காரைக்கால் புவனியின் அற்புத சரித்திரம் 1698
புவனி என்னும் காரைக்கால் பட்டணத்துத் தாசிப்பெண் நான். நிகழும் தமிழ் வெகுதானிய வருடம், ஆவணி எட்டாம் தேதி, கிறிஸ்துநாதர் வருஷமான 1698-இல் எனக்கு பதினெட்டு வயதாகிறது.
நான் மூன்று வருடம் முன், பவ வருடம் தை மாதம் மூன்றாம் நாள் வயதுக்கு வந்தேன். அப்போது, கணிகைத் தொழிலில் ஈடுபட நான் தயார் என்று அறிவிக்க என் தாயார் தாசி ரஞ்சிதம்மாள் எனக்குக் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பொட்டுக் கட்டுதல் என்ற சடங்கு செய்வித்து, என்னைக் கைலாசநாதருக்கே மனைவியாக்கினாள். பொட்டுக் கட்டிக்கொண்டபின் ஜமீன் வாரிசு, மிட்டாதார், ராஜ குடும்பம் என்று அடுத்தடுத்து ஆறு சம்பந்தங்கள் எனக்கு ஏற்பட்டன. ஆனால் எதுவும் நிலைக்கவில்லை. படிப்பறியாத முழு முட்டாள்களான அவர்களோடு உறவை நானே விலக்கிக் கொண்டேன். என் தாயாருக்கு அது பிடிக்கவில்லை என்றாலும், எனக்கான துணை தேடும் விஷயத்தில் அவள் குறுக்கிடவில்லை.
ரஞ்சிதம்மாள் என்ற என் தாயார் எனக்கு ஆங்கிலம் பேசவும், எழுதவும், பிரஞ்சு பேசவும், எழுதவும், பரத நாட்டியம் என்ற சதுர் நடனமும், சங்கீதமும், தமிழ் இலக்கிய இலக்கணங்களும், காப்பியங்களும், கணிதமும், சரித்திரமும், பூகோளமும் கற்பிக்கச் சிறந்த உபாத்தியாயர்களை நியமித்து அவர்கள் வீட்டுக்கே வந்து கல்வி புகட்ட வழி செய்தாள்.
விக்ஞானம் மட்டும் அவள் எவ்வளவோ முயன்றும் எனக்குச் சரிவரக் கற்பிக்கப்படவில்லை. இதன் காரணம் யாதெனில், அந்தப் பாடம் சொல்லித்தர வந்த மாத்யூ தரக்கன் என்ற மலையாளி உபாத்தியாயர் என் தாய் ரஞ்சிதம்மாளோடு நெருங்கிய சிநேகிதம் கொண்டு அவளுக்கு கர்ப்ப தானமும் நல்கி, ஊரை விட்டு பிரான்சுக்கு, ஒரு இருட்டு நேரத்தில் சவாரி மேற்கொண்டு விட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கலவரமடைந்தாள் என் தாய் ரஞ்சிதம்மாள். ”கலவரமடையத் தேவை இல்லை. நான் விக்ஞானம் படிக்காவிட்டால் ஒன்றும் தாழ்வில்லை” என்று அவளிடம் சமாதானம் சொன்னேன். எனினும் அவள் கவலைப்பட்டது அவளுடைய கர்ப்பம் குறித்து என்பதால், ரஞ்சிதம்மாளுக்கு, கர்ப்பக் கலைப்பு பற்றி எடுத்துரைத்து அதை நடத்தித்தர அவளுடைய தோழிப்பெண் ஒருத்தி வழிவகை செய்தாள். ஆனால் அது முதலுக்கே மோசமாக முடிந்து என் தாயார் ரஞ்சிதம்மாள் இறைவனடி சேர்ந்தாள். இது நடந்து போன ஈஸ்வர வருடம் வைகாசி எட்டாம் தேதி சம்பவித்த ஒன்று. அப்போது அவளுக்கு முப்பத்தெட்டு வயது. அவளுடைய காதலனும் என் விக்ஞான உபாத்தியாயருமான தரக்கனின் வயது தெரியவில்லை.
என் தாயாருடைய மறைவுக்குப் பிறகு எனக்குப் பாத்தியமாக அவளுடைய சொந்த ஆர்ஜிதமான சொத்துக்கள் எதுவும் இல்லை என்று தெரிந்து கொண்டேன். அவள் தன் உழைப்பாலும், முயற்சியாலும் காரைக்கால் பெருமாள் கோவில் தெருவில் இரண்டு மாடி காரைக் கட்டிட வீடு, காரைக்காலுக்கு அடுத்த நல்லழுந்தூர் கிராமத்தில் ஓட்டு வீடு, நெடுங்காடு கிராமத்தில் ஐந்து வேலி நஞ்சை, நெரவி கிராமத்தில் ஏழு வேலி நஞ்சை, போலகம் கிராமத்தில் பத்து வேலி புஞ்சை, நாலு பெரிய தோட்டம், கிணறுகள் என்று சம்பாதித்திருந்தாலும் அவை எதுவும் என் தாயாரின் பெயரில் இல்லை. என் தாயாரின் இளைய சகோதரியும், என் சித்தியுமான தாசி புஷ்பலதை என்ற பெயருள்ள பெண்மணி அவற்றைக் கையகப்படுத்திக் கைவிரித்து விட்டாள். என் தாயார் ரஞ்சிதம்மாளுடைய நூறு பவுன் நகைகளும் அவள் காலமான பிறகு எனக்குக் கிட்டாமல் போய்விட்டன.
மாரியம்மன் கோவில் பூசாரிக்கு எதையோ காட்டி மயக்கி அவனைக் கைக்குள் போட்டுக்கொண்டு எனக்கு அந்திச் சாத்தான் என்ற குறளிப் பிசாசு பிடித்திருப்பதாகப் பொய்யைப் பரப்பிவிட்டாள் என் சித்தி. எனக்குச் சரியாக சோறிடாமலும், என் சிநேகிதிகள் யாரையும் என்னைச் சந்திக்க விடாமலும், கோவிலுக்குப் போகவும் அனுமதிக்காமலும் என்னைப் பாடாகப் படுத்தினாள் மேற்படி புஷ்பலதை.
மூத்திரம் போக ஒரு நாளைக்கு மூன்று தடவையும், மலம் கழிக்க ஒரு நாளில் ஒரே தடவையும் பயன்படுத்தலாம் என்று விதித்து கக்கூசைப் பூட்டி சாவி எடுத்து வைத்துக் கொண்ட துராத்மா அவள். எனக்குக் கல்வி போதிக்க என்னைத் தேடி வந்த ஆசிரியர்களையும் அவமானப்படுத்தி அனுப்பினாள் அந்த ராட்சசி.
அந்த நேரத்தில் தான் காரைக்கால் கைலாசநாத ஈஸ்வரர் அருளால் எனக்குச் சில சித்து வேலைகள் படிந்து வந்தன. சில நேரம் ஆழ்ந்து கவனித்துப் பார்த்தாலே அந்தச் செயல் நிகழ்ந்தது தெரிய வரும். மற்றும் சில நேரம் வெள்ளிடை மலையாக அவை புலப்படும். மற்ற சில சமயங்களில் திடீரென்று கவனத்தைக் கவரும். அவையாவன –
சக்கரையை கரிக்கச் செய்தல், உப்பை இனிக்கப் பண்ணுதல், கதவுகளில் கருந்தேளும் செந்தேளும் ஊர்வது போல் தோன்றச் செய்தல், ஜன்னலில் கருஞ்சிலந்தி வலை பின்னுவதாகத் தோன்றச் செய்தல், சாப்பிட்ட உணவை வாய்க்குள் இருந்து அசல் ரூபத்தில் எடுத்தல், ஓவியத்தில் மனிதத் தலையை மிருகத்துக்கும், மிருகத் தலையைப் பறவைக்கும் மாற்றி இடல் இன்ன பிற.
உற்றுநோக்கி, உடம்பில் கொப்புளங்களை உண்டாக்குவது, அத்தருக்குப் பதிலாக சாக்கடை நீரை மேலே தெளித்துக் கொள்ளச் செய்தல் போன்றவற்றை நானே நிகழ்த்தக் கற்றுக்கொண்டேன்.
இந்த சித்திகளைக் கொண்டு அந்த சித்தியை சித்ரவதை செய்வது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக அமைந்து போனது.
Excerpts from my forthcoming novel RAMOJIUM – from Karaikal Bhuvani 1698 chapter