என் அடுத்து வரும் புதினம் ‘ராமோஜியம்’ – ஆண்டு 1698 சுவர்ணதுர்க்கம் -வண்ண மயில் என்ற தமிழ்க் கப்பல்

எழுதி நிறைவு செய்து கொண்டிருக்கும் என் அடுத்த நாவல் ராமோஜியம். அதிலிருந்து ஒரு சிறு பகுதி

பிரச்சனைன்னு எப்படி தெரியும்? விட்டோபா விசாரித்தார். அது படையில் சேர்ந்த புதியவர்கள் அறிந்து கொள்வதற்காக.

“அமிட் நிறம் சமிக்ஞையிலே தொடர்ச்சியா இல்லே.. திடீர்னு சிவப்பு, பச்சை, நீலம்னு வரிசை தவறி வருது.. கவனிக்கலியா? அனுபவம் இல்லாத யாரோ சமிக்ஞை கொடுத்திட்டு இருக்காங்கன்னு தோணுது”.

வாஸ்தவம் தான் என்றார் விட்டோபா.

”அங்கே போய்ப் பார்க்கலாமா?”

விட்டோபா இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து விரலில் கூர்மை தீட்டிப் பார்த்து, சிவப்பு துளிக்க மறுபடி உறையில் இட்டபடி ராமோஜி ஆங்கரேயிடம் கேட்டார்.

“இன்னும் முப்பது கடல் கல் தொலைவிலாவது இருக்கும் அந்தக் கப்பல் என்று தோணுது. நாம் அங்கே போனாலோ அவர்கள் இங்கே வந்தாலோ இன்னும் மூன்று மணி நேரத்துக்குக் குறைவில்லாமல் ஆகும்.. இப்போ மணி என்ன?”

மணல் கடிகையை ஜாக்கிரதையாக சுமந்து வந்து ராமோஜியிடம் ஒரு வீரன் காட்ட, மாலை ஆறேகால் மணி என்று அவன் கடிகைக்குள் விழுந்துகொண்டிருக்கும் மணல் பார்த்து நேரம் கணக்கிட்டுச் சொன்னான்.

ராமோஜி அறிவித்தார் – ”இன்னிக்கு ராத்திரி ஹர் ஹர் மகாதேவ் சிவராத்திரி நமக்கு”.

படகு திரும்ப விஜயசந்த்ரிகாவுக்குப் போகும்போது ரங்கீலாவில் ஹர ஹர மகாதேவ் திரும்பத் திரும்ப முழங்கியது.

****

ஒன்பது மணிக்கு அந்த மற்றொரு கப்பலை நோக்கி விஜயசந்த்ரிகா விரைந்து கொண்டிருந்ததைப் பார்த்தபடியே ராமோஜி கப்பலின் மேல் தளத்தில் தாம்பூலம் மென்றபடி இருந்தான்.

விஜயசந்திரிகாவின் சமையல்காரர்கள் இனிப்பு செய்வதில் சாமர்த்தியசாலிகளான கன்னட பிராமணர்கள். காரசாரமாக ஒருவேளை சாப்பிட ராமோஜி முடிவு செய்தால் அவர்களுக்கு விடுமுறை கொடுத்து, கூடவே நிழல் போல வரும் ரங்கீலாவின் ஒரிய குசினிக்காரர்களை இரண்டு கப்பல்களின் வீரர்களுக்கும் சேர்த்துச் சமைக்கச் சொல்வது வழக்கம்.

அதுவும் கமகமவென்று மணமும் காரமுமாக கோலா உருண்டை, தம் பிரியாணி, கடல்பாசி களி என்று விதவிதமாகச் சமைத்து அசர வைக்கக் கூடிய அந்த சமையல் அணியினரில் பலரும் அடிமைகளாக இரண்டு வருடம் முன்னால் கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள்.

கனோஜி ஆங்கரே மீட்ட அவர்கள் ஒரியாவுக்குத் திரும்பாமல் மராட்டா ராணுவத்தில் நிரந்தரமான சமையல்காரர்கள் ஆகி விட்டிருந்தார்கள்.

ராமோஜி விட்டோபாவைப் பார்த்து சிரித்தான்.

“என்ன ஆங்கரே பாவு?” ஆதரவாகக் கேட்டார் அருகே நின்றிருந்த விட்டோபா.

“இப்படி நாக்கு ருசிக்கு நம்மை வளைச்சுப் போடறாங்களே உங்க சமையல்காரங்க.. முகலாயர் அனுப்பிச்சவங்க இல்லையே?”

ராமோஜி சொல்லி விட்டுப் புன்னகைத்தாலும் விட்டோபா மனதில் சமையல்காரர்களுக்கான சமீபத்திய ஒற்றாய்வு நடத்தாதது நினைவு வந்தது. ராமோஜி சொன்னால் வேடிக்கையிலும் விநோதம் இருக்கும், விநோதத்திலும் வேடிக்கை உள்ளூர நுழைந்திருக்கும்.

தூரதரிசினியை திரும்பவும் எடுத்து கண்ணில் வைத்துப் பார்த்த ராமோஜி விட்டோபாவிடம் சொன்னான் –

“உதவி கேட்கிறாங்க.. அமிட் தொடர்ந்து சிவப்பு நிறத்திலே வருது..“

“ஆமா எனக்கு மொண்ணையா தெரியுது” என்றார் விட்டோபா.

“ஒரிய சமையல் சாப்பிட்டு சாப்பிட்டு உங்க கண்ணு மங்கிட்டு வருது விட்டோபாஜி..”

விட்டோபா மடித்து அன்போடு கொடுத்த வெற்றிலை பீடாவை மென்றபடி, ஆட்டத்துக்கு உடுப்பு அணிஞ்சுக்கலாமா என்றான் ராமோஜி.

தட்டுகளையும் பாத்திரங்களையும் எடுத்துப்போக ரங்கீலா சமையல் குழுவில் அனுப்பி வைத்தவர்கள் எங்கே என்று விட்டோபா தேடியபடி நூலேணிக்குக் காத்திருந்தார். அவர்கள் வந்தால் இன்னொரு தடவை நூலேணியைக் கூப்பிட வேண்டியதில்லை.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் இரண்டு சாதாரண நிகழ்ச்சிகள் நடந்தன –

விஜயசந்திரிகாவிலும் ரங்கீலாவிலும் விளக்குகள் பெரும்பாலும் அணைக்கப்பட்டன. இங்கிலாந்து கப்பல்களுக்கே உரிய யூனியன் ஜாக் கொடிகள் ஒளிவட்டத்தில் அசைவதாக ஏற்றப்பட்டன. ராமோஜி முதல் புதியதாகச் சேர்ந்த சமுத்திர சேனை வீரன் வரை ஆங்கிலேய வணிகக் கப்பல் பயணிகளின் உடுப்பு அணிந்து நின்றார்கள். ரங்கீலாவிலும் அதே படி தான். நிலவு வெளிச்சத்தில் குளித்து நகர்ந்தன ராமோஜியின் கப்பல்கள்.

”விட்டோபா, உங்களைப் பார்த்தால் பாதிரியார் வேஷம் கட்டிய மாதிரி இருக்கு” என்று பலமாக நகைத்தான் ராமோஜி. அந்த உடுப்புகள் போன வாரம் தான் தைத்து வந்தவை. உடுத்துவது முதல் முறையாக இப்போது தான்.

இங்கிலீஷ் கடலோட்டத்துக்குp பலகீனமான காலம் இப்போது நடப்பது. இங்கிலீஷ்காரக் கப்பல் பயணிகள் போல் உடுத்து, கப்பல் கொடியும் விளக்குகளும் அதே ரீதியில் இருந்தால். மோதிப் பார்க்கலாமே, ஜெயித்து விடலாம் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்திருப்பார்கள், வருவது கடல் கொள்ளைக்காரர்கள் என்றால்.

ஒரு அமிட் கூட பதிலுக்குக் கொளுத்தி சமிக்ஞை அனுப்பவில்லை ராமோஜி. பதில் சொல்லாமல் வேட்டை வைத்து சங்கேதம் தராமல் சும்மா இருப்பதைப் பயத்தினால் நிலைகுலைந்து போனதாக நினைத்து இன்னும் மெத்தனமாக இருக்கட்டும் அந்தக் கப்பலில் வந்தவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும்.

அந்த கப்பலுக்குள் ராமோஜி போவதை விட இந்தக் கப்பலில் அவர்களை ஏற வைத்துச் சுற்றி வளைப்பது ராமோஜியின் தந்திரம். மிகப் பெரிய எலிப்பொறி விஜயசந்திரிகா கப்பல். கடல் எலிகளே, வாருங்கள், ராமோஜி காத்திருக்கிறான். .

எதிரே மெல்ல மிதந்து கொண்டிருக்கும் கப்பலின் பெயரை வாசித்தான் ராமோஜி. தமிழில் எழுதியிருந்தது அது – வண்ணமயில்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன