரு சிற்றிடம் உண்டு. எக்காளம், தம்பூர் (முரசு) போன்ற கட்டளை ஒலிபரப்பும் சிறு வாத்தியங்களும், அருகாமையில் வரும் கப்பல்களுக்கும் பெரும் படகுகளுக்கும் சமிக்ஞை தர வாணவெடிகளும் அங்கே பத்திரமாக வைக்கப் பட்டிருக்கின்றன. அங்கிருந்து தான் எக்காள ஒலி இப்போது புறப்பட்டு வெளியை நிறைக்கும்.
ராமோஜி தலையைப் பார்த்ததும், அவ்விடத்தில் வேலையில் நின்ற சிப்பாய் நிமிர்ந்து நின்று, மூன்று சிறு அழைப்புகளாகப் படகை இறக்கச் சொல்லி வாசித்தான். அடுத்து ராமோஜி ஆங்கரேக்கான அதிகார ஒலியையும் வாசித்தான். தொடர்ந்து நூல் ஏணியை இறக்க இசை உத்தரவும் வந்தது.
அருஞ்சொற்பொருள் – கப்பல், கடல் தொடர்பானவை
1) சீப்போம்பு Boom
a long pole attached to the bottom of a boat’s sail, that is used for changing the direction of the sail
2) கப்பல் அறை cabin
3) தீத்தாங்கி, அடிதாங்கி fender
a piece of rope or a tyre that protects the side of a boat from knocks