ராமோஜியம் – ராமோஜி ஆங்கரே 1698 – தமிழ்ப் பெயரோடு ஒரு கப்பல் – வண்ண மயில்

ராமோஜியின் பத்து வருடம் கடற்படை வாழ்க்கையில் தமிழில் பெயர் வைத்த கப்பலை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறான். அந்த மொழியைப் பேசுகிற மற்ற பிரதேசங்கள் கடல் கடந்து இருக்கும் என்று படித்ததெல்லாம் உண்மைதான் போல.

வண்ண மயிலுக்கு கிடைமட்டமாக அகலவாட்டில் விஜயசந்திரிகா நெருங்கியது. ஓ என்று ஆரவாரம் கேட்டது. ராமோஜியின் கப்பல்கள் அமைதியாக கடல் பரப்பில் அசைந்து நின்றன. வண்ண மயில் கப்பல் மேல் தளத்தில் நீள கால்சராயும், அரபு கம்மீஸும் அணிந்த உருவங்கள் அவசரமாக நூலேணி இறக்கிக் கொண்டிருந்தன. படகை இறக்காமல் எப்படி இந்த எலிகள் விஜயசந்திரிகாவுக்கு வந்து சேரும் என்று ராமோஜி சுவாரசியமாகப் பார்த்திருக்க, அந்த எலிகள் நூலேணியில் இருந்து கடலில் சாடி விஜயசந்திரிகாவை நோக்கி நீந்தி வந்தன.

“கடல் பழகியவர்களாம். படகு கூட வேண்டாமாம். நீந்தியே எங்கும் திரிவார்களாம்…வலிமை காட்டி நம்மைப் பயப்படுத்துகிறார்களாம். முட்டாள்கள்.”

ராமோஜி பலமாகச் சிரித்தான்.

”இப்போ பயணிக் கப்பல்னு அடையாளம் சொல்ற சமிக்ஞையும் தொடர்ந்து சமாதான சமிக்ஞையும் வாசிக்கணும்.. படகும், நூலேணியும் இறக்கலாம்.. அந்தக் கப்பலுக்கு என்னோட ரெண்டு பேர் வரணும்.. நான் புறப்பட்டாச்சு. விட்டோபா இங்கேயே இருக்கலாம்”.

நொடியில் போர்த் தந்திரதைச் சற்றே மாற்றிவிட்டிருந்தான் ராமோஜி. அவர்கள் இங்கே வரட்டும். அவன் வண்ண மயிலுக்குப் போகிறான். அவன் ஊகித்தது சரியென்றால், அங்கே இப்போது பாதுகாப்பு பெயருக்குத்தான் இருக்கும். கப்பலைப் பிடித்தெடுக்க நல்ல சந்தர்ப்பம்.

கனோஜி ஆங்கரேயின் சமுத்திர யுத்த வழிமுறையில் இப்படி வினாடியில் தந்திரம் மாற்றுவதும், மறைந்து தாக்குதலும், போருக்கான நேரமில்லாத நடு இரவிலும், அதிகாலையிலும் படை குவித்து, உறங்கும்போது உயிர் நீக்கப் பண்ணுவதும் அடக்கம்.

ராமோஜி பயின்று வந்த கடற்போர்க் கலாசாலை இந்த அரபிக்கடல்

விஜயசந்திரிகா, நூல் ஏணி இறக்குவதாகவும், சமாதானத்தை விரும்புவதாகவும் பெரும் சத்தமாகத் தம்பூரும் எக்காளமும் முழக்கியது.

தண்ணீரில் இருந்த எலிகள் ஓவென்று கூச்சலிட்டன. வண்ண மயிலின் கொம்மையில் இருந்து வெளிப்பட்ட மற்ற ஓரிரு கொள்ளைக்காரர்களும் குதித்து நீந்தி அவர்களோடு கடல் பரப்பில் சேர்ந்து கொண்டார்கள். அந்தக் கூட்டம் விஜயசந்திரிகா கப்பலை நோக்கி நீந்தத் தொடங்கியது.

