முதலில் விட்டோபா நூலேணியில் கால் வைத்து கீழே கடலில் மிதந்து கொண்டிருந்த படகில் லாகவமாக வந்து சேர்ந்து எல்லாம் சரியாக இருக்கிறது என்று வலது கையைத் தூக்கித் தலைக்கு மேல்காட்டினார்.
அடுத்து ராமோஜி பக்கம் நூலேணி கடியார ஊசல் போல் அசைந்து வந்தது. அதைத் தொட்டுப் பிடிப்பதற்குள் கை பற்றும் எல்லையைக் கடந்து திரும்பி விட்டது ஏணி.
“ஏய் நல்ல பிள்ளை இல்லே நீ.. வா வா “ என்று ராமோஜி அதை அழைக்க அடுத்த முறை வந்தபோது இறுக்கமாக அதைப் பற்றி ஏணியோடு ஆடினான் ராமோஜி.
கடல் காற்று வலுத்து, ’என்ன ராமோஜி, ரத்னா நினைவு தானா எப்பவும்’ என்று கிண்டல் பண்ணியது. ’ரத்னா இல்லாவிட்டால் ஒரு பொன்னி, இன்னொரு மரகதம்; என்று சேர்ந்து கொண்டது கடல்.
கடல் எல்லாம் ஆதிசேஷன். காற்றெல்லாம் அனுமன். அந்த நைஷ்டிக பிரம்மசாரிகளுக்கு ராமோஜி என்ற கிருஹஸ்தன் கிண்டல் செய்து விளையாட நல்ல நண்பன்.
“ஹனுமன் ஜி மகராஜ், இப்படி ஆட வைச்சுட்டீங்களே, தயவு செய்து படகுலே தூக்கிப் போடுங்களேன் இந்த பக்தனை.. ஊர்லே குடும்பம் உண்டு. உங்க கருணை இருந்தாத்தான் போய்ச் சேர்ந்து கூட இருக்க முடியும்”.
“ஸ்வர்ணதுர்க்கம் போக என்ன அவசரம் ராமோஜி, ரத்னாவை பிரிந்து இருக்க முடியாதா.. கவலைப்படாதே.. ரத்னா இப்போ என் கோவிலுக்குத் தான் வந்திருக்கா. நானாச்சு கவனிச்சுக்க.. ஆசிர்வாதம் பண்ணச் சொல்லிக் கேட்கறா.. இதோ போறேன் .. ஜாக்கிரதையா இருந்துக்கோ.. மனசை நிலையா வச்சுக்கோ.. அலைக்கழிக்க ஆயிரம் சந்தர்ப்பம்.. ஒவ்வொரு அலை மேலும் ஏறி ஓடினா அக்கரை போக முடியாது.. இந்தா உன் நூலேணி…”
வாயு புத்திரன் சொல்லிக் கையசைத்துப் போக காற்று மறைந்து நூலேணி படகுக்கு அருகே ஊசலாடி நிற்க, ராமோஜி இறங்கினான். படகு விட்டோபா போகலாம் என்று உத்தரவிட்டார். படகு இருநூறு அடி கடல் பரப்பின் குறுக்கே செலுத்தப்பட, இரண்டு வீரர்கள் துடுப்பு வலித்துப் போனார்கள்.
ரங்கீலா கப்பலின் சிறு எக்காளம் முழங்க, அங்கே விட்டோபா இல்லாத நேரத்தில் தலைவனாக இருந்த சுபேதார் பதவி துறக்க, விட்டோபா கப்பல் நாயகனாக ராமோஜியை வரவேற்று கப்பலின் முகப்பை அடுத்துக் கிடந்த நீலத்தரை பாவிய உலவுதளத்துக்கு அழைத்துப் போனார்.
உற்சாகமாக வரவேற்ற இருபது வீரர்கள் பெயரையும் வரிசை எண்ணையும் சொல்லி ராமோஜிக்கு இரு கரம் குவித்து வணங்கி, பாதரட்சை அணிந்த காலை கப்பலின் மரத்தரையில் ஓங்கி அறைந்து ஹாங் ஜி என்று அசையாமல் நின்றனர். இன்னும் இரண்டு பேர் மட்டும் பாக்கி. புதிதாகப் படையில் சேர்ந்த இளைஞர்கள். வயிற்றுப் போக்கும் வாந்தியுமாக அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக விட்டோபா சொல்லும்போதே ராமோஜி அவர்கள் படுத்திருந்த நோய்ப் படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான்.
இற்றுப்போன பட்டுத்துணி போல் படுத்திருந்த முதல் இளைஞன் ராமோஜியைப் பார்த்ததும் எழுந்து உட்கார முயன்றான். “மஹா ப்ரபு” என்று தீனமாக விளித்தான் அவன்.
”ஷ்.. மோட்டா பாவுன்னு கூப்பிடச் சொல்லியிருக்கேன் இல்லே, நான் சோட்டா பாவு..” விட்டோபா கண்காட்ட, கூடவே வந்த மற்ற வீரர்கள் சிரித்தார்கள்.
“குறை தீர்க்கும் நேரம்” என்று எக்காளம் வாசிக்கப்பட்டது. மௌனம் நிலவியது அடுத்த சில நிமிடங்களுக்கு. குறையே இல்லை என்று இரண்டு பேர் சொல்ல தம்பூர் அடியுங்கள் என்று குரல்கள்.
தம்பூர் என்று முரசைச் சொல்வது புரியாமல் ராமோஜி வந்த புதிதில் தம்பூரா மீட்டியபடி வரும் நங்கையை எதிர்பார்த்திருந்த பழைய காலத்தை நினைத்தபடி புன்சிரித்தான்.
படுத்திருந்த பையன்கள் எழுந்து உட்கார்ந்து ”ராத்திரி வேலைக்கு வந்துடறோம் பெரியண்ணா” என்றார்கள். அவர்களைப் படுத்திருக்கச் சொல்லிக் கைகாட்டினான் ராமோஜி.
நாளைக்கு வாங்க என்றான் அவர்கள் தோளில் தட்டி. “இதிலே ஒரு பையன் தெலுங்கு, இன்னொருத்தன் கன்னடம்” என்றார் விட்டோபா ஒரு தகவலுக்கு.
”ராத்திரி நெல்லுச்சோறு குழைய வடிச்சு சமையுங்க. சாம்பாஜி மகராஜை கௌரவப்படுத்த மராட்டா சமையல் சக்கரவர்த்திகள் உண்டுபண்ணின வெங்காய சாம்பாரும் செஞ்சு எல்லோருக்கும் சாப்பிடக் கொடுங்க. அதிலே ஒரு கும்பா நெறைய மிளகாய் போட்டு இந்த ஆந்திரவாடுவுக்கு, இன்னொன்னு நிறைய வெல்லம் போட்டு நம்ம கன்னட தம்பிக்கு. எனக்கும் ஒரு கும்பா கொடுத்தனுப்ப மறக்காதீங்க, விட்டோபா”.
தம்பூரும் எக்காளமும் முழங்க ராமோஜி நூலேணிக்கு வந்தபோது தூரத்தில் வானில் அமிட்டு தொடர்ந்து ஏழெட்டு தடவை சீறிப் பாய்ந்தது தெரிந்தது. அங்கே நகர்ந்து வரும் ஒரு சிறு கப்பல் அலையேற்றத்தில் விட்டுவிட்டுத் தெரிந்தது.
பாய் கிழிந்து அல்லது சுக்கான் பழுதாகி அபாயத்தில் மாட்டிய கப்பலாக அது இருக்கக் கூடும். சமயங்களில் பிரச்சனை அதுவே தீர்ந்து விடலாம். அல்லது கப்பலிலேயே தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கலாம். சில தடவை தீர்வு கிட்டாமல் பிரச்சனை நீளலாம். அல்லது கப்பல், ’இங்கே நானுமுண்டு’ என் தன் இருப்பைச் சொல்லும் வெடிக்கொட்டாக இருக்கக் கூடும் அந்த ஓசை.
தூரதர்சினியை ஒரு வீரன் ராமோஜியிடம் கொண்டு வந்து கொடுத்தான். இருட்டு கவியத் தொடங்கும் நேரத்தில் தூரத்தில் தெரிந்த கப்பலை அந்தத் தொலைநோக்கி வழியே பார்த்து ராமோஜி சத்தமாகச் சொன்னான் –
”ஏதோ பிரச்சனையோடு மிதக்கிற கப்பல் அது. வேறென்ன, கடல் கொள்ளைக்காரங்களாக இருக்கக் கூடும்”.. .
அருஞ்சொற்பொருள்
உலவுதளம் – promenade deck of the ship
நோய்ப் படுக்கை sick bay of the ship