இருட்டை விதைத்து ராமோஜியின் அனுபவம் மிக்க கடல்வீரன் ஒருவன் படகில் அலைகளோடு மிதந்து, இரும்புக் கொண்டி ஒன்றைப் படகில் இருந்தபடியே வண்ண மயிலின் இருட்டுப் பக்கமான இடந்தலையில் ஆழப் பதித்து ஊன்றினான். அதில் இறுகக் கட்டிய கடினமான நூல் பாலத்தை படகின் முகப்புக் கட்டையோடு வலிந்து கட்டினான் அவன்.

படகிலிருந்து ராமோஜியும் இரண்டு வீரர்களும் அந்த உடனடி நூலேணியில் பற்றி ஏறி, வண்ண மயிலுக்குள் நுழைந்தார்கள்.

கடல் எலிகள் அதே நேரத்தில் வெற்றி முழக்கத்தோடு விஜயசந்திரிகாவில் நுழைய ஒரு வினாடியில் அவர்கள் எல்லாரையும் வேகமும் வலிமையும் கொண்ட மராட்டிய கடற்படை தாக்கி வீழ்த்தியது.

கப்பல் கொட்டடியில் வரிசையாக அமைந்த கொழுக்களில் இரும்புச் சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்ட அவர்கள் இனி ஹர்னாய் துறைமுகத்துக்குக் கொண்டு போகப்பட்டு மராட்டா நீதிசபையில் விசாரிக்கப்படுவார்கள். விரிவான விசாரணையாக அது இருக்கும். கடல் கொள்ளையர்களுக்கான தண்டனைகள் மராட்டா பிரதேசச் சட்டமாக உருவெடுத்து இருக்கின்றன.

இரண்டு ஆங்கிலேய பயணிக் கப்பல்களை சிரமப்படாமல் ஜெயித்து குவியலாக தங்கமும், வெள்ளியும் கவர்ந்துவிட்டு வரலாம் என்ற ஆசை கண்ணை மறைக்க வண்ணமயிலில் இருந்த கிட்டத்தட்ட எல்லா கொள்ளையரும் விஜயசந்திரிகாவுக்குப் போவது ராமோஜி எதிர்பார்த்தது தான். அவர்கள் தவிர வண்ண மயிலில் வேறு யார் உண்டு? தமிழ் பேசுகிறவர்களா அவர்கள்?

அவன் இருட்டுக்குள் வண்ண மயில் கப்பலுக்குள் நுழைந்ததும் மேல் தளத்திலிருந்து படிக்கட்டு கீழே நீளும் வழியில் நடந்தான். நான்கு மெழுகுவர்த்திகள் ஒளியூட்டிய அறை கண்ணில் பட்டது. பயணிக் கப்பல் இது. எத்தனை நாள் கடல்கொள்ளைக்காரர்களின் பிடியில் துன்பப்பட்டார்களோ?

ராமோஜி உள்ளே எட்டிப் பார்த்தான். புன்னகையோடு ஒரு அழகான இளம் பெண், “வருக, உங்களை வண்ணமயில் வரவேற்கிறாள்” என்று கப்பல் அறை வாசலில் நின்று சொன்னாள். அது தமிழில் என்று அவனுக்கு போதமானது.

அந்த வினாடியில் அவனுடைய வலது தோளை ஓங்கிக் கிழித்து ஒரு சுருள்கத்தி சதையில் தைத்து நின்றது. யாரோ ஓடும் சத்தம். ராமோஜி மயங்கிச் சாய்ந்தபோது அந்தப் பெண் அவனைத் தாங்கினாள் என்பதை அவன் உணர, ராமோஜியுடைய நினைவு தப்பியது.

அருஞ்சொற்பொருள்

கொம்மை
bulwarks – sides of the ship above the deck

கொண்டி
cleat – a metal object that you tie a rope round in order to fasten something in place, especially on a ship

இடந்தலை
port – the side of a ship or plane that is on your left when you are looking forwards. The part that is on your right is starboard.

முகப்புக் கட்டை
bowsprit – a long pole that sticks out from the front of a ship

கப்பல் கொட்டடி
brig – a place on a ship where prisoners are kept, or a small prison

கொழு protruding metal bar

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன